புதியவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64 ஆவது பிறந்த தினம் இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64 ஆவது பிறந்த தினம் இன்று

62 இலட்சம் இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்டு இன்று நாட்டை நல்லாட்சியின் பக்கம் வழிநடத்தும் இலங்கைத் திருநாட்டின் தலைமகனாக மிளிரும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் 64 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
1951 ஆம் ஆண்டு பொலன்னறுவையில் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் மூத்த புதல்வராக பிறந்தவர்தான் சத்தியம் தவறாத, நோ்மையானதொரு அரசியல் தலைவராகத் திகழும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
தொபாவேவ (Thopawewa) மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் பயின்ற மைத்திரிபால சிறிசேன, இளமைப்பருவத்திலேயே அரசியல் மீது கொண்ட ஈா்ப்பினால் தனது தந்தையாரின் அரசியலுக்கு மாற்றமான அரசியல் பாதையில் பயணித்தார்.
தன்னுடைய 17வது வயதில், சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னருவை மாவட்ட இளைஞா் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் அரசியல் ஆர்வத்தால் மக்கள் விடுதலை முன்னணியால், அப்போதைய அரசுக்கெதிராக 1971 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த கிளர்ச்சியில் இவர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது இளமைப்பருவம் முதலே இலங்கை அரசியலில் பல அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட மைத்திரிபால சிறிசேன, தனது அரசியல் பயணத்தில் பல மேடு பள்ளங்களை சந்தித்தவர்.
1978ம் ஆண்டு சிறீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின் அகில இலங்கை இளைஞா் அணியின் தலைவராக செயற்பட்டார்.
தனது 38ஆவது வயதில் பொலன்னறுவை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நீர்ப்பாசன பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சராக 1997 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற மைத்திரிபால சிறிசேன சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் பதவி வகித்தார். அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு இலங்கையின் 13 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, அமைச்சரவை அந்தஸ்துடைய மகாவலி, ஆற்றுப்படுக்கை மற்றும் ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார்.
இலங்கை அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு சுற்றாடல், நீர்ப்பாசன, மகாவலி அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சர், சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் என்ற இரு அமைச்சுப் பதவிகளை 2005 ஆம் ஆண்டு வகித்தார்.
2007 இல் இவர் விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அமைச்சின் விவசாய அபிவிருத்தி முன்முயற்சியான “பயிர் வளர்ப்போம் – நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த மைத்ரிபால சிறிசேன அவர்களால் முடிந்தது. இது இலங்கையில் விவசாயத்துறையின் நிலைபேற்றுத்தன்மையைப் பேணும் வகையிலான துரித பயிர் உற்பத்தி அடங்கலாக இலங்கை முழுவதும் விவசாய மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.
2009 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்த சமயம், மைத்திரிபால சிறிசேன ஐந்து தடவைகள் இலங்கையின் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். போரின் இறுதி நாட்களில் ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், இவரே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றினார்.
2010 ஆம் ஆண்டு மைத்ரிபால சிறிசேன மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இலங்கையில் புகைத்தலை தடுப்பதில் காட்டிய அர்ப்பணிப்பிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் 2013 ஆம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு நாளுக்கான(‘World No Tobacco Day Award 2013′) விருதை வென்றார்.
2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொதுச் சுகாதார ஹார்வாட் கல்லூரி மற்றும் கென்னடி அரச கல்லூரியின் ‘சுகாதாரத்துறை சார்ந்த அமைச்சு மட்ட ஹார்வாட் விருதைப்’ பெற்றார். இந்த விருது இலங்கையின் சுகாதார அமைச்சராக புதுமை மிக்க தலைமைத்துவத்தில் கொண்டிருந்த திடசங்கற்பத்திற்காக வழங்கப்பட்டது.
புகைத்தலின் தீமைகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு புகையிலை / சிகரட் பக்கற்றுக்களில் ‘எச்சரிக்கைப் படங்களை’ அச்சிடும் நடைமுறையை அறிமுகப்படுத்த பாடுபட்டார். இறுதியில் தமது முயற்சியில் வெற்றியும் பெற்றார்.
பொலன்னறுவையில் ஆரம்பான மைத்திரிபால சிறிசேன அவா்களின் அரசியல் பயணம் 06 தசாப்தங்களை கடந்து செல்கின்றது. பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி விடியும் வேளையில் இலங்கையின் 06 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
ஜனவரி 08 இலும் ஆகஸ்ட் 17 இலும் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று தன்னுடைய வாழ்வின் முக்கியமான பயணத்திற்காக தன்னுடைய 64வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.
சுதந்திர இலங்கையின் எதிர்காலம் ஔிமயமானதாக மிளிர வேண்டுமென்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பயணம் வெற்றிபெற நாட்டு மக்கள் அனைவர் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்திக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.