புதியவை

நேர்காணல் - புலவர் அதிரை கவியன்பன் கலாம் அபுதாபி

சர்வதேச மட்டத்தில் தனக்கு என்று ஓர் தனி இடத்தைப் தக்க வைத்துக்கொண்டவர், சிறந்த புலவர்  அதிரை கவியன்பன் கலாம் அபுதாபி 
 அவர்களுடன் ஓர் நேர்காணல்  - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 


01) உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?உங்களைப் பற்றிக்  கூறுங்கள்?

இந்தியா என் தாய்நாடு; மாநிலம் தமிழ்நாடு;மாவட்டம் தஞ்சாவூர்; ஊர்: அழகிய
கடற்கரைக் கிராமம் “அதிராம்பட்டினம்” ; என் வாப்பா 1957 வரை உங்களின்
இலங்கையில் - கொழும்பில் வணிகம் செய்தவர்கள்;பின்னர் இனக்கலவரத்தால்
இந்தியாவிற்குத் திரும்பி வந்து வணிகம் செய்தார்கள்.(இப்பொழுது என்
சாச்சா மட்டும் குடும்பத்தோடு கொழும்பில் இருக்கின்றார்கள்) அதனாற்றான்
எனக்கும் இயல்பாகவே இலங்கையர்கள் மீது அளவற்ற பிரியம் உண்டாகின்றது.
நானும் வணிகவியலில் ஆர்வம் கொண்டவனாதலால் வணிகவியல் பட்டம் பெற்றவன்
(பி,காம்) 1980 முதல் இன்று வரை அயல்நாட்டின் பிழைப்பில் வாழ்கிறேன்.
எனக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மருமகன்(மகளின் கணவர்) மற்றும் அழகும்
அறிவும் நிறைந்த பேரன் மகள் வழி) அடங்கிய ஒரு சிறு குடும்பம். என்னுடன்
பிறந்தவர்கள் 2 அக்காள்கள், 2 தங்கைகள், ஓர் அண்ணன், ஒரு தம்பி. உம்மா
அவர்கள் காலமாகி விட்டார்கள். வாப்பா அவர்கள் இருக்கின்றார்கள் 

02) எழுத்து தொடக்கம் எப்படி தொடங்குகியது?

1973ல் பள்ளியிறுதியாண்டில் “யாப்பிலக்கணம்” வகுப்பில் தமிழாசிரியர்
நடத்திய விளக்கங்களால் ஈர்க்கப்பட்டு அன்றே ஒரு வெண்பாவை வரைந்தேன்.
(இலக்கணம் என்றால் தலைக்கனக்கும் என்று கைப்புடன் மற்ற மாணவர்கள் எல்லாம்
அவ்வகுப்பை  அவதானிக்காத பொழுது யான் மட்டுமே அவ்வகுப்பில் மிகவும்
ஈடுபாட்டுடன் இருந்ததை அவதானித்த என் தமிழாசான் புலவர் திரு. சண்முகனார்
அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்) அன்று தொடக்கம் இன்று வரை
யாப்பிலக்கணமும், மரபுவழியும் என்னுயிராய் ஒட்டிக் கொண்டன. அவ்வாசானின்
அறிவுறுத்தலுக்கிணங்க “நூலகமே என் உலகம்” என்று அவ்விளம் வயதில்
வாசிப்பில் நேசிப்பைக் கொண்டேன். குறிப்பாக, யாப்பின் வகைகளில் எல்லா
வகைப் பாடல்களையும் வாசிக்க  வேண்டும் என்ற பேரவா கொண்டேன். இடையில் பணி
நிமித்தம் அயல்நாடுகள் (சவூதி, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள்)
சென்றதால் எனக்கு இருந்த ஈடுபாடும் குன்றியது.


03) தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான (ஒரு ஆசிரியர்) உங்கள் நெருக்கம்
பற்றி சொல்லுங்கள்?

