புதியவை

நாட்டுப்புறப்பாடல்களில் சமூகம்


நாட்டுப்புறப் பாடல்கள் என்று, எவரால் பிறந்தது என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் பெற்றவை. ஏட்டிலே இடம்பெறாத, எழுத்திலே காணமுடியாத ஆனால் உள்ளத்திலே ஊறிக் கிடக்கும் எத்தனையோ, எண்ணங்களையும், நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் அப்படியே படம்பிடித்துக் காட்டுவனவாக அமைந்தவையே இந்நாட்டுப்புறப் பாடல்கள். இப்பாடல்கள்வழி அறியலாகும் சமூகச் செய்திகள் பற்றி இக்கட்டுரை ஆய்கின்றது.
இன்பதுன்பம்:-
நாட்டுப்புற மக்கள் தாங்கள் சந்திக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளைப் பாடலாக வெளிப்படுத்துகின்றனர். இன்பத்தைப் பிறரிடம் பகிர்ந்தால் இரட்டிப்பாகும். துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகும் என்ற மனவியல் உண்மைகளை அறிந்திருந்தனர். எனவேதான் உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வடிகால்களாக இத்தகைய பாடல்கள் அமைந்துள்ளன. தாய்மார்கள் இந்த அனுபவ உண்மையைக் கண்டறிந்தவர்களாதலால் அவர்கள் பாடும் பாடல்களில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருதலைக் காணலாம்.
பெண்களுக்கு பிறந்தவீட்டுப் பெருமை பேசுவதென்றால் மிக்க மகிழ்ச்சி. தன் குழந்தைக்குச் சிராகத் தன்வீட்டில் இருந்து வந்தப் பொருட்களைப் பட்டியலிட்டுத் தாலாட்டாகப் பாடுகிறாள். இப்பாட்டு பிறந்த வீட்டுப் பெருமையினைப் புகுந்த வீட்டில் உள்ள மனிதர்களுக்குப் புரிய வைக்கும் உத்தியாக விளங்கக் காண்கிறோம்.
உன் அரிய அம்மான்மார்?
என்ன கொண்டு வந்தார்கள்?
கொத்துவிடா நெத்தும்
கோதுபடா மாங்கனியும்
கோடைப் பலாச் சுளையும்
...................
...................
சாதிக் களிப்பாக்கும்
சங்கு வெள்ளைச் சுண்ணாம்பும்
அத்தனையும் கொண்டு
அறியவந்தார் அம்மான்மார்
இப்பாடலால் தாயின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பது தெளிவாகிறது.
சமுதாய ஏற்றத்தாழ்வு:-
சாதிகளின் பெயரால் அன்று முதல் இன்று வரை சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டுதான் உள்ளன. "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதி பாடியது ஏட்டில் நாம் படிப்பதற்கு மட்டும்தான் என்ற நிலை இன்றும் உள்ளது. சாதிமதக் கலவரங்கள் எங்கும் நடந்துகொண்டுதான் உள்ளன. இந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்குக் காதல் திருமணங்கள் துணைபுரிகின்றன. மணம் பற்றிய ஒரு பாடலில்,
கீழ்ச்சாதி என்னாமல்
கிளிமொழியை மாலையிட்டாள்
குறச் சாதி என்னாமல்
கொம்பனையை மாலையிட்டார்
என்ற வரிகள் கலப்புமணம் பற்றி அறிவிக்கின்றது.
உழைப்புறிஞ்சிகள்:-
அன்றாடம் பாடுபடும் ஏழைத் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டி, உண்டு கொழுத்த முதலாளி வர்க்கம் உழைக்கும் தொழிலாளிக்கு உரிய கூலி கொடுக்காமல் அவர்களைக் கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட அல்லாட வைக்கின்றனர். வாய்மூடி மௌனிகளாக விளங்கும் இவர்கள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதைப் புரட்சிக் கவிஞரும் தம்பாடலில் கூறியுள்ளார். அப்பாடல்,
"ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ"
என்ற புரட்சிக் கவியின் பாடல் தொழிலாளர் நிலைக்கு ஆதரவாக எழுந்த புரட்சிப் பாடல்தான்.
