புதியவை

காலத்தை வென்றவன் - குடத்தனையூர் சிவா


கம்பனும் வியக்கும் கவி தந்தவன்
அம்பெனும் கவிகொண்டு வலம் வந்தவன்
தந்திரம் கொண்ட மாய உலகை -இவன்
சுந்தரம் திகழும் தமிழால் வென்றவன்..

தரித்திர வாழ்வையும் தமிழால் கொன்று-புதுச்
சரித்திரம் படைத்து நின்றவன் -வெறும்
நான்கடியில் நானூறுகள் சொன்னவன்-இவன்
நான் கடியில் வீழாத தமிழ் மன்னவன்..

போதையிலும் கவிபாடும் மேதையன்றோ-இவன்
போதையிலும் போனது தமிழ் பாதையன்றோ!!
அன்னைத்தமிழ் பெற்ற அற்புத யோகமன்றோ!!
என்னை தாலாட்டும் இவன் அதிசய ராகமன்றோ!!

சித்தம் குளிர்ந்து சுத்தமாகும் இவன் பாட்டில்
அர்த்தம் ஆயிரம் தொக்கி நிற்கும்..
விண்ணை முட்டும் இவன் பாட்டில் வீட்டுத்
திண்ணையும் சொக்கி நிற்கும்..

பாரதிக்கும் பெருமைதந்து பார்ப்புகழ நின்றவன்- பார்த்த சாரதிக்கும் தாசனாகி அவனருளை வென்றவன்..
மாசுமறுவற்று நின்று அரசாண்ட கொற்றவன்-இவன்
ஏசுகாவியமும் தந்து தேவகிருபையும் பெற்றவன்..

ஆத்திகம் பேசுவதில் இவனை வெல்ல
நாத்திகன் உலகில் எவனும் இல்லை..
ஆத்திரம் வந்ததாலே ஆயிரம் பாட்டெழுதி
காத்திரமாய் கையில்தரும் முல்லை..

மூச்சுள்ளவரை முத்தமிழ் கொண்டவன்
மூச்சடங்கும் போதும் மூன்றாம் பிறை கண்டவன்..-எம்
மனத்தில் என்றும் நின்று வாழும் அமரன்- இவன்
இடத்தில் எப்போதும் வேறொருவன் அமரான்!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.