முதலில் சொன்ன என் தமிழாசிரியர் மட்டுமல்ல, எங்களூரின் தமிழறிஞரும்,
எழுத்தாளரும், கவிஞருமான “அதிரை அஹ்மத் காக்கா” அவர்கள் என்னை மேலும்
ஊக்கப்படுத்தினார்கள்; அவர்கள் என் வலைத்தளத்தில் வருகை புரிந்து ஒரு
பின்னூட்டம் எழுதினார்கள் இவ்வாறு:
இற்றைப் பொழுதினில் மரபுவழியினைப் பற்றிப் பிடித்தால் தமிழறிஞர்களின்
பட்டியலில் இடம் பெறுவாய்” என்ற ஆசியுடன் வாழ்த்துரை அளித்தார்கள்; அன்று
முதல் மீண்டும் யாப்பிலக்கணம் மேலும் கற்க அவர்களின் துணை நாடினேன்;
மேலும், என் எழுத்தில் உண்டாகும் ஒற்றுப்பிழைகள்/ சந்திப்பிழைகள் கண்டு
அவற்றைத் திருத்தும் நல்லாசானாகவும் அவர்கள் விளங்குகின்றார்கள்.
துபையில் ஒரு கவியரங்கத்தில் இலங்கைக் காப்பியக்கோ ஜின்னா ஷரிஃபுத்தின்
வாப்பா அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்! அவர்களும் ,”என்னைப் போல்
மரபு வழிப்  பாக்கள் படைப்பதில் கவியன்பன் கலாம் எனக்கு வாரிசாக
இருப்பார்” என்று வாழ்த்துரை அளித்தார்கள்.
இணையத்திலும், முகநூலிலும் எனக்கு யாப்பிலக்கணம் கற்பிக்கும் ஆசான்களாக:
கலைமாமணி இலந்தையார் (நியூ ஜெர்சி - “சந்த வசந்தம் இணையம்” நிறுவனர்)
மற்றும் புதுவையில் வாழும் புலவர் இராஜ. தியாகராஜனார் ஆகியோரும் என்
வழிகாட்டிகளாய் நின்று யாப்பின் எல்லா வகைப் பாக்களையும் இயற்றும் திறனை
என்னிடம் வழங்கி வருகின்றார்கள்.

04) மரபுக் க்கவிதைகள் எழுதுவதிலும் நாட்டம் செலுத்துகிறீர்கள்
புதுக்கவிதை யும் எழுதி வருகின்றீர்கள் இதில் எதில் மன திருப்தி
பெறுகின்றீர்கள் ?


உண்மைதான். முன்னர்ச் சொன்னபடி 1974 முதல் மரபுப் பாவின்பால் நாட்டம்
அதிகம் உண்டானது; இடையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “இதுவரை நான்”
என்னும் கவிதைத் தொகுப்பைப் படித்தேன்; அதுவரை நான் மரபென்னும் கடலை
விட்டு, புதுமை என்னும் நதியில் நீராடத் துவங்கினேன். எளிமையாக
இருந்தாலும், என் மனம் மரபில் தான் மீண்டும் கலக்கின்றது; அதற்கு என்
ஆசான்களின் ஆசி கற்றான் காரணியமாக அமையும் என்று நினைக்கிறேன். மரபுப்பா
இனிமை; புதுக்கவிதை என்பது புதுமை; துளிப்பா(ஹைகூ) எளிமை என்ற
கண்ணோட்டமும் என்னிடம் உண்டு. புதுக்கவிதையில் ஓர் உணர்வின் உயிரோசையைக்
காண்கிறேன். அதனால் மூன்று வகையிலும் என்னால் இயற்ற முடியும்; நான் கவிதை
எழுதவில்லை; கவிதையாய் வாழ்கின்றேன்! தமிழே என் மூச்சு; கவிதையே என்
பேச்சு!

05) முத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாக
வழிகாட்டகிறார்களா?

ஆம். வாசிப்பில் நேசிப்பைக் கொண்டவன் என்பதாலும், படிப்பாளிதான்
படைப்பாளியாக ஆக முடியும் என்பதும் என் வாழ்வின் ஆரம்பப் பள்ளிக்
காலத்திலும் உணர்ந்தவன். நூலகமே என் உலகம் என்று வாழ்ந்தவன்; இன்று,
இணையமே என் இருதயம் என்று வாழ்கிறேன்.
"தாய்” வார இதழின் ஆசிரியர்- வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின்
எழுத்து நடையை வாசித்தேன்; புதுக்கவிதையை நேசித்தேன்
என்றும் நான் போற்றும் கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்களின் படைப்புகளை
வாசிப்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவன்; அவர்களை நேரில் காணும் பேறு
பெற்றவன்.
என்றும் என் மானசீகக் குருவாகக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை
முன்னிறுத்திக் கொண்டு அவர்கள் எப்படி எல்லாம் உணர்வின் ஓசையுடன்
கவிதைகளைப் படைக்கின்றார்கள் என்று அவர்களின் கவியரங்க விழிமங்களைத்
தேடிக் கேட்கிறேன்.
முன்னர்ச் சொன்ன, என் ஆசான்களின் படைப்புகளை நேராகப் பெற்றும், இணையம்
வழியாக மின்மடலில் பெற்றும் வாசிக்கிறேன்; அவர்களின் படைப்புகளில் எப்படி
இலக்கணங்களைக் கையாள்கின்றனர் என்று உன்னிப்பாக அவதானிக்கிறேன்.

