புதியவை

வடமிழுக்கும் வண்ணத்தமிழ் -- கலாபூசணம் பாவரசு பதியதளாவ பாறூக்


தமிழுக்கு வடமிழுக்கும் எங்கள் தேரில்
தலையாக வீற்றிருக்கும் என்னை
அமுதுக்கு சுவைசேர்த்து அன்னம் படைத்து
அள்ளித் தருவதிலே பாரி யாகிக்
குமுதத்தின் இதழாய் கரம் விரித்துக்
கொண்டு தரும் குணத்தாலே குடியமர்ந்து
சமுதாயத் தெருவு க்கோர் விளக்காகி
சபையேறும் சரித்திரக்கால் எங்கள் தமிழ்....!

தாய் விழியாம் எங்களது தமிழ் மொழியோ
தரத்திலுயர் கோபுரத்தின் உச்சி யாகும்
வாய் மொழியில் வந்தமர்ந்து இனிக்கும் போது
வார்த்தைகள் தருங்கோடி இன்ப மாகும்
ஆய்ந்தொழுகும் அரசன் புலவர்க் கெல்லாம்
அணிகலனாய் அணைந்து அழகு பார்க்கும்
தேய்ந்தொடும் தெருநிலவின் முன்னே யெங்கள்
தேயாத தமிழ்நிலவு திசை உதிக்கும்....!

அம்மா என்றழைக்கும் குழந்தை வாயில்
அமர்ந்தழகு சொல்லுகின்ற அறிய தமிழ்
சும்மா என்றேதும் சொல்லுங் கூட
சுரமிணைந்து அதுவுமோர் சுகத்தைச் சொல்லும்
சம்பிர தாயச் சடங்குகளை விளித்துமே
சம்மதம் சேர்க்கின்ற சரிதை வெல்லும்
மும்மொழி உறவுக்குள் முகத்தை வைக்கும்
மூத்த தமிழிங்கு முன்னுரை யாகும்....!

எழுத்தாளன் எழுதுகோலில் எழுந் தருளி
ஏற்றங்கள் படைக்கின்ற இன்பத் தமிழ்
அழுத்தங்கள் பலத்தையும் ஆழ மாக்கி
ஆற்றுகின்ற பனிக்குள்ளே அரச மைக்கும்
வாழுகின்ற மனிதனை வையங் கண்டு
வரலாறு தொடர வரை படமாக்கி
விழுந்த சமூகத்தின் விழிகளாய் அமைந்து
வீரத் தமிழோங்கி வெற்றி கொள்ளும்....!

மண்தொட்டு வாழுகின்ற தமிழ்
மணக்கின்ற பூவாகி வாசம் தந்து
பண்தொட்டுப் பாடுகின்ற பாவாய் முழங்கிப்
பல்கலைக்காய் அவையிங்கு பாலம் போடும்
விண்தொட்டு விளையாடும் மதியைப் போன்று
விழிக்குள்ளே அவைவாழ்ந்து விடிவைச் சொல்லும்
கண்பட்டுக் கருகாத கன்னித் தமிழ்
காசினியில் கண்கொண்டு வாழுமையா......!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.