புதியவை

புதைக்கப்படாத காதல்-நாகினிகண்ணை விட்டு மறைந்தாலென்ன
எண்ணம் தொட்டு நிற்கின்றேனே
விண்ணில் சென்று மறைந்தாலுமென்ன
மண்ணில் உன்னுள்ளில் வாழ்கின்றேனே!

அன்றாக்கிய காதல் சோலையிடம்
ஒன்றென்ன ஈராயிரம் சோகங்கள்
என்றென்றும் விதைந்து முளைத்திடாமல்
இன்றேனும் சோகம் தவிர்ப்பாயோ!

உன்னுள் ஏனோ நிறைந்துவிட்டு
உவகை மறந்து அலைகின்றேன்
மண்ணில் சென்று மறைவதற்கு
மணித்துளி இன்னும் மலரவில்லை!

கண்டெடுத்த வீணை வேறு
கண்ணாளன் கைப்பொருளென்றே
பண்ணேதும் மீட்டாமல் வீணே
பகற்கனவாய் உயிர் கரைந்ததன்றே!

கடல் தாண்டிய உறவுடன்
மடல் விடுத்தென்ன பயனோ!
விண்ணில் பறந்திட்ட உயிரின்றி
மண்ணில் எடுத்திட்ட இப்பிறவியும் ஏனோ!

அனுதினமும் குறையாத ஏக்கம்
அகன்றிடுமோ உன்மீதான தாக்கம்
மறக்கவோ துளியும் மனதில்லை
மணக்கவோ விதியும் துணையில்லை!

உப்புத் தின்றால் நீர் குடித்திடனும்
உவமை நன்றிதை மறவேனே
தர்மம் தவறிய பாதையென நம்காதலை
தவறியும் புதைகுழியில் வீழ்த்தேனே!

கட்டுக்குள் மனதைச் சிறைப்படுத்தி
கட்டுமீறும் கண்ணீரில் கரைகின்றேனே!
எட்டாக் கனியென் நினைவு விடுத்து நீ
எங்கோ நலமாய் வாழ்ந்தால் நிம்மதி என்தேனே!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.