புதியவை

மரணத்துடன் ஒரு பயணம் - கே.எஸ். செண்பகவள்ளி


இன்றிருப்போர் நாளை இல்லை
விழித்திருப்போர் உயிர்ப்பதில்லை
வாழ்ந்திருப்போர் நிலைப்பதில்லை
வாழ்க்கையின் நியதி!
இன்றைய விடியல்
விடியாது போயின்
நாளைய உலகம் என்னை
இழந்து விடும்;
இயற்கையின் நியதி!
நாள் என் செயும்; கோள் என் செயும்
எனக்கான நேரம் நெருங்கும் போது
விதிதான் என் செயும்?
என் ஆயுள் காலம் முடியுமானால்
தடுப்பதற்கு நான் சாவித்திரியுமல்ல
தன்னடக்கத்துடன் ஏற்றுக் கொள்வேன்
தன்னையே அடக்கம் செய்ய!
நாளைய பொழுது
என் சுவாசம் நிற்குமானால்
உடலை விட்டு உயிர்
மரிக்குமானால்
நடப்பதென்ன…???
சற்று முன் நோக்கிப் பார்க்கிறேன்!
என்னை நேசிப்பவர்கள் துடிப்பார்கள்;
வெறுப்பவர்கள் இரசிப்பார்கள்!!!
அனுதாபச் செய்திகளும்
கண்ணீர் அஞ்சலிக் கவிதைகளும்
என் முகநூலை நிறைக்கும்
இனி என்னால் பார்க்க இயலாது
என்பதை அறிந்தும்!!!!
நெருங்கிப் பழகாத நட்புகளும்
பல புதிய கதைகளை
என்னோடு இணைத்து பேசும்
பல கோணங்களை உருவாக்கும்!
என்னை இழக்கும் நட்புகள்
என் இழைப்பை உணரும்
இன்று உணரா உறவுகள்
நாளை பதறும்!!!!
இப்புவியில் நான் விட்டுச் செல்லும்
சொத்துகள் ; பொக்கிசங்கள்
பொருள் செல்வங்கள் அல்ல;
எனது படைப்புகள்…!
நாளை நான் இல்லாது போயிடினும்
என் படைப்புகளால் வாழ்வேன்
அல்லால் யாரேனும்
ஒருவர் நினைவிலேனும்
வாழ்வேன்…!
மரணிக்கும் விநாடிகளுக்கு
என்றுமே நான் அஞ்சியதில்லை
மரணத்தை எதிர்நோக்கும்
மாண்பிலிருந்தும் விலகியதில்லை!
நாளைய பொழுது விடியாது
போயிடின் ; இன்னொரு
விடியலை நோக்கிப்
பயணிப்பேன்!
அது; மறு ஜென்மமோ?
ஜென்மமற்று போவேனோ?
அன்றி தொலை வானத்தில்
விடிவெள்ளியாகவோ?
ஏதேனும் ஒரு விடியலில்
என்னை தொலைத்திருப்பேன்!
மனித வாழ்க்கைச் சுழற்சியில்
மரண விளிம்பு; அடுத்த
அத்தியாயத்திற்கான அடித்தளம்!
மரணத்தின் இறுதி பிடியில்
துடித்திருக்கும் உயிர்;
மரணத்தோடு பயணிக்கையில்
பிரியாது; வாழ்ந்திருக்கும்!!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.