புதியவை

வாழ்ந்து சொல்கின்றன - மாலினி


வம்ச விருத்தி 
எதிர்பார்ப்புக்களில்
பாரபட்சம் ஏதுமின்றியே
பரவி உதிர்க்கின்றன
மரங்கள்
விதைகளை.
.
இழுக்கும்
வெள்ளத்தில் நகர்ந்தும்
மிதிக்கும்
பாதங்களில் சிதறியும்
உயிர்ப்பை
தொலைக்காத வித்துக்கள்
அடிமரம் தாண்டியும்
அடையாளத்தை
முளைவிட்டாலும் .......
.
வெடித்து
வெளிவருகையில்
உட்கிளம்பும் உவகையின்
அர்த்தமற்ற உந்துதலில்,
பகட்டுக்
காட்சிப் படுத்தலின்
பரிதாப பெருமையில்
வேர்களை விரித்து
வெளியாகப் பரப்பி
எதிர்ப்படும் எதையும்
எதிர்க்கும் திராணியை
இழந்து போவதில்
வீழ்ச்சியின் அத்திவாரத்தை
அவைகளே
அடித்தளமிட.......
.
ஆர்ப்பாட்டம்
அடக்கிய அமைதிக்குள்
ஆணி வேரை
ஆழச் செலுத்திய
அவதார வித்துக்கள்
வெட்டி வீழ்த்தி
வேர்வரை அரித்தாலும்
சவால்களில் சாயாமல்
சமாளித்து நிமிர்வதே
வம்சத்தின் சிறப்பென
வாழ்ந்து காட்டிச்
சொல்கின்றன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.