புதியவை

இவனும் தலித்தா - மீ.விசுவநாதன்


   
                 (ஆசிரிய விருத்தப்பா)


வேதம் ஓதுவதும், வீதியினைக் கூட்டுவதும்,
பேதம் பாராமல் பிரியமுடன் பழகுவதும்,
கழிப்பறை கழுவுகிற காரியமே செய்தாலும்
மொழிப்புலமை சீர்கொண்டு முன்னேறிச் சென்றாலும்
பழிகொண்ட பிறப்பின்று பார்ப்பனப் பிறப்பு!
இழிவல்ல இன்பந்தான் என்றே நிமிர்ந்தாலும்
அடயிவனை அப்படியே அமுக்குடா என்கின்ற
மடமனத்தோர் இருக்கும்வரை மண்ணில் அவனுமே
"தலித்தான்"அதிலே தவறொன்றும் காணாது
ஜொலித்தான்;  இன்னும் ஜொலிப்பான் இந்த

தேச உயர்வுக்காய் "தீ"போல உயர்வான்;
நாசச் செயல்கள் நடக்காத உலகத்தை
நரம்போடு நாதம் நன்றாகச் சேர்ந்ததுபோல்
உரங்கொண்டு வென்று ஊர்மெச்ச வாழ்ந்திடுவான்;

அரசாங்கம் உதவாது "அவனோட்டு" அவர்களின்
கரங்களில் கிட்டாது ; கலிகாலம் இன்றவனை 
ஈன்றவளே பகையாக எண்ணுகிறாள் ; பெற்றதாய்
போன்ற தன்நாட்டில் பொதுஇடத்தில்தனியிடத்தில் 
என்னதான் படித்தாலும் இவனுக்கு வேலையில்லை !
மின்னலாய்த் தெறித்தும் மேகத்தால் மழையில்லை !
படிக்கின்ற இடத்திலோ பதுங்கவும் இடமில்லை;
நடிக்கிற அரசியலார் நாட்டினிலே இருக்கும்வரை
நேர்மையாய் முன்னேற நிச்சயம் முடியாது ;
கூர்மையாய் புத்தியினை குறிபார்த்து வைத்தாலும்
யாருமே இவனையோர் எந்திரமாய்ப் பார்ப்பதனால்
ஊருக்குள் "பார்ப்பானாய்" ஒருகண்ணில் தெரிகின்றான் ;

"யாரிடமும் போகாதே ! எந்திரமாய் வாழாதே !
போர்முரசு ஒலியாக முழங்கட்டும் வேதஒலி !
சோற்றுக்காய் வேதத்தை ஒருநாளும் விற்காத
நூற்றுக் கணக்காக நோன்பிருப்போர் சேருங்கள் !
உற்சாக மாகவே உழைப்போம் எந்நாளும் !
கற்போம்கொடுப்போம் கல்வியை எல்லோர்க்கும் !
நம்முள்ளே சாதிமத  நச்சுப் பாம்பதனை
சம்மட்டி கொண்டடிப்போம்சத்தான தலைமுறையை
நாட்டுக்காய் எப்போதும் நாமளிப்போம்!
ஓட்டுக்காய் அழியாமல்  உள்ளொளியால் வெல்வோமே !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.