புதியவை

காதல் தோல்வி - கிரி காசன்


பூமியிலே வாழ்ந்துகெட்டேன் போதுமடா சாமியுமென்
புன்னகையை மீண்டும் கொடு மாறி
நாமிருந்து செய்ததென் நாணிமனம் கோணுதடி
நானிலத்தில் வாழ்வெடுத்துப் போடி
நாமிரண்டென் றெண்ணிடவே நகைபுரிந்தாள் என்னையுமே
நாடகத்தில் போட்ட வேடம் ஆக்கி
நீமிரண்டு கொள்வதென்ன நேசமென்ன பாசமென்ன
நினைவிலில்லை யென்றவளென் பாதி
கூவியொரு பாட்டிசைக்கக் கோலக்குயில் ஏங்கியென்ன
கொல்லுதடி என்னிதயம்கூடி
நாவிருந்து சொட்டும் தமிழ் நானிலத்தில் அழிவதில்லை
நீயிருந்தாய் சொல்ல சொல்வர் கோடி
தேவிமகள் தானெனையும் தீண்டவில்லை என்றபின்னே
தேடிவந்து கொள்ளெனது ஆவி
நீவிரைந்து கொள்ளலின்றி நின்றுவிட்டால் ஈசனவன்
நெற்றிமீது போவேன் சாம்பலாகி
பூவிருக்க பூவினிலே தேனிருக்கும் என்றுமெண்ணிப்
போதை கொள்ள வந்ததொரு தேனீ
காவிருக்கும் பூக்களெல்லாம் காதல்கொள்வதில்லை வேறு
காரணத்தை கொண்டு வண்டைத் தேடி
வாவிரூக்க என்றழைத்தால் வண்டு காதல் கொள்வதென்ன
வந்துமுண்டபின் பறத்தல்நீதி
தாவி நிற்கும் பூக் கசந்தால் சாத்திரங்கள் சொன்னதன்றோ
சேர்ந்திருக்கும் மோகம் கெட்டதோடி?
கோடிகொடுத்தாலும் அன்பு கொட்டும் நதியாவதில்லை
கொண்டதெங்கு ஊற்று என்று யோசி
ஆடிமுடித்தாலும் வாழ்வில் ஆரணங்கினுள்ளிருப்ப
அறிந்து கொள்ள முடிவதில்லை போநீ
ஓடி மனம் பேதலித்து உண்மையென்று நம்பியவன்
ஒருவனாகி தனித்து வீட்டேன் பாவி
தேடி உனை நானடையும் தீரமில்லை வாழ்வினிலே
தீயெழுந்து கொள்ளருகில் வா நீ

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.