புதியவை

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஆகஸ்ட் மாதம் சர்வதேச மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் முதலாவது இடத்தைப்பெற்று கவியருவி பட்டமும்,சான்றிதழும்பெறுகின்றார் -பாவலர் கோ. மலர்வண்ணன்.


மாந்தநேயம் வளர்ப்போம்!

மாந்தநேயம் பாழ்பட்டு வருதல் கண்டும்
----மனங்கவல்தல் இன்றிமக்கள் வாழ்கின் றார்கள்!
காந்திமகான் போன்றவர்கள் பிறந்து தானா
----காக்கவேண்டும் மாந்தநேயம்?! நாமெல் லோரும்
மாந்தரெனும் பிறப்பெடுத்து வாழ்கின் றோமே!
----மாந்தநேயம் காப்பதில்நம் பங்கென் சொல்வீர்?
சாந்துணையும் மாந்தநேயம் மனங்கொள் ளாமல்
----சாதித்துப் பெற்றபயன் தானென் சொல்வீர்?

அண்டையிலே வாழ்குடும்பம் ஒன்று, துன்ப
----ஆற்றினிலே தத்தளித்துக் கொண்டி ருத்தல்
கண்டிருந்தும் அக்குடும்பத் துயரம் போக்கக்
----கடுகளவும் உதவிசெய்யான் ஒருவன் என்றால்,
மண்டலத்தில் எங்கெங்கோ மாந்த நேயம்
----மாய்க்கின்ற செயல்கண்டு துடிப்பான் கொல்லோ?
தண்டமெனத் தன்னலத்தைக் கருதி வாழ்ந்தால்
----தழைத்திடுமோ மாந்தநேயம்? கருத்தில் கொள்வீர்!

மதவாதம், இனவாதம், வகுப்பு வாதம்
----மற்றிவற்றால் பலியாவோர் கொஞ்ச மாமோ?
உதவாத அதிகாரப் போதை கொண்டோர்
----உசுப்பிவிடும் போர்வெறியில் மாள்வோர் கோடி!
இதயத்தை உறையவைக்கும் வன்மு றைக்கும்
----இலக்காகி வீழ்ந்தழிவார் கணக்கில் உண்டோ?
அதனாலே, இவையெல்லாம் தவிர்க்க வேண்டின்
----அனைவருமே மாந்தநேயம் வளர்ப்போம்! வாழ்வோம்!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.