புதியவை

சடுதியிலிடுவீர்-வித்யாசாகர்துருப்பிடித்த சாதி – அது
திருத்திடாத நீதி,
துண்டுத் துண்டாகி - இன்று
உயிர்களை குடிக்கிறது சாதி..

தலைமுறையில் பாதி – அது 
கொன்று கொன்று விழுவதேது நீதி ?
காதல்சருகுகளை பிஞ்சுகளைக் கொன்று
கடும் விசமாய் பரவுகிறது சாதி..

கருப்பு வெள்ளையில்லா 
ஒரே சிவப்பு ரத்தம், அது சிந்திச் சிந்தி
நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழேனில்
சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ?

ச்சீ.. கேட்கவே வெட்கம்
செங்கல் வேகலாம், சாதியில் மனிதர் வேகலாமா?
செந்நீர் வகைக்குப் பிரியலாம்
மனிதர் மேல் கீழாய் பிரியலாமா ?

சுத்தும் பூமிக்கு; யார் மேல் ? யார் கீழ்? 
புயலோ பூகம்பமோ வந்தால்
சாவதற்கு’ பெரியார் யார்? சிறியார் யார்?
பிணம். அத்தனையும் ஒரே பிணம்.,

சுடுகாட்டில் எரிப்பதற்கும் நடுக்காட்டில் புதைப்பதற்கும்
பழக்கங்கள் வேறாகலாம், புதைக்கும் எரிக்கும்
மனிதர்களுக்கு அதே இரண்டு கால்கள் கைகளெனில்
வகைக்குப் பிரித்த சாதியெங்கே உயர்ந்தும் தாழ்ந்தும்போனது ?

மனிதரை மிஞ்சிய தெய்வமில்லை 
எனும்போது' யாருக்கு உரிமையிங்கே 
சாதியினால் கொல்வதற்கும், சாதிப் பேர் சொல்லி 
வென்றதாய் எண்ணுவதற்கும் ?

மலமள்ளியவன் படித்த மருத்துவத்தில் 
ஒரு உயிர் பிழைத்தால், மருத்துவன் சாமி;
படித்தவன் புத்தி பரத்தையின்பின் போனால்
அது அறிவிற்குக் கேடு; 

அடிப்பதும்' அணைப்பதும்' வெல்வதும்' தோற்பதும்' 
வாழ்வதும்' சாவதும்' மனிதர்களே மனதால் மனிதத்தால்
திறமையால் தீர்மாணிக்கப்படட்டும்
பிறப்பால் எவரையும் இழுக்கென்று பழித்தல் தீது..

உருகும் மனசு இளகும் நெஞ்சு
சாதிநெருப்பள்ளி வைக்கும் தலை – நாம்
வயிறுதள்ளிப் பெற்றதும் வாயைக்கட்டி வளர்த்ததுமெனில்
சாதிக்கினியிடும் நெருப்பெங்கே சடுதியிலிடுவீர்..


No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.