புதியவை

தேசத்தை காத்தல்செய் -பாரதி எழிலவன்

எண்ணங்கள் பலவாக இருந்தபோதும் – நம்
     இதயத்தில் ஒற்றுமை நிலைக்கவேண்டும்
வண்ணங்கள் பலவேறு அமைந்தபோதும் – நாம்
     வடிக்கின்ற ஓவியத்தில் ஜீவன்வேண்டும்
திண்ணமாய் தீட்டுகின்ற சொல்லிலெல்லாம் – மனம்
     திடம்கொண்டு செய்கின்ற உறுதிவேண்டும்
கண்ணினால் காணுகின்ற காட்சியெல்லாம்
     கலகங்கள் விளைக்காத காலம்வேண்டும்.

முன்னர்நம் பெரியோர்கள் பொதித்துவைத்தார் –பல
     மதம்சார்ந்த நெறிமுறைகள் வகுத்துவைத்தார்
மன்னர்பலர் திருநாட்டை ஆண்டபோதும் – நல்
     மாண்புகள் தவறாமல் ஆட்சிசெய்தார்
பன்னரரும் புலவோரும் ஞானிகளும் – தாம்
     பகர்ந்தநல் போதனையில் வளமைசேர்த்தார்
தன்னிகரே இல்லாத தியாகிகளால் – நாம்
     தரணியிலே வாழுகின்றோம் மனிதர்களாய்

பல்வகையாய் ஜாதிமதம் அமைந்தபோதும் – அதில்
     பகைமைநெறி யாதொன்றும் பகரவில்லை
நல்லெண்ணம் நல்வினைகள் கொண்டாலன்றி – நாம்
     நாநிலத்தில் சிறப்பதற்கு வழியொன்றில்லை.
சொல்சுத்தம் செயல்சுத்தம் கொண்டவர்க்கு – பாரில்
     சுகபோகம் என்றுமுயர் வாழ்விலுண்டு
கல்நெஞ்சம் கொண்டெவரும் கயமைசெய்தால் –அவர்
     கடவுளரின் பதமலரை அடையமாட்டார்.

அன்னியரின் ஆட்சியிலே முடங்கிவந்தோம் – நாம்
     அடிமைகளாய் தளைபட்டு வாழ்ந்துவந்தோம்
பன்னுயிரும் அக்காலை சொறிந்தசோகம் – பலர்
     பஞ்சத்தில் வாடியுயிர் மடிந்தகோலம்
மன்னுயிரின் தலைமகனாய் காந்திவந்தார் – அவர்
     மரியாதை வேண்டிபல புரட்சிசெய்தார்
தன்னுயிரைத் தந்தவர்கள் அநேகருண்டு – அதில்
     தன்செல்வம் இழந்தோர்கள் பலருமுண்டு.

அகிம்சைநெறி கொண்டுநாம் வாழவேண்டும் – என
     அன்னலாம் காந்திசொன்ன நெறிமறந்தோம்
தகிக்கின்ற மதவாத பெருநெருப்பில் – நாம்
     தவிக்கின்ற பெரும்பாடு சொல்லிமாளா.
வகிக்கின்ற பதவிகளால் முறைதவறும் – நாம்
     வாக்களித்த அரசியலார் கொலைச்செயல்கள்
சகிக்காத அருவெறுக்கும் கற்பழிப்பும் – தினம்
     சகஜமாய் அவனியிலே மிளிர்வதென்னே?

எப்பொழுதும் வடக்கினிலே எல்லைச்சண்டை – அது
     இருப்பினும் நம்முள்ளே மதவாதங்கள்
முப்பொழுதும் கொள்ளைகளும் கற்பழிப்பும் – அதன்
     முடிவுக்கு எப்பொழுது விடிவுகாலம்?
நற்பொழுதாய் விடிகின்ற நாளையெல்லாம் – நாம்
     நமதாக்கிக் கொள்ளும்நாள் எந்தநாளோ?
பொற்பொழுதாய் தினம்தோறும் விடியவேண்டி – நாம்
     பொறுப்புள்ள மாந்தராக வாழவேண்டும்.

நாசத்தை விளைக்கின்ற செயலைவிட்டு – நம்
     நலமெண்ணி நற்செயல்கள் புரியவேண்டும்
பாசத்தை மனத்தினுள் தேக்கிவைத்து – இந்த
     பாரத உயிரிடத்தில் காட்டவேண்டும்.
நேசத்தை நாள்தோறும் வளர்த்துவந்தால் – நாம்
     நிச்சயமாய் வாழ்நாளில் வெற்றிகாண்போம்
தேசத்தை காத்தல்செய வேண்டியென்றும் – நாம்
     தினந்தோறும் கடமையாற்ற பழகவேண்டும்.
                                        ******

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.