புதியவை

பிரார்த்தனை - ஷைலஜா


“ரம்யா.. நான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்..” 

 எட்டு முழ வேட்டியும், முழுக் கை சட்டையுமாய், நெற்றி நிறைய திருநீறுடன்…முகமெல்லாம் சிரிப்புடன் சமையலறைக்குள் எட்டிப்பார்தான் கோகுல்.

 ”ம்....செண்ட் மணம்  ரொம்பவே கமகமக்குது..கோயிலுக்குத்தான் போறியா.. இல்லே...?”ஓடிக்கொண்டிருந்த மிக்ஸியை நிறுத்தி விட்டு கிண்டலாகக்கேட்டாள் சகோதரி  ரம்யா..


“கோகுல்..! போறதுதான் போறே..உங்கப்பாவையும் கையோடு கூட்டிட்டுப் போயேன்.. பாவம் சொல்லிக் கிட்டே இருந்தாரு…யாராவது துணைக்கு இருந்தா தான்  அவரால போகமுடியும்.. நீதான் போற இல்ல, உன்னொடு சேர்ந்து அவரும் சாமி கும்பிட்டமாதிரி இருக்கும்….…. இன்னிக்கு ப்ரதோஷம் வேற….” அம்மா சொன்னாள்.

”. என்னது அப்பாவைக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்றியா..?என்னால முடியாதும்மா....ரொம்ப நிதானமா நடக்கறார்.. எனக்கு அந்த அளவு பொறுமை இல்ல..”

”வயசாயிருச்சில்லையா கோகுல்..அப்படித்தான் நடப்பாரு...நாமதான் பொறுமையா கூட்டிட்டுப்போகணும்”

”அதெல்லாம்  வேண்டாம் அவர் வீட்டிலேயே இருக்கட்டும்…”

”காரை எடுத்துக்கிட்டுப் போயேன் கோகுல்..”

“கார் கோயில் வரைக்கும் தான் போகும்..உள்ளே வெகு தூரம் நடக்கணும்..”

“அவர்  மெல்லநடந்து வருவார்.. உனக்கு வேற எந்த சிரமமும் இருக்காதுப்பா...”

”இன்னிக்கு. எனக்கு நிறைய வேலை இருக்கு சீக்கிரமா போகணும்,, அவர் நடக்கற நடைக்கு  நானும் நடந்தா எந்த வேலையும் நடக்காது” 
.’  அவசரமாகக் கிளம்பி வெளியே வநதவன் அதே வேகத்தில் நடந்து கோயிலுக்குள்ளும் சென்று சிறப்பு தரிசனம் டிக்கெட் வாங்கி பதினைந்தே நிமிடத்தில் சாமி கும்பிட்டு விட்டு வெளியேயும் வந்து விட்டான்…அப்பாவுக்காக  பிரார்த்தனைகூடப்பண்ணவில்லை.

அப்பாவைக் கூட்டி வந்திருந்தால்.. இந்நேரம்  சாமி கூட பார்த்திருக்கமுடியாது.’என்று நினைத்துக்கொண்டே நடந்தபோது அவன் பேரைச்சொல்லி ஒருவர் அழைத்ததும் திரும்பிப்பார்த்தான். அப்பாவின் ஆத்ம நண்பர்!

” கோகுல்!..எப்படிப்பா இருக்கே.?. பார்த்து ரொம்ப நாளாச்சு  அப்பா எப்படியப்பா இருக்கிறார்?”

” நல்லாஇருக்கார் மாமா.. ஆனா நடக்கக்கொஞ்சம் சிரமப்படுறார்”

” எப்படி கம்பீரமா நடந்தவரு!உனக்கு அப்போ ஏழு, இல்ல எட்டு வயசிருக்கும்.. முகத்துலபெரியம்மை மாதிரி போட்டிடுச்சி உடனே…நடந்தே  சமயபுரம் கோவிலுக்கு வர்ரதா வேண்டிக் கிட்டார்….சென்னை எங்கே.. திருச்சி எங்கே.! .வேண்டிக்கிட்ட மாதிரி நடந்தே போயிட்டு வந்தார்.. நல்ல வேளை.. பெரியம்மை குணமாகி உன் முகத்திலே.. எந்த வடுவும் இல்லாம தப்பிச்சிட்டே..எல்லாம் உங்க அப்பாவோட பிரார்த்தனைதான்”’

கோகுல் தன்னையும் அறியாமல் தன் கன்னத்தை தடவிக்கொண்டான்..!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.