புதியவை

இன்றைய சினிமாவுக்கு ஒரு "இனிமா"-ருத்ரா

இளம்புயல் ஒன்று
கோலிவுட்டுக்குள் தரையிறங்கி இருக்கிறது.
குறும்படங்களை
குறும்படங்களாகவே
எடுத்துக்கொண்டிருந்தவர்கள்
அதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி
குறுநெடும்படமாக்க எடுத்து
குவிக்கிறார்கள்.
மொத்த அண்டாவில்
கதை அவியல் வேகிறது.
சில மிளகாயை கடிக்கும்.
சில ஜிகர்தண்டாவில் சாம்பார் வைக்கும்.
சில குள்ளநரிக்கூட்டக் குருமா வைத்திருக்கும்.
சில பெருங்காய டப்பாடக்கர் என்று இருக்கும்.
தலைப்புகள் கூட‌
ஒண்ணாய் ஒடக்காம் அடிச்சி
ஒண்ணுக்கு பெஞ்சதை
கதைக்கு சூட்டப்பட்டிருக்கும்.
அப்புறம்
அவங்களுக்கே நாற்றம் சகிக்காமல்
"ஒண்ணாப்படிச்சதை"
தலைப்பாக்கியிருக்கும்.
கதாநாயகத்தனம் தேவையில்லாத 
நரைத்த கதைளைக்கூட‌
விறைப்போடு காட்டுகிறார்கள்.
ஒரு தலைப்புக்குள்
ஒன்பது கதைகள் சிரச்சேதம் ஆகியிருக்கும்.
ஒரு கதைக்குள்
வருகிற வசனங்கள் எல்லாமே
அந்த படத்துக்கு தலைப்புகள் தான்.
பல்லக்கடித்து
உதட்டை இறுக்கி
கண்விழிக்குள் குரூரம் ஊற்றி
பீடி பிடிப்பவன் கடித்துத்துப்புவானே
அது போல்
துண்டு ஒலிகளில்
வசனம் பேசி
குவிந்த சினிமாக்களே
இன்றைய கோடம்பாக்கத்துக்குவியல்.
யார் கேட்டது?
"நூறு நாட்களை"
நூறு மணி நேர ஆயுள் போதும்.
பால் குடத்துக்கும்
பனையுயர கட் அவுட்டும்
ஆகிற சில்லறைகளே போதும்
பத்துப்படம் எடுக்க?
மின்னல்கள் போல படங்கள்.
தடமும் இல்லை..
மீண்டும் பார்க்க படமும் இல்லை.
இருட்டையும்
சொல் "கசாப்பையுமே"
மணிரத்னம் வைத்துக்கொண்டு
மணிமகுடம் சூட்டினார் என்று
இந்த பிஞ்சுகள்
செய்யும் புரட்சிக்குள்
ஒரு தீ மூள்வது
சிகரெட் பற்றவைக்கும்
பிஞ்சு நொடிக்குள்ளேயே மாயம்.
புதிய தலைமுறையை
பழைய தலைமுறை

மச்சம் பார்ப்பது
சேதாரம் சொல்வது எல்லாம்
அநியாயம் தான்.அக்கிரமம் தான்.
ஓ!சூறாவளிகளே!
ஆத்திரமாய் வருகிறது.
இந்த கலர் காமிராக்களை
உடைத்து நொறுக்குங்களேன்.
ஒரு கருப்பு வெள்ளையில் தான்
மொத்த சினிமாவின்
உயிர்ப்பே துடிக்கிறது.
"தேவதாஸ்"ல் அந்த இருமல் ரத்தத்தில்
துடிக்க துடிக்க தெரியாத சிவப்பா?
பாசமலரில் 
சிவாஜியின் கருப்பு பூட்ஸில்
நடு நடுங்கி துடித்து தெரியாத மரணமா?
இன்னும்
என்னவெல்லாமோ
அசைபோட தோன்றுகிறது.
கனவுத்தீயின் மழலைகளே
உங்கள் படைப்புக்குள்
பிரம்மாக்கள்
வெளிவருகிறார்கள்
ஒவ்வொரு நேனோ செகண்டுக்கு ஒருவராக!
படைக்கும் வரை
படைத்துக்கொண்டே இருங்கள்!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.