புதியவை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலை பதவி நீக்க முடிவு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலை பதவி நீக்க முடிவுகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது என அக்கட்சியின் அதிஉயர் பீடம் தீர்மானித்துள்ளது. 

அத்துடன் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீதின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடக் கூட்டம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றபோதே இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து, அக் கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றார். 

இது தொடர்பில் அவரிடம் கட்சியின் செயலாளரினால் விளக்கம் கோரப்பட்ட போதிலும் இன்னும் பதிலளிக்காததன் காரணமாக அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் கட்சியில் அவர் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது என மு.கா. அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளது. 

அத்துடன் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக் கட்சியில் இருந்து விலகுவதாக எஸ்.எஸ்.பி.மஜீத் அனுப்பியிருந்த இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொள்வது எனவும் அதன் பிரகாரம் அவரது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வது எனவும் அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளது. 

ஏ.எம்.ஜெமீலின் வெற்றிடத்திற்கு விருப்பு வாக்கு அடிப்படையில் எஸ்.எஸ்.பி.மஜீதே பட்டியலில் அடுத்த நிலையில் இருந்து வருகிறார் என்பதினாலேயே கட்சி அவரது உறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. 

பட்டியலில் மஜீத்துக்கு அடுத்த நிலையில் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இத் தீர்மானங்களை தேர்தல்கள் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிப்பது என ஏகமனதாக முடிவு செய்த அதியுயர் பீடம், கட்சியின் செயலாளர் நாயகத்திடம் அதற்கான வேண்டுகோளை முன்வைத்துள்ளது. 

அதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.ரம்.மன்சூரின் வெற்றிடத்திற்கு சம்மாந்துறையை சேர்ந்த ஐ.எல்.எம்.மாஹிரை உறுப்பினராக நியமிப்பதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.