புதியவை

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும் வரை டிரான் அலஸை கைது செய்யக்கூடாது

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும் வரை டிரான் அலஸை கைது செய்யக்கூடாது
ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் டிரான் அலஸூக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சிகள் இல்லையென அவரது சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் நேற்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டிரான் அலஸை கைதுசெய்வதற்கு எவ்வித காரணங்களும் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் டிரான் அலஸை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவிற்கான வாய்மூல தெளிவுபடுத்தல்கள் நேற்று நிறைவு பெற்றன.
பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன், ஈவா வனசுந்தர மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
எமில் காந்தன் என்பவர் ஊடாக ராடா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுனாமி வீட்டுத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட நிதி, முறையற்ற விதத்தில் டிரான் அலஸிற்கு கிடைத்துள்ளதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என டிரான் அலஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
2006 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் மாதம் 22 ஆகிய திகதிகளில் இந்த முறையற்ற கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளமை குறித்து தெரிவிக்கப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.
இருப்பினும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் எமில் காந்தன் என்பவர் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேறி இதுவரை மீண்டும் நாடு திரும்பவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரொமேஷ் டி சில்வா சுட்டிக்காட்டுகின்றார்.
இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி காலம் கடந்துள்ளபோதிலும், இதுவரை இதுதொடர்பில் விசாரணை நடத்தி, நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்துவதற்கு பொலிஸார் தவறியுள்ளதன் ஊடாக டிரான் அலஸின் நிலைப்பாடு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெற்றதாக கூறப்படும் இந்த முறையற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையின் பிரதான சாட்சியாளரான கட்டட நிர்மாண நிறுவனமொன்றின் பணிப்பாளர் எனக் கூறப்படுகின்ற கஜன் குமார் என்பவரின் கருத்துகளிலும் முரண்பாடு காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சிறைவாசம் அனுபவித்துவரும் சாட்சியாளர் முதலில் அளித்த சத்தியகடதாசிக்கு அமைய தம்மால் டிரான் அலஸிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக அதில் அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், எமில் காந்தன் என்பவரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நீதவான் முன்னிலையில் சாட்சியாளர் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் அரசியல் ரீதியான காரணங்களுக்காக தமது தரப்பினர் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக டிரான் அலஸின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இருதரப்பினரினதும் வாதங்களை செவிமடுத்த உயர்நீதிமன்றம் எழுத்துமூலம் விளக்கமளிப்பதற்காக ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை கால அவகாவம் வழங்கியுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும் வரை டிரான் அலஸை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
சட்ட மாஅதிபர் சார்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட ஆஜராகியிருந்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.