புதியவை

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்


புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அதிகபட்சமாக 48 அமைச்சர்களை நியமிப்பதற்கான பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளது.
அவர்களுள் 43 பேர் நேற்று நியமிக்கப்பட்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 31 அமைச்சர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில்
11 அமைச்சர்களும் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 4 பேர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
இதேவேளை, புதிய அமைச்சரவையை நியமித்த போது, இதுவரையில் காணப்பட்ட அமைச்சுகளுக்கு மேலதிகமாக வேறு சில அமைச்சுக்களும் சேர்க்கப்பட்டிருந்தன.
தேசிய கலந்துரையாடல்கள், சமூக வலுவூட்டல், டிஜிட்டல் அடிப்படை வசதிகள், பாரம்பரிய கைத்தொழில், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மாநகர அபிவிருத்தி ஆகியன புதிய அமைச்சுக்களாகும்.
இதேவேளை, பாராளுமன்ற அனுமதிக்கு அமைய அதிகபட்சமாக 45 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அதன் பின்னரே பாராளுமன்ற ஆசனங்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
6 அரசியல் கட்சிகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது சபாநாயகர் அறிவித்தார்.
அதன் பிரகாரம் ஆசனங்கள் வழங்கப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏனைய சிறு கட்சிகள் மற்றும் கட்சித் தலைவருக்கான சலுகைகளற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பில் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.
கட்சித்தலைவர் சலுகைகள் கிடைக்காத போதிலும் பாராளுமன்ற செயற்குழுக்களில் செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.