புதியவை

பிரதமர் வேட்பாளர், தேசியப் பட்டியல், சு.க வேட்புமனு! மஹிந்தவுக்கு எதுவுமே வழங்க முடியாது!- ஜனாதிபதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக அறிவித்துள்ளார்.
இந்த மூன்று அம்சங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்கள் குறித்தே சுதந்திரக் கட்சி நியமித்துள்ள அறுவரடங்கிய குழுவுடன் பேசப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மண்டேலாக்களையே உருவாக்க விரும்புகிறது. முகாபேக்களை அல்ல. எமது நாடு முகாபே ஆட்சியிலிருந்து மீண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளை முன்னெடுப்பதற்காகவே அடுத்த தேர்லில் சுதந்திரக் கட்சி போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மைத்திரி பாலவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த குழு அமைக்கப்பட்டது குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்,
ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்த போது குழுவொன்றை அமைப்பது குறித்தும் மஹிந்த - மைத்திரி சந்திப்பை விட்ட இடத்திலிருந்து தொடர்வது குறித்தும் பேசப்பட்டது.
ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் பேசி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து பேச்சுவார்த்தையை தொடர ஜனாதிபதி தயாராக இருக்கிறார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்குமாறு கோரப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதோடு தேசிய பட்டியல் எம்.பி. பதவி வழங்கும் கோரிக்கைக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு வேட்பு மனு வழங்கும் கோரிக்கையையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார்.
இந்த நிலைப்பாட்டினடிப்படையிலே அடுத்த கட்ட பேச்சுக்களைத் தொடர ஜனாதிபதி முன்வந்துள்ளார். இது குறித்து 6 பேரடங்கிய குழுவிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நல்லாட்சியை விரும்பும் எவரும் எம்முடன் இணைந்து செயற்பட முடியும். நாம் முன்னோக்கிச் சென்ற பயணத்தை பின்நோக்கிச் செல்ல மாட்டோம். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே மஹிந்தவை அரசிலிருந்து வெளியேறியிருந்தோம்.
எவருடனும் இணைந்து செயற்பட ஜனாதிபதி தயாராக இருக்கிறார். ஆனால் மஹிந்த ராஜபக்ச குறித்த நிலைப்பாட்டில் இருந்தே அடுத்த கட்ட பேச்சுக்கள் தொடரும்.
மஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிப்பது குறித்து கட்சியே முடிவு செய்யும். ஆனால் நாட்டுக்கு பாதகமான எந்த முடிவையும் சுதந்திரக் கட்சி எடுக்காது.
மண்டேலாக்களை உருவாக்குவதே எமது கட்சியின் நோக்கமாகும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை டளஸ் அலகப்பெரும விமர்சித்துள்ளார். இவர்களுக்கு அதிகாரத்தில் இருக்கும் வரை நல்லவராக இருப்பவர்கள் அதிகாரத்தில் இல்லாத போது கெட்டவர்களாகி விடுகின்றனர்.
அடுத்த தடவை எப்படியாவது எம்.பியாக வர வேண்டும் என்பதே இவரின் நோக்கமாகும் என்றார்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.