புதியவை

ஒரு ஆசை வந்தால் மாத்திரமே - ஜனூஸ் சம்சுதீன்


சிரட்டையில் தண்ணி குடித்த காலமதில்
பிளாஸ்டிக்கிலான கோப்பைகள் எதுவுமில்லை
சிரத்தையான சிரட்டை யுகத்தில்
நோவடிக்கும் நோய்களுமிருக்கவில்லை
கோப்பத்த பட்டையில் சோறு தின்றோம்
பின்னரான பொழுதுகளில் பொன்னெழுத்துப் பீங்கான்
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய்
நஞ்சு பாய்ச்சும் அலுமினியத் தட்டும்
விடிந்தது முதல் பொலித்தீனில் உலகம் கரைகிறது
எறிவதும் பின் வாங்குவதும் எல்லாமும் அதில் தான்
அன்று போல் மாட்டுத்தாள் பேக் எதுவுமில்லை
சொப்பிங் பேக்கே சொர்க்கமாயிற்று
ஊதிப் பெருக்கும் புரொயிலர் கோழி பற்றி ஏக கதைகள்
கோழியே தின்பதில்லை நான்
நாட்டுக் கோழிகள் சொட்டு பரவாயில்லையாம்
அதுவும் பூனையிடமும் நாயிடமும் தப்பினால் மாத்திரம் தான்
ஒரு ஆசை வந்தால் மாத்திரமே
மனசு மண் பானையையும்,முட்டியையும்,பீங்கானையும் தேடும்
வீட்டில் கிரைண்டர் கிடந்து நச்சரிக்கையில்
புழக்கடையில் கிடக்கிற அம்மிக்கல் பெருமூச்சுடும்
கொள்ளியடுப்பு உமியடுப்பு குக்கிராமத்திலுமில்லை
கேஸும் மண்ணெண்ணெயும் குடில்களை நிறைத்து
மிலேனியத்தின் பொண்டுகளுக்கு
கொள்ளியோடும் உமியோடும் கொலைவெறிக் கோபமாம்
நூறு வயது நூற்றிப்பத்து வயதெல்லாம்
பத்திரிகை செய்தியாயிற்று- இன்றுகளில்
முப்பதை தாண்டுகையில் ஆயிரம் வருத்தம்
எல்லார் கைகளிலும் கிளினிக் கொப்பியும் கூட
குப்பைகளால் உயரும் சிகரத்தை என்ன செய்ய ஐடியா
மனிதகுலத்தின் மரணம் ஊர்வலம் பார்க்கவா
வீதிக்கு வீதி குப்பை மேடு நாசிகளை நாசம் செய்கிறது
போகிற போக்கில் குப்பைகளால் உலகம் சூழப்படலாம்
நாம் நாமாக இயற்கையிடத்தில்
பவ்வியமாய் சரணடைந்த காலம் மாறி
இயற்கையை சரணடையச் சொன்னால்
இயற்கை கோபிக்காமல் என்ன செய்யுமாம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.