07) படிப்பிப்போடு எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?

இல்லவே இல்லை; இளமையில் கல் என்பது போல், இளமையில் எழுது என்று எனக்குள்
ஏற்பட்ட ஓர் இனம் புரியாத பேரவா என்னுள் தீயாய் இருப்பதால் என்னால்
எழுதுவதை ஒரு சிரமமாக  நினைப்பதில்லை; ஆயினும், தற்பொழுது உடல்நிலை
ஒத்துக் கொள்ளாத நிலைமையைக் கண்டு என் துணைவியார் அவர்களும்,என்
நண்பர்களும், என்னுடன் பணியாற்றும் மேலாளர்களும் என்னைக் கடிந்து
கொள்கின்றனர் “ நீ எழுதுவதை நிறுத்தினால் உன் உடல் நலம் பெறும் ‘ என்று.
ஆனால், என் மனம் எழுத்திலும், கற்பதிலும், கற்பிப்பதிலும் தான் பேரின்பம்
அலாதியான ஓர் ஆன்மத் திருப்தியை அடைவதை உணர்கிறேன்; தேனின் இன்பம்
என்பதைச் சுவைத்தவர்க்கு மட்டும் தான் தெரியும்; புரிய வைக்க இயலாது!

08) சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன?

எல்லாம் கவிதைகள் என்று வலம் வருகின்றன என்பதைத் தான் ஏற்க மறுத்தாலும்,
உணர்வின் ஓசை யாகவே ஒலிக்கின்ற அவ்வரிகள் கவிதையின் தாக்கத்தை
ஏற்படுத்தத்தானே செய்கின்றன என்ற ஓர் உடன்பாட்டால் உளமேற்கும் நிலையில்
உள்ளேன். ஆயினும், எந்த விதமான இசை/ஓசை நயமோ, எதுகை மோனை கூட இல்லாமல்,
வரிகளை மடக்கி, மடக்கி எழுதி விட்டால் அதுவும் கவிதையாகும் என்ற ஓர் அவல
நிலையைத் தான் என் மனமும் கவிதையின் உண்மையான ஆர்வலர்கள்/ பாவலர்கள்
எல்லாரும் ஏறக மறுக்கின்றனர்.
மரபுப்பாக்களை என் ஆசான் இலந்தையார் அவர்கள் நடத்தும் “சந்த வசந்தம்”
என்னும் இணையத்திலும், புதுவைப் புலவர் இராஜ.தியாகராஜனார் அவர்களின்
முகநூல் பக்கத்திலும் வாசிக்கிறேன்
புதுக்கவிதைகளைக் கவிஞர் கனடா புகாரி, கவிஞர் பொத்துவில் அஸ்மின்,கவிஞர்
பரங்கிப்பேட்டை இப்னுஹம்தூன், கவிஞர் குவைத் வித்யாசாகர், அதிரை
கவிவேந்தர் சபீர் அபுசாருக்ஹ், முத்துப்பேட்டை கவியருவி மலிக்கா ஃபாருக்,
 கவிதாயினிஆச்சி தேனம்மை, கவிதாயினி வேதா இலங்காதிலகம் மற்றும் என்
முகநூல் நண்பர்களின் படைப்புகள் வழியாகவும் தேடித் தேடி வாசிக்கிறேன்
நவீனக் கவிதைகளைக் கவிஞர்கள் இத்ரீஸ்,சோலைக் கிளி  மற்றும் ஸமானின்
கவிதைகளில் காண்கிறேன்
ஹைகூ என்னும் துளிப்பாக்கள்: என் மின்மடல் தேடி வந்து விழுகின்றன;
குறிப்பாக மதுரை இரா.இரவி. மற்றும் ரமேஷ் போன்ற ஹைகூ கவிஞர்களின் ஹைகூ
கவிதைகள் என் மின்மடலுக்கு நாடோறும் வருகின்றன.; அவைகளை இரசித்து
வாசிப்பேன்.

09) கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு எந்தளவில்
உதவுகின்றன.

