புதியவை

அன்பு மாணவர்களுக்கு, நலம் கூறி நலம் விழைகிறேன் - அமுதா பொற்கொடி


வகுப்பறை என்ற கருவறையில்-உமை
பத்துத் திங்கள் சுமந்தவள் நான்.....
அரிச்சுவடி கல்வியுடன்
பாசமும் பண்பும் பிசைந்து ஊட்டி
எம் பாசறையில் வளர்த்த அன்னை நான்.....
அரும்பி விட்ட வயதாலே
விரும்பி நீர் செய்த குறும்புகளை
கரும்பாய் நான் சுவைத்து
கடிந்தது போல் நடித்தவள் நான்......
ஆசானை வென்ற அர்ச்சுனராய்
ஆற்றலில் ஆளுமை கொண்ட போது
ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தவள் நான்.....
நாடகம் நாட்டியம் ஓவியம் என
நர்த்தனம் நீர் செய்த போது
நெகிழ்ச்சியில் திளைத்த
கட்டைவிரல் கோரா ஆச்சாரியார் நான்......
பள்ளிப் படிப்பு முடிந்தது
எதிர்காலம் உம்மை அழைத்தது
சிறகடித்துப் பறக்கத் துடித்த
வேடந்தாங்கல் பறவைகள் போல்
விடை பெற்று நீர் சென்றீர்
விடை கொடாமல் எனக்குள் நான்......
தான் சுமந்த பிள்ளைகளை
எங்கோ தவற விட்டது போல்
பரிதவிக்கும் உணர்வு எனக்குள்
பிரசவித்த அடி வயிற்றை
தடவித் தடவிப் பார்க்கிறேன்....
எங்கே நீர் சென்றீர்கள்
எந்த நிலையில் உள்ளீர்கள்
அறிந்து கொள்ள அடிமனதில் ஆசை
தேடுகிறேன் உம் விலாசத்தை....
விண்ணில் பறந்த எம் விழுதுகளே
எம் பண்ணில் உறைந்த ராகங்களே
கண்ணில் எம் விழித்திரைகள்
மாறிய உம் உருவத்தை
கற்பனையில் கண்டு களிக்கிறது
காயசண்டிகை பசியைப் போல்
ஆவல் என்னுள் எழுகிறது....
உம் நினைவுகளை நெஞ்சில் சுமந்து
காத்திருக்கிறேன் உம் வருகைக்காய்....
மடல் கண்டால் விடை தருவீர்......

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.