புதியவை

இணை அனுசரணையாளராக இணைந்த இலங்கைக்கு பிரித்தானியா பாராட்டு

இணை அனுசரணையாளராக இணைந்த இலங்கைக்கு பிரித்தானியா பாராட்டுஐ.நா மனித உரிமைகள் விசாரணைப் பொறிமுறையில் இணை அனுசரணையாளராக இலங்கையும் இணைந்து கொண்டுள்ளமைக்கு பிரித்தானிய அரசு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான சாதகமான நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணையில் எதிர்வரும் நாட்களில் சிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரேரணையை வாக்களிப்பிற்குக் கொண்டு செல்லாது ஏக மனதான பிரேரணையாக நிறைவேற்றப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்ச்சையை ஏற்படுத்திய ஹைபிரிட் என்ற சொல் இந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு , பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், காணாமற்போனவர்களுக்கு சட்ட அடையாளத்தை வழங்குதல் மற்றும் காணி இல்லாமற் போனவர்களுக்கு அவற்றை வழங்குதல் என்பன பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்தும் விதமாக இராணுவத்தை முழு அளவில் நீக்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதியரசர்களை உள்ளடக்கிய தேசிய பொறிமுறையின் கீழ் நம்பகமான நீதிமன்ற பொறிமுறையை ஸ்தாபிப்பது இதில் காணப்படும் முக்கிய பரிந்துரையாகும்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதியான தகவல்கள் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்விலேயே அறியக்கிடைக்கும்.
அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபையில் உரை நிகழ்த்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.