புதியவை

இலங்கை ஊடாக கடலட்டைகளை கடத்த முயற்சி - ஐவர் கைது

இலங்கை ஊடாக கடலட்டைகளை கடத்த முயற்சி - ஐவர் கைது


இந்தியாவின் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரையில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தியதாக திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஐவரை பொலிஸார் கைதுசெய்தனர். 


அத்துடன் நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபர்களிடம் இருந்து, 80 கிலோ கடல் அட்டைகளை நேற்று திங்கள்கிழமை பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்திய ஊடகமான நக்கீரன் குறிப்பிட்டுள்ளது. 

வேம்பார் கடலோர பாதுகாப்புக் குழும காவல் உதவி ஆய்வாளர் சுடலைமுத்து தலைமையில், காவலர்கள் செல்வகுமார், மார்ஷல் ஆகியோர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேம்பார் மீன் இறங்குதளம் அருகே நின்றுகொண்டிருந்த வேனை சோதனையிட்டனர். 

அந்த வேனில் மூன்று சாக்கு மூட்டைகளில் 80 கிலோ எடையுள்ள பல வகையான கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. 

இதுதொடர்பாக வேனில் இருந்த தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சீனி மரைக்காயர் மகன் செய்யதுஅலி (32), மேட்டுப்பட்டி வேலுச்சாமி மகன் சந்தனம் (40), திரேஸ்புரம் கென்னடி மகன் சில்வர்ஸ்டார் (19), தாஸ்நகர் முருகன் மகன் பாண்டி (20), லூர்தம்மாள்புரம் மலையராஜா மகன் கணேசன் (19) ஆகிய ஐவரை கைது செய்த பொலிஸார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும், 80 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். 

விசாரணையில் கடல் அட்டைகளை வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களிடமிருந்து சிறிது சிறிதாக வாங்கி தூத்துக்குடியில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் கொடுத்து இலங்கை வழியாக ஜப்பான், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.