புதியவை

கைம் பெண் - ஓட்டமாவடி ஷபீ


அந்த  நிலாப்பெண்ணின்  முகத்திரையை சற்று  நீக்கிப்பார் 
அழகிய அவள் முகத்தில் எத்தனை பெரிய வடுக்கள்  என்பது புரியும்
காலத்தின் கோலத்தால் கலைந்து போனது  அவள் வாழ்வு
சாணக்கியம் இருந்தும்  சாதிக்க முடியாமல்  
களையிழந்து நிலையிழந்து கற்பின் கண்ணகியாய்
கரைந்த கனவுகளுடன் கற்சிலையாய் நிற்கின்றாள்
சமூகமெனும் அகராதியில்
விதவை எனும் சொல்லுக்கு வேறேதும் அர்த்தமுண்டோ
அர்த்தத்தை  உயிர்ப்பிக்க  அவசரமாய் மாற்றப்படும் அவள்நிலை
பாரம்பரியமாம், பண்பாடாம்
பாவம் அன்றிலிருந்தே ஆரம்பிக்கும் அவளின் அவலநிலை
புருஷன் போய்ட்டானாம்
பொட்டிழந்து பூவிழந்து புடவையும்  நிறமிழந்து 
புன்னகையும்  ஒளியிழக்கும்
அவள் சந்தோசமெல்லாம் சாக்கில் கட்டப்பட்டு ஆற்றில் எறியப்படும் .
மடிக்கப்பட்ட  புத்தகமாய் இரும்புப்பெட்டியின் இருளில்
அடைக்கப்படும்  அவள் வாழ்வு
விடியலை  எதிர்பார்த்தாளாயினும் 
வலிகளைத்தான்  அதிகம்  கண்டிருப்பாள்
விழியிருந்தும் வழிதெரிந்தும்
முன்னெடுக்கும் பாதையெல்லாம் முட்டுக்கட்டைகள்.
தாண்ட நினைத்தாலோ சாக்கடை  சமூகத்தால் 
இடப்படும்   பல தடைகள்
அந்தரங்கத்தில் அசிங்கங்கள் ஆங்காங்கு  அரங்கேற 
கண்டு கொள்ளா அவசர உலகமோ 
அவள் வாழ்வை மட்டும்  நின்று  நிதானித்து அவதானிக்கும்  
கருப்புப்பூனையையும் களையிழந்த கைம்பெண்ணையும்
சமூகத்தின் சில திருட்டுப்பூனைகள்
திரும்பிப் பார்த்தாலே திருஷ்டி பட்டதாய் நினைக்கும்
பொறுப்பற்ற பல பெண்கள் கூடிக்கூடி
பருப்புவடை மெல்வதுபோல் அவள்வாழ்வை
குதர்க்கமாய்க்  குறை சொல்லும் 
பெண்விடுதலையாம்  பெண்ணியமாம்
போராட்டமாம் சிலருக்குப் புகழ்மாலையாம்
ஆனாலும் பூட்டிய கதவுகள் இன்னும் 
தானாய்த் திறக்கவில்லை பெண்கள்தான் அதற்கும் காரணமாம்
சுமங்கலிப் பெண்களே சுற்றி இருக்கும் கூட்டத்தாரே
சற்று சிந்தியுங்கள்
கைம்பெண் என்பது கடவுளின் சாபமா
மற்றவரெல்லாம் பெற்றது வரமா
இன்று  அவர்க்கு நாளை நமக்கு
வேண்டாத கலாசாரம் இன்னும் தொடர்வது எதற்கு
கைம்பெண்களே விதவைகளே
இப்படி அழைப்பதற்கு  என்னை   மன்னியுங்கள்
கதவுகள் திறக்கும்வரை காத்திருக்க  வேண்டாமே
நம்பிக்கையின் சாவிகொண்டு உள்ளத்தின் கதவுகளை
உடனே திறவுங்கள்
முட்டுக்கட்டைகளை முயற்சியுடன் கடவுங்கள்.
பூத்திருக்கும் புதுமலர்கள் கூட  புன்னகைப்பதைப்  பாருங்கள். சூடிக்கொள்ளாவிட்டாலும் பெண்மை
வாடிப்போவதில்லை உணருங்கள் 
சிறகினை முளைக்கவிட்டு நிலவினை அடையுங்கள்
அங்கிருந்து பாருங்கள் அத்தனை கண்களும்
உயரத்தில்  இருக்கும் உங்களை 
உற்றுப் பார்ப்பதை

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.