புதியவை

பெற்றோர் கலக்கம் - பாவலர் கோ. மலர்வண்ணன்


பெண்ணைப் பெற்றவர் பெருந்துய ருற்றுக்
கண்ணீர் வடிக்கும் காலமாய் விட்டதே!
மகளைப் பெற்ற நாள்முதல் அவளுடன்
நிகழும் உறவுகள் நினைக்கக் கொஞ்சமா?
திருமகள் போல ஒருமகள் பிறந்ததாய்ப்
பெருமிதம் கொண்டு பேசி மகிழுவர்!
தொட்டிலில் கிடத்தித் தூங்கவைப் பதற்குமெட்டுடன் தாலாட் டிசைத்து மகிழுவர்!

பூங்கை கால்களைப் பாங்குடன் அசைக்கும்
ஆங்கவள் மழலை கேட்டுமெய் மறப்பர்!
குறுநடை அழகிலும் குறுமொழி இனிப்பிலும்
துறுதுறு செயலிலும் சொக்கிக் கிடப்பர்!
புத்தகப் பையுடன் புறப்படும் வனப்பு
மெத்தவே படிக்கும் திறன்கண் டுவப்பர்!
கவினுற வளரும் கண்மணி யாளைப்
புவியினுக் கணியாய்ப் போற்றி வளர்ப்பர்!
புன்னகை மகட்குப் பொன்நகை பூட்டிக்
கண்ணேறு கழித்துக் களிப்படைந் திருப்பர்!
தங்குலம் தழைக்கப் பிறந்தபெண் மகளைத்
தங்களின் உயிர்போல் காத்து வளர்ப்பர்!
ஒவ்வொரு நிகழ்விலும் உறவினை வளர்த்தவர்
தெவ்வரின் கொடுஞ்செயல் தாங்கப் பொறுப்பரோ?
கிள்ளையை வளர்ப்பது பூனைகள் புசிக்கவா?
பிள்ளைகள் காமுகர் கைகளில் கசங்கவா?
காமுகர் கண்களில் படாமல் வளர்ப்பது
பாமரர் களுக்குக் கூடுமோ? ஐயகோ!
அலுவலின் பொருட்டுப் புறத்தே செல்மகள்
நலமுடன் திரும்பும் நொடிவரை தவிப்பே!
வெறிகொள் காமுகர் பெண்நலன் கெடுத்திடில்
பொறுத்துக் கொள்வரோ பெண்களைப் பெற்றவர்?
பெண்ணைப் பெற்றவர் பெருந்துய ருற்றுக்
கண்ணீர் வடிக்கும் காலமாய் விட்டதே!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.