புதியவை

காலாயிரம் வருடத்து காதல் - கவிஞர் அஸ்மின்


நேற்று
அந்தி சாயும் நேரம்
கவலைகளை தொலைத்துவிட்டு வருவோமென
கவிதையோடு மனம் கோத்தபடி
காலாற நடந்து போனேன்
கால் நூற்றாண்டை
கால் நடையில் கடந்து மெரீனாவில்..
நானும் கவிதையும்
கடல் அலைகளை ரசித்து
தொலைந்து கிடந்த கணத்தில்
திறந்த கிடந்த காலணிக்குள்
வீசா
டிக்கட்
பாதுகாப்புக் கெடுபடி
கடலுக்குள் கவிழ்ந்துவிடுமோ என்ற பயம்
ஏதுமின்றி
திருட்டுத்தனமாய் ஏறி உட்கார்ந்து கொண்டன
மணல்துகள்கள்.
இன்று அதிகாலை
இலங்கை வந்து சேர்ந்தபோது
யாரும் அறியாதவாறு
நான் நடந்து சென்ற பாதையில்
சத்தம்போடாமல் இறங்கிக்கொண்டன அவைகள்.
நான்
கண்டும் காணாமல் விட்டுவிட்டேன்
காலாயிரம் வருடங்கள்
கடல்தாண்டி
காத்துக்கிடந்த
நான்காயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு
காதலர்களும்
சேர்ந்து வாழட்டுமே..
வாழ்க காதலர்களே..!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.