புதியவை

மண்பயனுற.......! - ராமசாமி இலந்தை


இந்த மண் ஓங்கிட என்னென்ன வேண்டுமென்று
எண்ணியே நான் பார்க்கிறேன்
ஏராளத் தானியம் எங்கும் விளைந்திடின்
இம்மண் பயன் கொள்ளுமா?
விந்தைக் கருப்பொருள் வேண்டுமட் டுமிங்கே
மேவ அதுபோதுமா?
விஞ்ஞானச் சாதனை வீறுகள் எங்கணும்
வேகம் வரப் போதுமா
சந்தையில் யாவுமே தாராள மாகிடின்
சாரும் பயன் சேருமா?
சாப்பாட்டுக்கில்லையெனும் சங்கடம் தீர்ந்திடின்
சாமி, அது போதுமா?
கந்தையாய் நெஞ்சங்கள் காவுக் கலைவதைக்
காண்கிறேன் ஏ, தெய்வமே!
கள்ளுக்குள் வீழினும் ஈய்க்கது சொர்க்கமா
காக்கவா ஏ தெய்வமே!
இல்லாத வளமிலை இல்லாத பொருளில்லை
இல்லாத தேதுமில்லை
எங்கெங்கு நோக்கினும் அங்கேநம் செல்வத்தின்
ஏற்றங்கள் கொஞ்சமில்லை
பல்லாயிரம் காலம் செல்வத்தின் உச்சமாய்
பாரதம் நின்றதுண்டு
பாதைகள் கண்டதன் பார்வையில் நின்றிடப்
பல்லோர் முயன்றதுண்டு
எல்லாம் தரும் வயல் தன்னில் விளைச்சல்
எடுத்தால் உரம் சேர்க்கிறோம்
இந்திய மண்ணில் எடுக்கவே செய்கிறோம்
ஏதும் கொடுப்பதில்லை
அல்லாவா, ஏசுவா, ஈசனா, கண்ணனா
இல்லை பராசக்தியா
யாரிடம் சொல்லுவேன் யாரிடம் செல்லுவேன்
ஆண்டவா, காக்க வா வா!
வேறொரு நாட்டிலே வீதி பெருக்கிடும்
வேலையைச் செய்கின்றவன்
மீளவும் பாரதம் சேரின் தனக்கொரு
வேலையாள் தேடுகின்றான்
மீறிடும் போலியாய்க் கௌரவம் பார்ப்பவர்
வேர்வை வடிப்பதில்லை
வேண்டும் வளமெல்லாம் வீட்டுக்குள்ளே வந்து
வீழவே எண்ணுகின்றார்
தாறுமாறாகவே சண்டைகள் பூசல்கள்
தம்மைத் துண்டாடுகின்றார்
சாதனையாகவே வேதனை கூட்டியே
தம்முள் கொண்டாடுகின்றார்/
ஏறுமாறாகவே இந்தியா போவதா?
ஈசனே காக்க வா வா வா!
இம்மண் பயனுற ஏதேனும் செய்திடும்
எண்ணத்தைச் சேர்க்க வா வா வா
இடையறா உழைப்புடன் ஈடிலா முயற்சியும்
எம்மக்கள் கொள்ளவேண்டும்
ஏய்த்துப் பிழைக்கிற எத்துவாளித்தனம்
எம்மக்கள் தள்ள வேண்டும்
வடிவுறாக் கொள்கைகள் வாதங்கள் ஜம்பங்கள்
மாயம் மறைய வேண்டும்
வற்றாத ஆக்கமும் வாய்மையும் ஆர்வமும்
வாழ்வில் நிறைய வேண்டும்
கொடிபிடித்தே வெறும் கூச்சல்கள் போடுவோர்
கொட்டம் அடங்க வேண்டும்
குண்டுகள் வைப்பவர் வைத்திடும் குண்டினால்
கூறுகூ றாகவேண்டும்
நடைபெற ஏதேனும் தடையுண்டோ தெய்வமே
நம்பிக்கை நான் கொள்கிறேன்
நம்பிக்கை வீணாகப் போகாமல் காக்கவே
நல்லருள் வேண்டுகின்றேன்!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.