மதுவிலக்கு (அ) மது ஒழிப்பு:-
மக்களை மாக்கள் நிலைக்குக் கொண்டுசெல்லும் ஆற்றல் வாய்ந்தது மது. மனிதனின் அறிவை மயக்கி, குறைத்து, அவனின் சிறப்பியல்புகளைக் குலையச் செய்வது. மதுவை உண்டு வந்த சமுதாயமே நம் தமிழ்ச் சமுதாயம். இதனைச் "சிறிய கார் பெறினே எமக்கீயும் மன்னே" என்ற ஒளவையின் பாடல்வழி அக்காலத்தில் பெண்டிரும் மது உண்ணும் பழக்கம் இருந்ததைப் புலப்படுத்துகிறது. வெள்ளையர் நம்நாட்டை ஆண்டபோது கள்ளுக் கடைகள் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
போடையா ஒண்ணரை
பூப்போட்ட கிளாசிலே
என்று கேட்டு வாங்கிக் குடித்ததை இப்பாடல் தெரிவிக்கின்றது. மது உள் சென்றால் மதி கலங்கி விடுகிறது. தீயசெயல் புரிவதற்கு மனதை ஊக்குவிக்கின்றது. குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்போரை அடித்து உதைப்பதும், பொருட்களை உடைப்பதும் நாம் கண்கூடாகப் பார்க்க நேரிடுகிறது. இத்தகைய தாழ்நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்லும் மதுவினை விலக்கத் தடைகள் போடப்பட்டுள்ளன. எனினும் தவறுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. குடிகாரக் கணவனைத் திருத்த ஒருத்தி
மெத்தக் குடியா தீங்க
பித்தம் சிரசி லேறும்
என்று பாடுகிறாள். அவனோ போதையின் உச்சத்தில்
கள்ளு குடிச்சனடி
கண்ணுரெண்டும் சொக்குதடி
தன் வீட்டுக்குள் நுழையத்
தடமே மிரளுதடி
குடியில் தான் தடம்மாறுவது தடமே மிரளுவதாக இவன் கண்களுக்குத் தெரிகிறது. இத்தகைய அவலத்தையும் நாட்டுப்புற பாடல்கள் வழி அறியலாம்.
வரதட்சணைக் கொடுமை:-
சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு நோயாக இன்று வரதட்சணைக் காணப்படுகிறது. மனங்களைப் பார்த்துச் செய்ய வேண்டிய மணங்கள் இன்று பணத்தினால்தான் நிட்சயிக்கப்படுகின்றன. வயதுவந்து வெகுநாளாகியும் வரதட்சணை கொடுக்க இயலா காரணத்தால் பலர் முதிர் கன்னிகளாகவே காலத்தைக் கழிக்க வேண்டியுள்ளது. இவர்களின் மனத்துயரத்தை வெளிப்படுத்தும் புதுக்கவிதையொன்று,
எங்களை
மணப்பதற்கு
இராமன் வரவேண்டாம்
தூக்கிச் செல்ல
இராவணனாவது வரட்டும்!
என்ற கவிதை இவர்களின் அவல நிலையை விளக்குகிறது. சிதனம் என்பது பெண்வீட்டாரால் விரும்பிக் கொடுக்கப்படுவது. ஆனால் இன்று இம்முறை கட்டாயமாக்கப்பட்டுப் பெண் வீட்டாரைக் கசக்கிப் பிழிந்து கடனாளியாக்கிவிடும் நிலையைத் தற்போது காணமுடிகிறது. நாட்டுப்புறப்பாடல் ஒன்று பெண்வீட்டார் கொடுத்த சிதனத்தைப் பட்டியலிடுகிறது.
பட்டி நிறைந்திருக்கும்
பால் மாடு சிதனங்கள்
ஏரி நிறைந்திருக்கும்
எருமை மாடு சிதனங்கள்
..............
..............
