புதியவை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த ஓர் தொகுப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த ஓர் தொகுப்பு

இலங்கை அரசியல் மற்றும் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமைந்த 1977 ஆம் ஆண்டு தேர்தலில் பியகம தொகுதியில் வெற்றியீட்டி முதற்தடவையாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
அப்போது 27 வயதான ரணில் விக்ரமசிங்க அன்றைய அமைச்சரவையில் இளம் அமைச்சராக செயற்பட்டார்.
கல்வி, இளைஞர் விவகாரம் – தொழில்வாய்ப்பு மற்றும் கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய ரணில் விக்ரமசிங்க தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கு முன் நின்று செயற்பட்ட ஒருவராவார்.
மக்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைவரான விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை 1994 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டார்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கட்சி மற்றும் கட்சி அங்கத்தவர்களை ஒன்றிணைத்துக்கொண்டு அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டார்.
இலங்கையின் மிக நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளார்.
20 வருட காலம் அவர் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுதந்திர இலங்கையின் 22வது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். 
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பிரதமர் பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதனிடையே, நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற பெருமைக்குரியவர் என்ற வகையில் நடந்து முடிந்த தேர்தலில் 5,00,566 விருப்பு வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக 1993 ஆண்டு மே 7 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அப்போதைய ஜனாதிபதி டீ. பி. விஜேதுங்கவின் முன்னிலையிலேயே அன்று சத்தியப் பிரமாணம் இடம் பெற்றது. 22 வருடங்களுக்குப் பின்னர் தற்போது 22 ஆவது பிரதமராகப் பதவியேற்றிருக்கின்றார்.
1993 ஆம் ஆண்டு அவர் பிரமராகப் பதவியேற்க முன்பதாக கைத்தொழில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இரண்டாவது முறையாக 2001 டிசம்பரிலும் மூன்றாவது முறையாக இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலும் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டவராவார்.
சுதந்திர இலங்கையின் பிரதமர்களாக டீ.எஸ்.சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர் ஜோன்.கொத்தலாவல, விஜயானந்த தஹநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, டீ.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரத்னசிறி விக்ரமநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ, டி.எம்.ஜயரத்ன ஆகியோர் பதவி வகித்துள்ளமை குறிப் பிடத்தக்கது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.