புதியவை

"இசையே நீ என்றும் வாழ்வாய் ....." - (மீ.விசுவநாதன்)
பிறப்பும், வாழ்வும், இறப்பும் இயற்கை. இந்தக் கால ஓட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டும் என்று நினைவில் நிற்கும்படியான செயல்களைச் செய்து விட்டுத்தான்ச் செல்லவேண்டும். அப்படிச் சென்றிருக்கிறார் "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்" அவர்கள். அவர் இன்று (14.07.2015) அதிகாலையில் மறந்த செய்தி அறிந்து மனம் வருந்தியது. அடுத்தநொடியே அந்த மேதையின் இசையை என் இதயம் இசைக்கத் துவங்கியது. ஒரு அற்புத இசைக்கலைஞர். ஒன்றா இரண்டா எத்தனையோ மெட்டுக்கள் எப்போதும் நம் இதயத்தைத் தென்றலாக, மயிலிறகாக வருடிக்கொண்டே இருக்கிறது. கவியரசர் கண்ணதாசனும் அவரும் இணைந்து தந்த தமிழ் இசைக் கொடை அனந்தம். அதில் ஒருதுளிதான் "ஸ்ரீ கிருஷ்ணகானம்". அதில் உள்ள ஒன்பது பாடல்களுமே அமிர்தக்கடல்தான். அந்த இசைத் தொகுப்பில்  இருக்கும்"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ" என்ற  பாடலை ஒலிப்பதிவு செய்யும் பொழுது இரவு மணி பனிரெண்டு என்று சொல்வார்கள்.

      "எம்.எஸ் .வி". அவர்கள் இசையமைக்கும் அழகை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு இரண்டு முறைகள் கிடைத்தன. அதில் ஒன்று நான் நண்பர்களுடன் திருவல்லிக்கேணி வசந்தாமேன்ஷன் விடுதியில் தங்கி இருந்த பொழுது, விடுதியின் சொந்தக்காரர் 1978ம் வருடம் "மே" மாதத்தில்  ஒரு படம் எடுக்க பூஜை போட்டார். அந்த நிகழ்ச்சிக்கு படத்தயாரிப்பாளரான விடுதியின் சொந்தக்காரர் என்னை அழைத்திருந்தார். (எனக்கு அதில் விருப்பம் இருந்த காரணத்தால்) ஜெமினி ஸ்டுடியோவில் பூஜையுடன்  பாடல் ஒலிப்பதிவு. படத்தின் இயக்குனர் மல்லியம் ராஜகோல்., எம்.எஸ்.வி. இசையமைப்பில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டேன். எம்.எஸ்.வி. அவர்கள் மெட்டுச் சொல்ல அதற்கு "இங்கே ஒரு சங்கம் அதில் சங்கம் அடைந்தேனே ...அங்கே ஒரு அங்கம் அதில் அங்கம் வகித்தேனே"என்ற அழகான வரிகளைக்  கவியரசர் சொல்ல, அதற்குத் தகுந்த இசையமைத்த எம்.எஸ்.வி. அவர்கள்  எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குப் பாடிக் காட்ட, எம்.எஸ்.வி. அவர்களின் உதவியாளர் ஜோசப்கிருஷ்ணா துணையுடன் அந்த மிக இனிமையான பாடல் ஒலிப்பதிவான தருணம் இன்றும் எனக்கு அதே இனிமையுடன்  நினைவிருக்கிறது. பணப்பிரச்சனையால் அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது. ஆனால் அந்தப் பாடல் என் நெஞ்சிலே நின்று விட்டது.

