புதியவை

" அருள் சொரியும் அற்புத மாதம்" - மதியன்பன்


அடிவானிற் பிறை தெரிய அகமெல்லாம் நகை விரிய
அல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் - அதை
அகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய்
விடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து
வினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் - நம்
வினை யென்னி மனமுருகி அழுவோம்.
நோன்பிருக்கும் காலத்தில் நோவினைகள் செய்யாது
நொந்தவர்க்கு உதவிகளைச் செய்வோம் - நல்ல
நோக்கமிதால் இறையருளைக் கொய்வோம்.
வான் மறையை ஓதுவதை வல்லோன் துதி பாடுவதை
வழமையென தனதாக்கிக் கொள்வோம். - உயர்
வளமான சொர்க்கத்தை வெல்வோம்.
இரக்கின்ற மாந்தருக்கு இருப்பதனை ஈந்தவரின்
இதயத்தை அன்பாலே வெல்வோம். - வரும்
இடர்களினை அதனாலே கொல்வோம்.
சுரக்கின்ற இறையருளைச் சுமந்து வரும் ரமளானை
சுமையென்று எண்ணாது ஏற்போம். - நம்
சுற்றத்தை அன்போடு சேர்ப்போம்.
பகல்நேரம் பசித்திருந்து படைத்தவனைப் பணிந்திருந்து
பக்தியுடன் நோன்பதனை நோற்போம். – இன
பந்துக்கள் உறவுதனைச் சேர்ப்போம்.
நிகரில்லா இறையவனை நின்று நிதம் வணங்குவதை
நிலையாக வாழ்க்கையிலே கொள்வோம். - பின்னர்
நிறைவான சொர்க்கத்தை வெல்வோம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.