கவிதைக்கான இணையத் தளங்களாகவே நான் தேடித் தேடி \இரவெலாம் விழித்து
இணையத்தில் புகுந்து நுழைந்து அனைத்துக் கவிதை விரும்பும் தமிழ்த்
தளங்களிலும் என் படைப்புகளை வரவேற்கும் வண்ணம் நெருங்கிய நட்பை
வைத்துள்ளேன்: அவற்றுள்

தமிழ்த்தோட்டம்
தமிழ்மணம்
நீடூர்சன்ஸ்
முதுகுளத்தூர்டைம்ஸ்
அய்மான் டைம்ஸ்
அதிரைநிருபர்
அதிரை எக்ஸ்பிரஸ்
சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள்
மற்றும்
இலண்டன் தமிழ் வானொலியின் “பா முகம்”

,முகநூலின் கவிதைக் குழுமங்கள்

 சங்கமம் தொலைக்காட்சி,துபை
அய்மான் சங்கம், அபுதபி
பாரதி நட்புக்காக, அபுதபி
யு ஏ இத் தமிழ்ச் சங்கம்
வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு,துபை
தமிழர்ப் பண்பாட்டு நடுவண் கழகம், துபை
துபாய்த் தமிழர்ச் சங்கமம்

ஆகிய தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள்/ கவியரங்குகளில் என் கவிதைகள்
வரவேற்கப்பட்டுள்ளன.
குறிப்பாக: வானலை வளர்தமிழ் என்னும் இலக்கிய அமைப்பு மாதந்தோறும்
நடத்தும் கவியரங்கில் ஒரு கவியரங்கில் என்னைத் தலைமைக் கவிஞராய் அமர
வைத்து 33 கவிஞர்களை என் “மரபுப்பாவில்” அவர்களின் திறன் கூறிக் கவிபாட
அழைக்கும் பெரும்பணியை அவ்வமைப்பின் அமைப்பாளர் உயர்திரு. காவிரிமைந்தன்
அவர்கள் எனக்களித்து என்னை மதித்து அக்கவிஞர்கட்குச் சான்றிதழ்களும் என்
மரபுப்பாவில் வடித்து என்னையும் மேடையில் பரிசும் சான்றிதழும் கொடுத்து
மதிப்பளித்ததை என் வாழ்நாளில் மறக்கவியலாத ஓர் அரிய தருணம்.
இப்படியாக என் கவிதைகளை நாடிக் கேட்பவர்கட்குத் தவறாமல் அனுப்புகிறேன். அவற்றுள்
உங்களின் “தடாகம் இலக்கிய வட்டம்” சர்வதேச அளவில் புகழ்பெற்று என்
கவிதையையும் ஏற்றுள்ளது என்பது யான் பெற்ற பேறென்பேன்!

10) உங்களுக்கு கவிதையின் மீதான ஆர்வம் ஏற்பட்டது எப்படி? அது எப்போது ?

வினா இலக்கம் இரண்டில் சொன்ன விடைதான் .
1973ல் பள்ளியிறுதியாண்டில் யாப்பிலக்கணம் பாடம் நடத்திய தமிழாசிரியர்
ஊட்டிய தமிழமுதம் இன்றும் என் உள்ளத்தில், உணர்வுகளில், உதிரத்தில் ஓடிக்
கொண்டே இருப்பதாற்றான் என்னால் தொடர்ந்து எழுத முடிகின்றது.

11) புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி
கூறமுடியுமா ?கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?
புதுக்கவிதை எளிமையும் புதுமையும் கலந்த ஓர் உணர்வின் வடிவம்;
நவீனக் கவிதை “ஞானத் தேடல்” போன்று உளவியல் அறிவுடன் உன்னிப்பாய்
அவதானித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற ஓர் ஆழமான கடல்!
கவிதை என்பது கற்பவரின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்;
கவிக்கோ அப்துற்றஹ்மானின் ஒரு கவிதையில்: அண்ணல் நபி(ஸல்)அவர்களைத்
தாயிஃப் மக்கள் கல்லால் அடித்தார்கள் என்ற செய்தியைக் கவிதையில்
சொல்வார்கள் இப்படியாக:

கல்லின் மீது பூவை வீசியவர்கள்
முதன்முதலாக
பூவின் மீது கல்லை வீசினார்கள்!”

மேலே சொன்ன விடயம் ஒன்றுதான் அதனை உரைநடையில் சொல்வதை விட இவ்வண்ணம்
கவிநடையில் சொன்னால் உள்ளத்தில் உண்டாக்கும் தாக்கம் தான் கவிதை என்னும்
ஆக்கம் தரும் நோக்கம்

12) கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?

