புதியவை

மரத்தடி - ராமசாமி இலந்தை


அந்த மரத்தடி வீற்றிருந்தே நானும்
ஆயிரம் கற்பனை செய்திருப்பேன்
சந்தம் கொடுக்கும் பறவை இசையுடன்
சங்கீதம் பாடிப்பா நெய்திருப்பேன்!
அந்த இலைகளைத் தெய்வத மாகவே
ஆராதித் தேநான் வணங்குகிறேன்
வெந்து போகச்செயும் வெய்யிலைத் தாங்கியே
வீழும் நிழல்தந்து காத்தனால்!
இரட்டை மரமவை ஆலமரம், அங்கே
என்றைக்கும் மோனம் இருந்ததில்லை
முரட்டுப் புயலென்ன தென்றலென்ன வந்து
முத்தம் கொடுக்காமல் சென்றதில்லை! (அந்த....)
ஒளிஇலையா, இலை கிளி உடலா என
உண்மையில் ஐயம் எழுவதுண்டு
கிளி அலகா, இலை செங்கனியா எனும்
கேள்வி மனத்தில் வருவதுண்டு.
தொங்கும் விழுதை இணைத்தொரு ஊஞ்சலாய்த்
தோகையர் தாமெழுந் தாடுகையில்
அங்க எடுப்பின் அசைவுகள் நெஞ்சினை
ஆனந்த மாகப் பிசைந்ததுண்டு.
வீதி வெயில்சுட வேகம் நடந்தவர்
வீற்றிருந் தே இளைப் பாறுகையில்
ஆதி அந்தமிலா ஆண்டவன் அம்சமே
ஆலமரம் என்றே கூறிடுவர் (அந்த...)
ஆண்டவன் கோயிலில் உற்சவம் போலவே
ஆட்டபாட்டம் மேளதாளத்துடன்
ஆண்டுக்கிருமுறை தேசக் கொடியினை
அம்மர நீழலில் ஏற்ற்¢டுவோம்!
பிள்ளை பெறுகையில் தான்மரித்த ஒரு
பெண்ணின் நினைவாய்ச் சுமைதாங்கி
தள்ளாடிப் பாரம் சுமப்போர் அதன்மேலே
சற்றே இளைப்பாற வைத்திடுவர்.
பக்கத்தே ஊருணித் தண்ணீர் தடவியே
பையத் தவழ்ந்திடும் காற்றுவரும்
தெக்கத்திப் புஞ்சைக் கிணற்றில் கமலையின்
சிந்திசை காதுக்குள் நாற்றுநடும் (அந்த...)
மேய்ச்சல் கறவைகள் மெல்லக்கண் மூடியே
மீண்டும் உணவை அசைபோடும்
தாய்ப்பசு கன்றை நினைக்க வழியும் பால்
தன்னிலே ஈரப் பசைகூடும்
அந்த மரத்தடி சிந்தை நினைத்திட
ஆனந்தம் இன்னும் வருகிறது
எந்தப் புலம்பெயர்ந் தேகினும் நெஞ்சுளே
இன்னும் இளமை தெரிகிறது. (அந்த...)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.