புதியவை

செதுக்கி வைத்தாய் - மாலினி


கண்களைமூடிக்
கனவுகள் துள்ளிய
கிள்ளைப்பருவத்தில்
என்னைக்
கடக்கவில்லை நீ
.
கடந்திருந்தால் ......
கண்களை
மூடிக்கொண்டே
காவுகொடுத்த எல்லா
நல்லவைக்குள்ளும்
நீயும் அடங்கியிருப்பாய்.
.
அறிவைத்திறந்து
அகிலத்தைப் பார்த்து
அருவருத்த
பொழுதுகளில்
அறிமுகமாகி
இருக்கவில்லை
நீ
.
இருந்திருந்தால் .....
உக்கல் கூரையில்
ஒழுகிய மழையாய்
தலை தாங்கிய
கழிவெல்லாம்
கண்மூடிச் சகிக்கையில்
காட்சிப்படாமல்
கடந்திருப்பாய்.
.
வீழ்ந்தவை எல்லாம்
விதியே என்று
கண்ணீரில் கரைத்து
கசடுகள் கழுவி
இதயம் இறுக்கி
உறையத் தொடங்கிய
இறுதிப் பொழுதில் ,
.
தடுக்கி விழுந்த
குழந்தையின்
தளிர்நடையுடன்
நீ வந்தாய்
.
கரும்புவில் கதகதப்பில்
கண்களால் புன்னகைத்து
கடவுளின் பார்வையில்
இதயம் தொட்டு
இறுகிக் கிடந்த
இதயம் துளைத்து
உன் பெயரை
என் உயிரில்
சிதையிலும் சிதையாமல்
செதுக்கி வைத்தாய்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.