இல்லவே இல்லை; இளமையில் கல் என்பது போல், இளமையில் எழுது என்று எனக்குள்
ஏற்பட்ட ஓர் இனம் புரியாத பேரவா என்னுள் தீயாய் இருப்பதால் என்னால்
எழுதுவதை ஒரு சிரமமாக  நினைப்பதில்லை; ஆயினும், தற்பொழுது உடல்நிலை
ஒத்துக் கொள்ளாத நிலைமையைக் கண்டு என் துணைவியார் அவர்களும்,என்
நண்பர்களும், என்னுடன் பணியாற்றும் மேலாளர்களும் என்னைக் கடிந்து
கொள்கின்றனர் “ நீ எழுதுவதை நிறுத்தினால் உன் உடல் நலம் பெறும் ‘ என்று.
ஆனால், என் மனம் எழுத்திலும், கற்பதிலும், கற்பிப்பதிலும் தான் பேரின்பம்
= அலாதியான ஓர் ஆன்மத் திருப்தியை அடைவதை உணர்கிறேன்; தேனின் இன்பம்
என்பதைச் சுவைத்தவர்க்கு மட்டும் தான் தெரியும்; புரிய வைக்க இயலாது!


13) கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா? நாவல், சிறுகதை
என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா ?

துவக்கத்தில் சிறுகதைகள் எழுதினேன்; அவைகள் இதழாசிரியர்களால்
ஏற்கப்படவில்லை; அதனால் நிறுத்தி விட்டேன்; ஆயினும், சிறுகதைகள்,
நாவல்கள் மற்றும் இலக்கியத்தின் எல்லாப் பரிணாமங்களும் எனக்கு
விருப்பமானவைகள் என்பதால் அவைகளையும் வாசிப்பேன்;நேசிப்பேன்.

14) உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?

ஆம். முதலில் சொன்னேன் அல்லவா. பணியின் காரணியமாக உலகம் சுற்றியதால்
என்னால் ஓரிடத்தில் உட்கார்ந்து எழுத இயலாமற் பணி ஒன்றே நோக்கமாக அமைந்து
விடுதல்;
உடல்நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் நோய்கள்
துணைவியார், நண்பர்கள், மேலாளர்களின் அன்பான அறிவுறுத்தல்கள்
இவைகள் என் எழுத்துப் பயணத்தின் தடைக் கற்கள்!
முன்னர்ப் பள்ளியிறுதி வகுப்புத் தேர்வு முடிந்ததும் (1973) தமிழின்பால்
கொண்ட காதலால், “புலவர்” பட்டயம் படிக்க வேண்டும் என்ற பேரவாவினால்
அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்த வேளையில், என் குடும்பத்தார்
கூறினார்கள்: “ பாட்டுக் கட்டினால் நோட்டுக் கட்ட முடியாது” என்று.
இயல்பாகவே வணிகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனாதலால்,
“வணிகவியலை”பட்டப் படிப்பாக்கினேன்; இன்றும் வணிகவியலை இலவயமாகக்
கற்பிக்கிறேன். என் வாழ்வில் இரு கண்கள்; கணக்குப் பதிவியலும்;
கவிதையும்.
கணக்குப் பதிவியல் (accountancy) என் தொழில்
கவிதையியல்  - என் இலக்கிய எழில்

15) படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடி கிறது?

படிக்கும் காலத்தில் பயிற்றுவிக்கும் நல்லாசான்கள் கிட்டியதன் அரும்பேறு என்பேன்.

16) எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?

படைப்பாளிகள் எல்லாரும் தன் அனுபவங்களைத் தான் பலவேறு பரிணாமங்களுடன்
இலக்கிய வடிவில்  நமக்கு விருந்தாகப் படைத்து நம் அறிவுப் பசியாற
வைக்கின்றார்கள். உணவில் வகைகளும், சுவைகளும் வேறுபடுகின்றன போலவே,
இவர்களின் படைப்புகள் என்னும் இலக்கிய விருந்திலும் சுவைகளில்,
உருவத்தில் வேறுபாடுகள் இருப்பினும் ஏற்புடையனவாகவே வலம் வருகின்றன
என்பதே என் கண்ணோட்டம்.

17) இறுதியாய் என்ன சொல்ல போகிறீடகள்

கண்டது கற்கின் பண்டிதனாவான்
படிப்பாளியே படைப்பாளியாவான்
கற்போம்;கற்பிப்போம்
இலக்கியமென்னும் மடியில் இளைப்பாறுவோம்; இருதயம் இந்தத் “தடாகத்தின்”
தென்றலால் இன்பம் அடையும்!

நன்றி புலவர்  அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி 


No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.