புதியவை

'கீறலின் முனையில்' கவிதை நூல் வெளியீடு-நெடுந்தீவு தனுவித்தியாசமாகவும், வெற்றிகரமாகவும் நெடுந்தீவில் கவிதை நூல் வெளியீடு
நூல் வெளியீடுகளில் இன்னுமொரு புதுமை ஈழத்தின் நெடுந்தீவின் மண்ணில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. செல்லமுத்து வெளியீட்டகம் வெளியீடு செய்த நெடுந்தீவு தனு எழுதிய 'கீறலின் முனையில்' கவிதை நூல் வெளியீடு நெடுந்தீவின் பழமை வாய்ந்த மீகாமன் கோட்டை அருகிலான கல் வேலிகளுக்குள் 25.08.2015 செவ்வாய்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்றது. அரசியல் பாட ஆசிரியர் ஜேக்கப் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். வித்தியாசமான முறையில் கற்களிடையே வைக்கப்பட்ட சங்குகளிலான சுடர்கள் ஏற்றப்பட்டன. நெடுந்தீவின் குதிரைகளும் நிகழ்வில் பங்கேற்கச் செய்யப்பட்டமையானது யாவரையும் கவர்ந்தது. வரவேற்பு நடனத்தினை கனடாவில் இருந்து வருகை தந்த செல்வி மருதா வழங்கினார். வரவேற்புரையினை செல்வி ரோகிணி வழங்கினார். வாழ்த்துக் கவியினை பிள்ளைக்கவி ஜொய்சி வழங்கினார். வாழ்த்துரையினை நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர் பெரிய ஐங்கரன் வழங்கினார். அறிமுக உரையினை செல்லமுத்து வெளியீட்டக இயக்குனர் யோ.புரட்சி வழங்கினார். நூலினை கவிஞர் நெடுந்தீவு தனு அவர்களின் தாயார் ஜான்மேரி அவர்கள் வெளியிட்டு வைக்க நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஜெயக்காந்தன் அவர்கள் முதற்பிரதியை பெற்றுக்கொண்டார். வெளியீட்டாய்வுரையினை இலக்கிய விமர்சகரும், கவிஞருமான பொலிகையூர் சிந்துதாசன் அவர்கள் நிகழ்த்தினார். விசேட நிகழ்வாக கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்கள் தலைமையில் "நாலு பேருடன் நல்லாய்ப் பழக" எனும் சுவாரசியமான கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான மல்லாவிக் கஜன் ,வட்டக்கச்சி வினோத், நெடுந்தீவு அரவிந்தன், மன்னார் பிரதீப், யாழ் சங்கீதா ஆகியோர் பங்கெடுத்தனர். கனடா படைப்பாளிகள் உலகம் சார்பாக கவிஞர் நெடுந்தீவு தனு, பதிப்பாளர் விஜய் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். காவலூர் அகிலன் அவர்களின் பாராட்டுக் கவியைத் தொடர்ந்து ஏற்புரையினை கவிஞர் நெடுந்தீவு தனு அவர்கள் வழங்கினார்.
நெடுந்தீவு உறவுகளுடன் நெடுந்தீவின் வெளிப்பிரதேசங்களில் இருந்தும் அதிகமானவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த கவிநூலிற்கான அணிந்துரையினை கனடா படைப்பாளிகள் உலகம் நிறுவுனர் ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்களும்,வாழ்த்துரைகளை டென்மார்க் வேதா இலங்காதிலகம் அவர்களும், கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்களும், ஆசியுரையினை இந்தியாவிலிருந்து அருட்பணி அக்னல் அமலன் அவர்களும், பதிப்புரையினை வவுனியா விஜய் அச்சக உரிமையாளர் விஜய் அவர்களும் பின் அட்டைக்குறிப்பினை யோ.புரட்சி அவர்களும், ஆசிரியர் பகிர்வினை கவிஞர் நெடுந்தீவு தனு அவர்களும், கவிதை தொடர்பான கடிதப் பகிர்வினை டென்மார்க் ரதிமோகன் அவர்களும் வழங்கியுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.