
இலங்கையில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் ராஜபக்சே பிரதமர் வேட்பாளராக களமிறக்கப் படவேண்டும் என்ற கருத்து, ஆதரவுக் கூட்டணியால் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர் களமிறங்கும் சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து அவரது சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சே செய்தியாளர்களிடம் கூறுகையில், "முன்னாள் அதிபர் ராஜபக்சேவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நான் அறிவேன். மக்களும் அவரை மீண்டும் அரசியலுக்கு அழைக்கின்றனர் என்பதும் எமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ராஜபக்சே மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பாக என்னால் ஒரு நிலைப்பாட்டில் கருத்து தெரிவிக்க முடியாது.
மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் அந்த வேலைத்திட்டத்தில் ராஜபக்சே எனக்கும் அழைப்பு விடுத்தால் நான் அந்த காரியத்தில் என்னையும் இணைத்துக் கொள்வேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையிலும் ராஜபக்சே மிகவும் கவனத்துடன் நிலைமைகளை ஆராய்ந்து களத்தில் இறங்க வேண்டும். யாருடைய தனிப்பட்ட நோக்கமும் இதன் பின்னணியில் இருக்குமானால் அது ராஜபக்சேவையே பாதிக்கும் என்பதை அவர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு ஆட்சி எவ்வாறு அமையக் கூடாது என்பதற்கு உலக நாடுகள் அனைத்துக்கும் இலங்கை நல்லதொரு உதாரணமாகும். எமக்கு தோல்வி என்பது புதிதல்ல. ஆனால் இன்று நாட்டில் பலமான எதிர்க்கட்சி இல்லாமல் போயுள்ளமையே எமக்கு மிகப்பெரிய தோல்வியாக மாறியுள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் 62 லட்சம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயமே. ஆனால் 58 லட்சம் மக்கள் இந்த அரசாங்கத்தை எதிர்த்துள்ளனர். அந்த மக்கள் இன்று அனாதையாகிவிட்டனர். அந்த மக்களை இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகின்றது. யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.
அதிபர் தேர்தலில் 58 லஞ்சம் மக்கள் ராஜபக்சேவை ஆதரித்தமை மக்களின் தவறு அல்ல. அது மக்களின் விருப்பமாகும். ஆகவே அதை இந்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்கத்தில் கையாளக் கூடாது. அவ்வாறு செயற்படுவது மீண்டும் இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும். ஆட்சி மாறலாம் தலைமைத்துவம் கைமாறலாம். ஆனால் வென்றெடுத்த நாட்டின் விடுதலை மீண்டும் சிதைவடைந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.