ஒக்காந்து மோர்கடையும்
முக்காலி பொன்னாலே
சாய்ந்து மோர்கடையும்
சாய்மணையும் பொன்னாலே
என்ற பாடல் பெண்வீட்டாரின் செல்வச் செழிப்பை விளக்குவதாக அமைந்துள்ளது. ஆனால் ஏழைப் பெண்ணொருத்தி வரதட்சணை வாங்கி வர இயலாத நிலையில் மாமனாரின் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறாள். ஏழையாயிற்றே அதனால் மிகவும் பணிவாக அவரிடம்,
ஏழை பெத்த பொண்ணு நானு
ஏத்துக் கொங்க மாமனாரே
என்று வேண்டுகிறாள். இப்பாடல்கள் வரதட்சணைக் கொடுமையினால் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்குத் தெரிவிப்பவையாக அமைந்துள்ளன.
குடும்பப் பிரச்சினைகள்:-
"நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்" என்பது ஆன்றோர் வாக்கு. நல்ல குடும்பங்கள் நிறைந்தால்தான் நல்ல சமுதாயம் உருவாக முடியும். குடும்பத்திலேயே பிரச்சினைகள் ஏற்பட்டால் விளைவுகள் மோசமாகவே இருக்கும். இதனையே "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்ற பழமொழி விளக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி, அன்பு நிறைந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாகப் பெண்களிடத்தில் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நிதானம் போன்ற பண்புகள் நிறைந்திருக்க வேண்டும். இல்லையேல் குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட்டுப் பிளவுபடும் அபாயம் ஏற்படும். மாமியார் மருமகள் பிரச்சினை இல்லாத வீடுகளே இல்லையெனலாம். தாய்தந்தையரைப் பிரிந்து தன் வீட்டிற்கு வரும் பெண்ணைத் தன்மகளாகக் கருதும் மனப்பான்மை மாமியாருக்கும், மாமியார் மாமனாரைத் தன் பெற்றோர்களாக என்னும் மனம் மருமகளுக்கும் அமைந்துவிட்டால் இத்தகு பிரச்சனைக்கு இடமே இராது. நாட்டுப்புற பாடலில் பெண்ணொருத்தி தன் மாமியாரைப் பற்றிக் கூறும் போது
பூமியும் நல்ல பூமி
புண்ணியரும் நல்லவர்தான்
புண்ணியரைப் பெத்தெடுத்த
பெருங்குரங்கே தொந்தரவு
என்று தன் மாமியாரை வெறுப்பின் உச்சமாக குரங்காகக் கூறுகிறாள்.
வேலையில்லாத் திண்டாட்டாம்:-
கட்டுக்கடங்காமல் பெருகி வரும் மக்கள் தொகையில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதென்பது முயற்கொம்பே. நமது குடியரசுத் தலைவர் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களும் பதவியேற்றவுடன் தாம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாக வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளதாகத் தெரிவித்து உள்ளார். போட்டி நிறைந்த உலகமாகிவிட்ட இக்காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டமும் போட்டிப் போட்டுக்கொண்டு வளருகிறது.
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்ற பெரியோரின் வாக்கில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு என்ற சொற்களும் இடம் பெற வேண்டியது அவசியமாகிவிட்டது. இதை அனைவரும் உணர வேண்டும். ஒருவன் பல்வேறு தொழில்களைச் செய்து பார்த்தான். எதனாலும் அவனுக்கு வாழ்வு கிட்டவில்லை.
வயக்காட்டை உழுது பார்த்தேன்
பெண்டுகளை மேய்ச்சுப் பார்த்தேன்
பிழைப்பு ஒன்னும் நடக்கலியே
என்று வருந்திப் பாடும் இளைஞனின் பாடல் இதனை உணர்த்தக் காணலாம்.
நாட்டுப்புறப் பாடல்கள் சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நமக்குத் தெரிவிக்கும் கருத்துப் பெட்டகமாகத் திகழ்கின்றன. இப்பாடல்கள் சமுதாயத்தின் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாய் அமைகின்றன.
நன்றி: வேர்களைத் தேடி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.