புதியவை

ரிசாத்தின் அரசியல் வாழ்வு முடியப் போகிறது! ஹக்கீம்

ரிசாத்தின் அரசியல் வாழ்வு முடியப் போகிறது! ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த, முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை, நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர், என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார். 

ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம் மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முஸ்லிம்கள் இது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நேற்று மன்னாரில் இடம்பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட எழுச்சி மாநாட்டில் உரையாற்றும்போதே ஹக்கீட் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் இந்தத் தேர்தல் மிக முக்கியமான ஒன்றாகும். 15 வருடங்களாக நாம் சரியான அரசியல் பலம் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டோம். 

அபிவிருத்திப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாத நிலைமை காணப்பட்டது. இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. முஸ்லிம் காங்கிரசுக்கு வசந்த காலம் பிறந்துள்ளது. 

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த, முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். 

ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம் மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர். 

முஸ்லிம்கள் இது தொடர்பில் மிகவும் கவனமக இருக்க வேண்டும். 

அந்த ஆசாமியின் அரசியல் வாழ்வு இந்தத் தேர்தலுடன் முற்றுப் பெறப்போகிறது. இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டம் அதற்கு சாட்சியம் கூறுகிறது. 

அந்த ஆசாமி மஹிந்தவின் செல்லப் பிள்ளையாக இருந்துகொண்டு வன்னி மாவட்டத்தில் புரிந்த அட்டூழியங்கள் சாமான்யமானவையல்ல. 

அரச ஊழியர்கள் பழிவாங்கப்பட்டார்கள். தொழில் பறிக்கப்பட்டது. மக்களைத் தூண்டிவிட்டு நீதிமன்றத்திற்கு கல் ஏறிய வைத்தார். அந்த இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

மறிச்சுக்கட்டுப் பிரச்சினையையும் தூண்டி தனக்கு விளம்பரத்தைத் தேடிக்கொண்டார். நஞ்சு போத்தலைக் காட்டி தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டி முஸ்லிம் காங்கிரஸில் ஆசனத்தைப் பெற்று இப்போது இந்தக் கட்சிக்கே துரோகியாக மாறியுள்ளார். 

இவர் எமது கட்சியை அழிப்பதற்காகப் பாடுபடுகின்றார். அது ஒருபோதும் நடக்காது. இரத்தம் சிந்தி வளர்த்த கட்சியை எமது போராளிகள் காப்பாற்றுவார்கள். 

அவரின் சதி முறியடிக்கப்படும். இந்தத் தேர்தலுடன் அவரின் அரசியல் வாழ்க்கை முடியப்போகிறது. இன்றோடு அந்த மயில் பறந்துவிட்டது. 

இந்த ஐக்கிய தேசிய கட்சியின் கடிவாளம் எமது கைகளில்தான் இருக்கப் போகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று நாம் ஆட்சியின் மிக முக்கிய பலமான பங்காளியாக இருப்போம். 

எமக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி எழுத்து மூலம் உறுதியளித்துள்ளது. மூன்று ஆசனங்கள் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

வன்னி ஆசனம் எமக்கு நிச்சயிக்கப்பட்டது. அதை எவராலும் பறிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்தபடியாக பலமான கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் விளங்கும். இந்த வன்னி மாவட்டத்தை நாம் முழுமையாக அபிவிருத்தி செய்வோம். 

முல்லைத்தீவு உட்பட முழு வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் வசிக்கும் தமிழ், சிங்கள சகோதர மக்களையும் நாம் கைவிடமாட்டோம். அவர்களுக்கும் எமது அபிவிருத்தி சென்றடையும். 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட எழுச்சி மாநாட்டோடு வன்னியில் இருந்து மயில் பறந்துவிட்டது. ரிசாத் பதியுதீனின் அரசியல் வாழ்வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. 

நஞ்சு போத்தலுடன் முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக அரசியலுக்குள் நுழைந்து இந்தக் கட்சிக்கு நஞ்சு வைக்கத் துடிக்கும் ரிசாத் பதியுதீனின் கதை இந்தத் தேர்தலுடன் முடிவடைந்து விடும் என்றார். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.