புதியவை

மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு குற்றவாளிகளில் ஐவருக்கு மரணதண்டனை

மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு குற்றவாளிகளில் ஐவருக்கு மரணதண்டனை

மும்பையில் மின்சார ரயில்களின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 188 உயிர்கள் பறிபோனதற்கு காரணமான 12 குற்றவாளிகளில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மும்பையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி தீவிரவாதிகள் 7 மின்சார ரயில்களில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 188 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 829 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் 12 பேரை குற்றவாளிகள் என அறிவித்து மும்பை ‘மோக்கா’ சிறப்பு கோர்ட்டு கடந்த 11 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை விதிப்பது? என்பது குறித்த இருதரப்பு வக்கீல்களின் இறுதிக்கட்ட வாதம் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது. குற்றவாளிகள் சார்பாக ஆஜரான வக்கீல்களும், அரசு தரப்பு வக்கீல்களும் தண்டனை தொடர்பாக வாதம் செய்தனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என எதிர்தரப்பு வக்கீல்கள் கேட்டுள்ளனர். இருதரப்பு வாதங்களையும் குறிப்பெடுத்துக் கொண்ட நீதிபதி தண்டனை விபரங்களை அறிவிக்கும் உத்தரவுக்கு திகதி குறிப்பிடாமல் விசாரணையை தள்ளிவைத்தார்.
எனினும், இவ்வழக்கில் 30 ஆம் திகதி (இன்று) தண்டனை விவரத்தை நீதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், இவ்வழக்கின் 12 குற்றவாளிகளில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக குற்றவாளிகளுக்காக ஆஜரான வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.