புதியவை

ஞால அமைதி - கவிக்கோ ஞானச்செல்வன்


ஈழத் தமிழ்மண்ணில்
இரக்கமிலாக் காடையர்கள்
பாழடித்துக் கணந்தோறும்
படுகொலைகள் நிகழ்த்துகிறார்!
காஷ்மீர் நிலப்பரப்பில்
குண்டுமழை தீயெரிப்பு
பேஷ்எனத் தூண்டிவிடும்
பின்புலத்தில் பாகிஸ்தான் !
ஆப்கனில் தாலிபான்கள்
அவரழித்(து) ஓர்அரசாங்கம்!
ஆப்புவைத்(து) ஈராக்கை
ஆட்டிவைக்கும் வல்லரசு!
சீனாவில் தைவானில்
சின்னஞ்சிறு நாடுகளில்
நானா திசையெங்கும்
நடைபெறும் கலவரங்கள்!
நிறவெறி ஒருபக்கம்
நீசமதம் ஒருபக்கம்
புறச்சாதி ஒருபக்கம்.
பூசல் பெரும்பூசல்!
கோவில் சிலையுடைத்தல்
குருத்துவ சரச்அழித்தல்
பாபர்மசூதி இடித்தல்
பாவங்கள் பண்ணுகிறார்!
கவிதையினும் கூர்மிகுந்த
கருவியொன்(று) உண்டாமோ?
புவிதனைப் புரட்டிப்போடும்
புரட்சியை நாம்செய்வோம்!
சொல்லேர் உழவர்நாம்
சுகம் இன்பம். தமைவிட்டு
வல்லமையால் அமைதிக்கு
வழிகாட்ட முடியாதா?
தனிமனித விரோதங்கள்
தப்பான பணத்தாசை
கனிகொய்ய ஆசையுற்றுக்
கல்கடித்துப் பல்லுடைதல்!
மனிதாபி மானமெனும்
மகத்துவம் போனதெங்கே?
இனிதான சகோதரத்வம்
எப்படி இழந்தோம்நாம்?
உலகமெலாம் ஒருவீடு
ஒப்பரிய உயிர்களெல்லாம்
கலக புத்தியினால்
காணாமல் போனதாமோ?
கொலைகளவு கற்பழிப்பு
கொடுஞ்செயல்கள் கழுத்தறுப்பு
நிலைபெறுமா இவ்வையம்
நேயமெல்லாம் போனதெங்கே?
அன்பு கனிவுஎன்னும்
அற்புத த்தைப் போதிப்போம்!
பண்பும் ஒழக்கமெனும்
பாதைகளைக் காட்டுவோம்!
எந்திரக் கல்விமுறை
எங்கும் ஒழித்துவிட்டு
மந்திரச்சொல் அன்பு
மனத்தை வளர்த்திடுவோம்!
ஒழுக்கமிலாக் கல்விமுறை
உயிர்வாதை என உணர்ந்தே
இழுக்கமிலா நன்னெறியே
எங்கும் பரப்பிடுவோம்!
பிரபஞ்சப் புதுமையெலாம்
போயொழியும் ஒருநாளில்!
கரவாத அன்பொன்றே
காலமெல்லாம் நிலைத்திருக்கும்!
சாதிகுலம் கல் வியெனும்
தற்பெருமை எலாம்விடுத்து
சாதிக்கப் பிறந்தவர்நாம்
சந்திப்போம் எக்களத்தும்!
பணமுதலை வாக்குவங்கிப்
பகட்டு மினுக்கெல்லாம்
கணமேனும் நில்லாத
ஞானவழி காட்டிடுவோம்!
தர்பார்கள்அதிகாரம்
தாமென்ற ஆணவங்கள்!
துர்ப்புத்தி அகங்காரம்
துகளாகும் வழிகாண்போம்!
ஏழை எளியவர்கள்
இன்னலுறும் பாட்டாளி
மோழை மூடர்களும்
முன்னேற வழிசெய்வோம்!
மின்வெட்டு பற்றாக்குறை
வேலையின்மை விரக்தியெலாம்
'கன்'சுட்ட பொசுங்கலென
கதற விரட்டிடுவோம்!
ஞாலத் அமைதிக்கே
நாளும் குரல் கொடுப்போம்!
சால சகோதரத்துவம்
தழைக்கப் பாடிடுவோம்! ஏவல்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.