புதியவை

எச்.ஐ.வி பாதிப்பிற்குட்டவர்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய 20 வருடங்களின் பின் அனுமதி

எச்.ஐ.வி பாதிப்பிற்குட்டவர்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய 20 வருடங்களின் பின் அனுமதி

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய இருபது ஆண்டுகளுக்குப்பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் கடந்த 1980-களின் இறுதியில் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் கடைசி நிலையான எய்ட்ஸ் நோயாளிகளுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.
இதனால், ஒரு உயிர்க்கொல்லி நோயாக எய்ட்ஸ் அடையாளம் காணப்பட்டது. இது தொற்றுநோயாக இருக்கலாம் என அஞ்சப்பட்டதால், இந்நோய் தாக்கியவர்கள் பல நாடுகளுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் இந்நோய், தகாத – பாதுகாப்பற்ற உடலுறவு, பிறரின் ரத்தத்தை உரிய பரிசோதனை இல்லாமல் செலுத்துவது, எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்திய ஊசியை சரியான முறையில் சுத்திகரிக்காமல் மீண்டும் பயன்படுத்துவது போன்றவற்றால் மட்டுமே பரவும் எனவும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பு காட்டி அவர்களுடன் தங்கி இருப்பதால் நமக்கும் பரவும், அபாயம் இல்லை எனவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இதனால், பல்வேறு நாடுகளில் இந்த நோய்மீது இருந்த தவறான கண்ணோட்டம் நீங்கியது. இந்நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிடினும், நோயுடனே நீண்ட ஆயுளுடன், குடும்பம் மற்றும் நண்பர்களின் அரவணைப்போடும் அவர்கள் வாழ இதனால் வழிபிறந்தது.
இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டிற்குள் எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் நுழைய, கடந்த இருபது ஆண்டு காலமாக நீடித்துவந்த தடை, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீக்கப்பட்டு விட்டதாக இந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் 4 வாரம் முதல் 3 மாதம் வரை சுற்றுலா பயணிகளாக தங்கியிருக்க அனுமதித்துள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
எனினும், அவர்கள் வேலைக்காகவோ அல்லது குழந்தைகளின் கல்வியை கவனித்துக் கொள்ளவோ மூன்று மாதத்திற்கும் மேலாகவோ, நீண்ட காலத்துக்கு அங்கேயே தங்குவதற்கு இருக்கும் தடை நீக்கப்படவில்லை.
சிங்கப்பூரின் குடிமக்களில் சுமார் 5000 பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள், அதற்கான சிகிச்சையை இங்கேயே பெற்று வருகின்றனர். எனினும், வெளிநாட்டவர்களின் வருகை இந்நோயை மேலும் அதிகமாக பரவச் செய்யலாம் என்று அஞ்சுவதாலேயே தற்போதைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுற்றுலாவுக்குக்கூட ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் நுழைய இன்றளவும் தடை நீடித்து வரும் அவலம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.