     இரண்டாவது முறை 1999ம் வருடம்  "அண்ணாமலை கைதொழ" என்ற தேவார, திருவாசகப் பாடல்களின்  இசைத் தொகுப்புக்கு எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைக்கும் பொழுது முழுமையாக இரண்டு தினங்கள் அவருக்கு வெகு அருகிலேயே இருந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றென். அ.ச.ஞானசம்மந்தன் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பதினேழு பாடல்களுக்கு மெட்டமைத்து, தனது குழுவினருடன் அவர் இசையமைத்த அழகையும், அந்த இசையிலேயே அவரும் மூழ்கிக் குளித்த அவரின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் நேரில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

      "இலக்கிய சிந்தனை" அமைப்பாளர்களில் ஒருவரான R. A. K. பாரதிஅவர்கள் என்னிடம்," விஸ்வநாதா...தேவார, திருவாசகத்தில் இருந்து சில பாடல்களை அறிஞர் அ.ச.ஞா. தேர்வு செய்திருக்கிறார். அதற்கு "எம்.எஸ்.விஸ்வநாதன்" இசையமையகப் போகிறார். இரண்டு நாட்கள் அதன் ஒலிப்பதிவு மைலாப்பூர், கச்சேரி ரோட்டில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் நடக்கவிருக்கிறது. ஒனக்கு இதிலெல்லாம் ஈடுபாடுண்டே..முடிந்தால் இரண்டு நாட்கள் லீவு போட்டு வாயேன். மிகக் குறைந்த பேர்கள்தான் இருப்பார்கள். அ.ச.ஞானசம்மந்தன் இருப்பார். முடிந்தால் சீதாவையும் (என் மனைவி) கூட்டிக்கொண்டு வா" என்றார். இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு காலையில் எட்டு மணிக்குச் சென்று இரவு பதினோரு மணிக்குத்தான் திருபினேன்.

    ஒலிப்பதிவுக் கூடத்தின் உள்ளே அ.ச.ஞா. அவர்கள் அமர்ந்திருந்து ஒவ்வொரு தேவார திருவாசகப் பாடலுக்கும் ஒரு சிறு உரை தருவார். அதை எம்.எஸ்.வி.அவர்கள் நுணுக்கமாகக் கேட்டுப் பதிவு செய்வார். ஒலிப்பதிவு முடிந்தவுடன் அ.ச.ஞா. கூறும் அற்புதமான விளக்கங்களைக் கேட்டு ரசிப்பார். அடுத்ததாக எந்தப் பாட்டு யார் பாட வேண்டும் என்று திட்டமிட்டபடி பாட அழைத்திருந்தார். இசையமைக்கும் குழுவினர் ஒரு கூடத்தில் இருப்பார்கள். அவர்களுக்குக் குறிப்புகள் தந்து வழிநடத்துவார். உடனே தனது இடத்திற்கு வந்து பாடகர்களுக்கான பாடலைத்தந்து, அதை எப்படிப் பாடவேண்டும் என்றும் கற்றுத் தருவார். குறித்த காலத்தில் ஒலிப்பதிவை முடித்துவிட்டு, அதை அங்கே உடனேயே போட்டுக் காட்டி ஒப்புதல் பெற்றுக் கொள்வார்.

    "அண்ணாமலை கைதொழ" என்ற அத்தொகுப்பில் அப்பர் தேவாரத்தில் இருந்து "எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே ..சிந்தை உள்ளும் சிரத்துளும் தங்கவே" என்ற பாடலுக்கான இசைக்குறிப்பை (பதிவு செய்த ஒலிநாடாவை) எஸ்.பி.பி. இடம் தந்து," பாலு..இதக் கேளு..பாடு" என்றார். எஸ்.பி.பி. அதைப் பணிவோடு பெற்றுக்கொண்டு எம்.எஸ்.வி.யையும், அங்கே அமர்ந்திருந்த அ.ச.ஞா. அவர்களையும் வணங்கி விட்டுப் பாடுவதற்காக ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் சென்று விட்டார். அவர் சென்றவுடன், "பாலுவிடம் ரொம்பப் பணிவும், கிரகிப்புத்தன்மையும் ஜாஸ்த்தி. என்ன சொல்லிக் கொடுகிரோமோ அதை அப்படியே பாடி இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாய்டுவான்" என்று அங்கிருந்த அ.ச.ஞா., ப.லஷ்மணன், பாரதி ஆகியோர்களிடம் கூறினார். பாடல்களை எல்லாம் "டிராக்"கில் பாடியவர் எம்.எஸ்.வி.யின் உதவியாளராக இருக்கும் அனந்தநாராயணன். அவர் எம்.எஸ்.வி.யின் செல்லப்பிள்ளை.

