புதியவை

புதிரே ஆனார் - கவிக்கோ ஞானச்செல்வன்


வானிலுயர் செங்கதிரோ கொள்கைக் காகும்
வட்டநிலா தண்ணமுதப் பண்பிற்கு காகும்
தேனினுயர் தீஞ்சுவையோ சொல்லிற் காகும்
தென்றலுறும் மென்சுகமோ அன்பிற் காகும்!
கானிலுயர் பெருவளமோ வாய்மைக் காகும்
கருதுமுயர் குன்றமதோ ஒழுக்கிற் காகும்
மானமுயர் ம.பொ.சி. வாழ்வு காட்டும்
வரலாற்று விளக்கங்கள் என்றும் வாழும்!
சானைகள் இவர்போலத் தனியாய் நின்று
சாதித்தார் தமிழ்நாட்டில் பிறிதார் உண்டு?
வேதனைகள் இவர்போல நட்புக் காக
மென்மேலும் உற்றவர்கள் வேறார் உண்டு?
வாதனைகள் இவர்போல நாட்டிற் காக
வந்தணையப் பொறுத்தவர்கள் மாற்றார் உண்டு?
போதனைகள் இவர்போலக் கடைப்பி டித்த
புண்ணியர்கள் தமிழகத்தில் எவரே உண்டு?
சிலம்பாய்ந்த காரணமோ? குறளின் மாட்சித்
திறமுணர்ந்த காரணமோ? கம்பன் பாட்டு
நலம்துய்த்த காரணமோ?சங்கச் சான்றோர்
நற்றமிழின் காரணமோ?சமயச் சார்பு
வலமிகுந்த காரணமோ?வள்ள லாரின்
வண்டமிழின் காரணமோ? திரு.வி. க.வின்
பலம் சேர்ந்த காரணமோ சிலம்புச் செல்வர்
பலருக்கும் புரியாத புதிரே யானார்!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.