புதியவை

இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவதா? ராமதாஸ், வைகோ கண்டனம்!

இலங்கைக்கு போர் கப்பல் வழங்குவதா? ராமதாஸ், வைகோ கண்டனம்!


இலங்கைக்கு, இந்தியா போர் கப்பல் வழங்கியதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா என்ற போர்க்கப்பலை சிங்கள கடற்படைக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கைக்கு இந்தியா கப்பலைக் கொடையாக அளித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இலங்கை ஒருபோதும் நமக்கு விசுவாசமாக இருந்ததில்லை என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அந்நாட்டுக்கு மத்திய அரசு பல உதவிகளை வழங்கி வருகிறது. இத்தகைய உதவிகளால் பாதிக்கப்படுவது தமிழ்நாடு தான் என்ற போதிலும், அது தொடர்பாக தமிழக அரசிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்துவதோ, கருத்துக் கேட்பதோ கிடையாது. 

கச்சத்தீவை தாரை வார்த்ததில் தொடங்கி, 2009-ம் ஆண்டு இறுதிப் போருக்கு ஆயுதம் வழங்கியது வரை மத்திய அரசின் அணுகுமுறை துரோகி நாடான இலங்கைக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் தான் இருந்து வருகிறது. 

இலங்கைக்கு இந்திய போர்க்கப்பல் ஐ.சி.ஜி. வராஹா தரப்பட்டதை சாதாரண உதவியாக கருதி விட்டு விட முடியாது. இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒதுபோதும் துணையாக இருக்கப்போவதில்லை. 

ஏற்கனவே ஈழத்தமிழர்களை படுகொலை செய்வதற்காக இந்த கப்பலை பயன்படுத்திய இலங்கை, இப்போது வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்வது, தாக்குவது, சுட்டுக்கொல்வது போன்ற மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதற்கு தான் பயன்படுத்த போகிறது. 

உலகில் சொந்த நாட்டு மீனவர்களை தாக்க அடுத்த நாட்டு கடற்படைக்கு ஆயுதங்களை வழங்கிய அவப்பெயர் தான் இந்தியாவுக்கு ஏற்படப்போகிறது. இந்த பழியை தடுக்க வேண்டுமானால், இதுவரை இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க்கப்பல்கலையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஹா’ கப்பலை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சை துரோகம். 

1992-ம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ‘வராஹா’ கப்பல், தொடக்கத்தில் கடலோரக் காவல் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2006-ம் ஆண்டில் ராஜபக்ஷ வேண்டுகோளின் பேரில் சிங்களக் கடற்படையின் சேவைக்கு குத்தகைக்கு விடப்பட்டது. 

இந்த கப்பலுக்கு இலங்கை சிங்களக் கடற்படை ‘சாகரா’ என பெயர் சூட்டியது. பொருத்தமான பெயர். தமிழர்களைச் சாகடிக்கத்தானே பயன்பட்டது. விடுதலைப் புலிகளின் கடற்படையாம் சூசை தலைமை தாங்கிய கடல் புலிகளை சிங்களக் கடற்படை அழிப்பதற்கு இந்தியக் கப்பல் படை முழுமையாக பயன்படுத்தப்பட்டதற்கு இந்த ‘சாகரா’ சரியான சாட்சியம் ஆகும். 

துரோகம் 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாரதீய ஜனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இன்றைக்கு செய்கிறது. இந்திய அரசு தற்போது செய்துள்ள பச்சை துரோகத்தைத் தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. தமிழ் குலத்துக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து வினை விதைக்கிறது. இந்த வினைக்குரிய அறுவடையை வருங்காலம் நிச்சயமாக நிரூபிக்கும் என எச்சரிக்கிறேன். 

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.