புதியவை

”முதியவரின் நம்பிக்கை” - சிவசூரி


வளமுடைய இந்தியாவின் மைந்தரென வந்தநீர் 
         வாளாக இருப்ப துண்டோ?
மளமளென வேட்டியினை  மாத்திரைப் போதினிலே 
         மடிதற்று  நில்லீ ரோநீர்?
தளர்வுடனே  கிடந்தந்த  தேவர்கள் வரவேண்டித் 
          தரையி னில் கிடப்ப துண்டோ?
இளமையும் வலிமையும் கொண்டுநீர் எழுந்தால்தான் 
          இத்தேசம் உருவெ டுக்கும்!


இத்தேசம் நுமதன்றோ இவ்வுயிர்கள் நுமதன்றோ 
          இவையெல்லாம் பணைய மாமோ?
இத்தேசம் இன்னொருவர் சீரழிக்கக்  கண்டபினும் 
          இதழ்மூடிக் கிடப்ப துண்டோ?
உத்தேசம் ஒன்றின்றி  உதடொட்டிக் கிடக்கும்நீர் 
          ஊமையோ? உணர்வில் லையோ! 
இத்தேசம் இங்குள்ளோர் கைகளும் தோள்களும் 
          இணைந்தால்தான் உருவெ டுக்கும்!.


இமயமெனச் செல்வங்கள் இருந்தாலென், போனாலென்,
          எழுத்தறிவும் இருந்தா லென்ன! 
உமதுபெயர் பின்னாலும் முன்னாலும் பட்டம்பல 
           உறவாடி பயனுமுண்டோ!
புவியெல்லாம் வாணிபமும் செய்துபுகழ் சேர்த்தாலும் 
           பொருளாமோ புகலு வீரே!
உமைநீரே  ஆளுவதற் கீடில்லை, உம்நாடோ  
            உம்மால்தான் உருவெ டுக்கும்!.

இருட்டிலே உழல்கின்ற முணகல்கள்   எல்லாமும் 
           எவர்காதும் கேட்ப துண்டோ?
பொருட்டாகக் கொள்வரோ புதையுண்டு போகின்ற
            புழுக்கூட்டம் ஊர்ந்து சென்றால்?
குருட்டாம் போக்கிலே கொட்டிடும் குமுறல்கள் 
            கொற்றத்தை மாற்றல் உண்டோ?
வெருட்டிடும் வேகமே  தருமென்னும் அறிவதே 
             வித்தாகும் விடுத லைக்கே!
        
கொத்தடிமைப் பட்டிங்கு கும்பிட்டே  அடிபணியும் 
             கொள்கையோ கொண்டு வந்தீர்?
முத்தனைய விடுதலை விழைவதைக் குழிதோண்டி 
              மூலையில் புதைக்க லாமோ!
கைத்தலத் திருக்கின்ற தீர்வுகளைக் கண்ணிரண்டும் 
               காணாமல் இருக்க லாமோ!
வித்தான எண்ணத்தை விருட்சமென வளர்த்தாலே 
               விடுதலை விளைவ தாமே! 

உழக்குக்குள் கிடந்திங்கே ஒழியாமல் தலைதூக்கி 
         உயரத்தைக் காணா மல்வீண் 
சழக்கிலே சுழன்றுங்கள்  மாற்றார்கள் போடுகின்ற 
         தடம்பார்த்துச் செல்வ தாமோ!
கிழக்கிலே தோன்றுகதிர் கிரணத்தைப் பிடித்துங்கள் 
         கீர்த்தியைப் பெருக்க வேண்டும்!
முழக்கிடும் குரலொலி முரசென அதிர்கையில் 
          முன்தோன்றும் விடுத லையே.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.