புதியவை

பொய்யில் எழுப்பிய அரசியல்


editorial அரசாங்கத்திடம் இணக்கமாகப் பேசி அபிவிருத்திக்கெனச் சொல்லப்பட்ட பெருந்தொகைப் பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் இரகசியமாக வாங்கியது குறித்து பெரும் களேபரம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனே இதனை அம்பலப்படுத்தியிருந்தார். “வடக்கின் சில பா.உ க்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பெருந்தொகை நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இது கூட்டமைப்பை உடைக்கும் சதி நோக்கமுடையது” என்று ஜனாதிபதியிடம் முதலமைச்சர் முறையீடு செய்ததாக முதலில் செய்தி வெளியானது.
மாவை சேனாதிராஜா உடனடியாகவே அதை மறுத்து, “அப்படி நடந்திருக்க மாட்டாது. இது பற்றி முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறோம்” என்று முதலமைச்சரைச் சமாளித்துவிடலாம் என்று பார்த்தார்.
கூட்டமைப்பு பா.உ க்கள் அரசாங்கத்திடம் நிதி பெற்றிருந்தால் அது பெருந்தவறு என்னும் தொனியிலேயே அவரது முதல் அறிக்கை இருந்தது. நிதி வாங்கிய விவகாரத்தை மறைத்துவிடலாம் என்றே அவர் ஆரம்பத்தில் கருதியதாகத் தெரிந்தது.
முதலமைச்சரைச் சமாளிக்க நடத்திய பேச்சுக்கள் பலிக்கவில்லை. மாகாணசபைக்குப் புறம்பாக தனியாகப் பணத்தை வாங்கியது தவறுதான் என்று அவர் விடாப்பிடியாக நின்றுகொண்டார்.
13-06-2015 அன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன், “எமது தொகுதிகளின் அபிவிருத்திக்காக அரசாங்கத்திடமிருந்து நிதி பெற்றோம். அதற்கு நமக்கு உரிமையிருக்கிறது” என்ற புரட்சிகர அறிவிப்பை வெளியிட்டார்.
அதற்குப் பிறகும், அகிம்சைப்போர் அறிவிப்புப் பாணியில், 19-06-2015 அன்று ஊடகவியலாளர் சந்திப்பில் முழங்கினார் மாவையார். தனது உரத்த குரலுக்கு சோற்றுக்குள் முழுப் பூசணிக்காயை மறைத்துவிடும் சக்தி இருப்பதாக நம்பும் அப்பாவித்தனமும் அதில் இருந்தது.
“சுரேஷ் பிரேமச்சந்திரன் 126 மில்லியன் ரூபாவும் மாவை சேனாதிராஜா 26 மில்லியன் ரூபாவும் அரசிடமிருந்து வாங்கியதாகக் கூறியிருக்கிறார்கள். தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமிருந்து பணம் வாங்கியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுவது பொய்” என்று ஓங்கி அடித்தார் மாவை.
இந்தப் பிரச்சினைக்கு நடுவில் புகுந்து, “எனக்குப் பணம் தரப்படவில்லை” என்று தனது பத்திரிகையின் முன்பக்கத்தில், காசு கிடைக்காதவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சரவணபவன் எம்.பி.
20-06-2015 பத்திரிகை அறிக்கையில், சொந்தத் தேவைக்காக அல்ல, மக்கள் நலத் திட்டங்களுக்காக எமது எம்பிக்கள் தெற்கிடம் பணம் பெற்றுக் கொண்டது உண்மையே என்று தனது “றிவேர்ஸ் ஷொட்”டை அடித்தார் மாவை.
எப்படியோ, தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் கூட்டமைப்பு எம்பிக்களுக்கு பெட்டி பெட்டியாகப் பணம் தரத் தயாராக இருக்கிறார்கள், ஆனால் தீர்வைப் பேசத்தான் தயாரில்லை என்பதிலுள்ள கூட்டுக் களவை மக்கள் புரிந்துகொண்டால் சரி.
கூட்டமைப்பு எம்பிக்களுக்கு பணம் கொடுத்த அரசியல்வாதிகள் மற்றுமொன்றையும் அடித்துச் சொல்லியிருக்கிறார்கள். “நாட்டில் எங்கேனும் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்தால் அது குறித்து ஆதாரத்துடன் அம்பலப்படுத்துங்கள்” என்ற பகிரங்க சவாலே அது!
இரகசிய முகாம்கள் இருப்பதற்குரிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்திருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஏன் இப்போது மௌனமாக இருக்கிறார்கள்?
இது மாதிரியான பொய்யும் புளுகு மூட்டைகளும் இரகசிய வாங்கல்களும் கள்ள உறவுகளுமாக அரசியல் செய்துகொண்டிருப்பவர்கள் மூலமாக நாம் எந்த உரிமைகளைத்தான் இங்கு பெற்றுவிட முடியும்?

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.