புதியவை

சிட்டுக்குருவி - ஓட்டமாவடி றியாஸ்


நான் சின்னஞ்சிறிய
சிட்டுக்குருவி
உன் வாள் உருவி
என்னை வெட்டிப் போடு
உன் துப்பாக்கிச் சொண்டால்
என்னை சுட்டுப் போடு !
கைகட்டிவாழ்வேனோ ?
உன் கால் பட்டு மகிழ்வேனா ??
சிறுபான்மைதானே
சிறுமை என்கிறாய் !
சிறகு விரித்து நான் பறக்க
சிறகு முறித்து
சிறையில் அடைக்கிறாய் !
நான் கூண்டுக்குள் இருந்தால்
உமக்கு குதூகலம்
வெளியே பறந்தா
வேடத்தனம்!
நாடகத்தனம் ஆடும் மனிதா
உமக்கு மட்டும் ஏனடா
இத்தனை வெறித்தனம்
இறைவன் வகுத்த
பாதையிலேதானே பறந்தேன்
உன் வீட்டு சோற்றுப்
பானையிலா விழுந்தேன்..?
அன்று
மக்களோடு மக்களாக
கொஞ்சித்திரிந்தோம்
கொஞ்சி திரிந்த எங்களை
அஞ்சித் திரியவைத்தாய்
அஞ்சிதிரிந்த
எங்களை இன்று
பூண்டோடு அழித்து
கதை முடித்தாய்
மலடியாக எங்கள் குலத்து
பெண்களை வாழ வைத்தாய்
மனம் நொந்து அவர்களையும
சாபமிடவைத்தாய்
மரத்தை வெட்டி
எங்கள் கூடுகளை
தூக்கி எறிந்தாய்
எங்கள் தோப்புக்களை மனையிடங்களாக்கினாய்
மனமில்லாது எங்கள் குஞ்சுகளை
எட்டி உதைத்தாய்
கேட்டுப்பார்
உங்கள் மூதாதையர்களை,
நாங்கள் ஒரே வீட்டில்
ஒன்றாக நடத்திய
கூட்டுக் குடும்ப
வாழ்க்கையைச்
சொல்வார்கள்!
கேட்டுப்பார்
அந்த வயல்வெளிகளையும்
வரப்பு மேடுகளையும்
குதூகலமாய் பேசி
கும்மாளம் அடித்த
கதை சொல்லும்!
எங்கள் இனத்தையே
கொன்று குவித்து விட்டு
இன்று சிட்டுக் குருவி தினம்
கொண்டாடுகிறாயோ....?
கொண்டாடு !
கொண்டாடுவதும்
பந்தாடுவதும்தானே
உங்க இனத்தின் பண்பாடு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.