    "தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்" என்ற திருவாசகப் பாடலை கிருஷ்ணராஜாவும், ராகவேந்தரின் மகளும் பாடினர். அந்தப் பாடலில் "தேராந்த வீதிப் பெருந்துறையான் நிருனடஞ்செய்" என்று ஒரு வரி வரும். அதற்கு இசை அமைக்கும் பொழுது எம்.எஸ்.வி.யிடம் அ.ச.ஞா. அவர்கள், " எம்.எஸ்.வி....இந்த இடத்துல இறைவன் தேரில் ஊர்வலம் வருகிறார்..." என்று சொல்லும் பொழுது, " ஆங்....புரிஞ்சுது..புரிஞ்சுது..என்று சொல்லி "மாலாரி" ராகத்தில் அதை மிக அழகாக அமைத்தார். நாதஸ்வரம், மேளம் என்று அந்த இசை அமர்க்களமாக இருக்கும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ப.லஷ்மணன்பரவசப்பட்டு எம்.எஸ்.வி.யின் கையைப் பிடித்துப் பாராட்டினார்.  அந்தப் பாடலைக் கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்கும்.
.
    இரண்டாவது நாள் "சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக" என்ற திருவாசக, திருப் பொன்னூசல் பாடலை "சிந்து" பாடினாள். ரொம்பவும் அற்புதமான, மனம் ஊஞ்சலாடுகின்ற வண்ணம் அந்தப் பாடலுக்கு மெல்லிசைமன்னர் இசையமைத்திருப்பார். அந்தப் பாடல் ஒலிபதிவு செய்து முடிக்கும் பொழுது இரவு மணி பதினொன்று. அப்பொழுது அங்கிருப்பவர்களிடம்," இதப் போல்லத்தான் "ஆயர்பாடி மாளிகையில்" பாட்டையும் நள்ளிரவுல ஒலிபதிவு செய்தோம்" என்றார் எம்.எஸ்.வி.

   அப்பொழுது என்னுடன் என் மனைவியும், என் மைத்துனி "கலாவும்" இருந்தனர். கலா நன்றாகக் கர்நாடக சங்கீதம் கற்றவர். நான் எம்.எஸ்.வி.அவர்களிடம்," இவங்க என் மச்சினி..கலா ..கர்நாடக சங்கீதம் கற்றவர்" என்று அறிமுகம் செய்து வைத்தேன். உடனே அவர் தன் ஆர்மோனியப் பெட்டியின் மீது தனது வலதுகை விரல்களைப் பரப்பியபடி," அம்மா..எங்க..ஒரு பாட்டுப் பாடு" என்றார். கலாவும் கொஞ்சம் பாடினாள். ,"அம்மா ஒனக்கு நல்ல சாரீரம் இருக்கு...நிறைய பிராக்டீஸ் பண்ணனும் ..நல்ல வருவே.." என்று வாயார வாழ்த்தினார் அந்த இசை மேதை.

   ஒவ்வொரு மேடையிலும் தன் இசை நிகழ்ச்சியைத் துவங்கும் முன்பு கவிஞர் கண்ணதாசன் எழுதிய "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்" என்ற பாட்டை பாடி முடித்ததும்," எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்" என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பாடி முடிப்பார். இன்று நானும் "எங்கள் கண்ணதாசன் புகழோடு எம்.எஸ்.வி.புகழையும் பாடுங்களேன்" என்று அந்த புருஷோத்தம மூங்கில்களைப் பிராத்திக்கின்றேன்.. 
உலகம் உள்ளளவும் இசையால் நம்மோடு வாழ்வார்.. 
படைப்பாளிக்கு மரணமில்லை .. 

தடாகத்தின் சிறு குறிப்பு 
...............................................சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 87 வயதான விஸ்வநாதன் 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். .

வாழ்க்கை வரலாறு: இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளியில் 1928 ஜூன் 24இல் பிறந்தார். அவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில்
நடித்துள்ளார்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.