புதியவை

கட்டாயப் பயணம் -அனந்த்


ஐயிரு திங்களாய் அன்னையின் உள்ளே கிடந்து
புது உடலெடுக்கத் தவம்செய்த பழம்உயிரே! 

பையஇவ் வுலக வெளியைப் பார்க்க நீ கண்ணைத் திறக்கும்
இக்கணத்தில்இக்கணத்திலேயே

உனக்குக் கடுகளவும் சுதந்திரம் தரப்படாத
கட்டாயப் பயணத்தை
உன்னை அறியாமலே தொடங்கி விட்டாய்!

ஆசையோடு பாசமோடு உன்னை வரவேற்கும்
அன்னைக்கும் அனைவருக்கும் 

அந்த- நினைக்கவே கசக்கும்-
பயணத்தைப் பற்றித் தெரியும்தான், ஆனால்..

நீ பிறந்த போதையில் அதை அவர்கள் மறந்து
மகிழ்ச்சிக் கூச்சலிடுகிறார்கள்போடட்டும், 

அவர்களுடைய கட்டாயப் பயணக் கடுமைகளின் நடுவே
இது போன்ற நேரங்கள் கிட்டுவது அரிது.

இப்போது என்ன செய்வதென்று நீ விழிப்பது
எனக்குத் தெரிகிறது, சொல்கிறேன் கேள்:

தலையிலே தாங்கிச் செல்லும் சுமையை முதலில் இறக்கிவை
அது தொலைந்து போக விடு, போக உதவு.

அடுத்து உரக்கக் கூவு உன்னைப் படைத்தோன் பேரை;
உனக்கு உள்ளே இருக்கும் பாரம் மெதுவாக,
மெதுவாகக் குறையக் காண்பாய்

இனி, பயணத்தின் கடுமை கடுகளவும் உனக்குத் தெரியாது.. 

இதோ பாதையின் முடிவு தெரிகிறது..
இனிதே நடந்து மேலே கடந்து செல்

பாதை இல்லாத பரவெளியை நோக்கி...

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.