புதியவை

நேர்காணல் - இசை அமைப்பாளர் (பாடகர் கே .ஜெயந்தன் )


இலங்கை மண்ணில் புகழ் பூத்து இசை மணம் வீசிக்க் கொண்டிருக்கும் நறுமணம் கமழ்ந்தஇனிய குரல் வளம் கொண்ட பாடகர்,அறிவிப்பு துறை , கவிதைதுறை ,நடிப்பு துறை , ஒலிபதிவு துறை போன்றவற்றில் நிறைய ஈடுபாடு கொண்ட இசை அமைப்பாளர்
அன்பான நேசமுள்ள சகோதரர்
அன்புத்தம்பி கே .ஜெயந்தன் அவர்களை தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின் மூலமாக சந்திப்பதில்நான் பெருமை அடைகின்றேன்

1. உங்கள் இசை துறையின் ஆரம்பம் பற்றி சொல்லுங்கள்.

என்னுடைய சொந்த இடம் யாழ்பாணம் கரவெட்டிகிழக்கு. அப்பாவின் தொழில் நிமித்தம் காரணமாக ஏழு வயதிலேயே வந்தாரை வாழவைக்கும் வவுனியாமண் என்னையும் வரவேற்றுகொண்டது.நான் சிறு வயதுமுதல் உயர்தரம் வரை கல்விகற்றது வவுனியா விபுலானந்த கல்லூரி.சிறுவயதில் இருந்து பாடும் திறமை தானாக என்னிடம் வளர்ந்தது.காரணம் எனது தந்தையார் ஒரு பாடகர் ,நடிகர் ஆரம்பகாலங்களில் பல மெல்லிசை பாடல்களை இலங்கை வானொலியில் பாடியுள்ளார் .பல மேடை கச்சேரிகள் செய்துவந்தவர்.இதே போன்று எனது மாமா கீழ் கரவை கி.குலசேகரன் அவர்களும் இலங்கையில் பிரபல கவிஞர் பல பாடல்களை எழுதியவர்.எனது அம்மாவின் சகோதரர்களும் அப்பாவின் சகோதரர்களும் சிறந்த இசை கலைஞர்கள் இவ்வாறான இசை குடும்ப பின்னணியில் எனக்கும் இசை தானாகவே உருவானது

2. இசையுலகில் எவ்வாறு அறிமுகம் ஆனது?

இசை துறையின் ஆரம்பம் என்று சொன்னால் அதன் ஆரம்பம் நான் கல்விகற்ற வவுனியா விபுலானந்த கல்லூரி என்றுதான் சொல்லவேண்டும்.என்னை முதன்முறையாக ஏழு வயதில் மேடை ஏற்றி பாட வைத்தவர் அப்போதைய எனது வகுப்பு ஆசிரியை திருமதி சாந்தி பரமேஸ்வரன் அவர்கள்.அதன் பின்னர் பாடசாலையில் வில்லுபாட்டு ,தனி இசை ,நாடகம் போன்ற போன்ற பல்வேறு போட்டிகளில் மாவட்டம் ,மாகாண மட்டம் ,அகில இலங்கை போட்டி ரீதியாக் வெற்றிகள் பெற்றுள்ளேன்.எனக்கு இசை கற்பித்த சங்கீத ஆசிரியை திருமதி சிதம்பரநாதன் ஆசிரியை அவர்கள் என் இசையின் குரு.ஏழு வயதில் முதன் முறையாக எனக்கு பியானோ வாங்கி தந்த என்னுடைய மாமா திரு கருணாகரன் அவர்கள் தந்த ஊக்குவிப்பாலும் எனது சித்தப்பாதிரு மதியழகன் அவர்கள் வாங்கித்தந்த கிபோர்ட் இனாலும் நானும் ஒரு கலைஞன் ஆக்கபட்டேன்.கி போர்டு இசையினை சிறுவயதில் நானாகவே கற்றுக்கொண்டேன்.சிறுவயதில் இசை அமைக்கும் ஆற்றல் என்னிடம் தானாக வளர்ந்தது இதற்க்கு முதன்முறையாக களம் கிடைத்தது சூரியன் வானொலியின் பாடுவோர் பாடலாம் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர் திரு விமல் அவர்களால் வவுனியாவில் இருந்து இயங்கிய எமது இசைகுழு சூரியன் வானொலியின் கலையகத்துக்கு அழைக்கபட்டது.அப்போதைய சூரியன் வானொலியின் அறிவிப்பாளர் திரு லோஷன் அண்ணா அவர்களால் முதன் முறையாக எனதுசொந்த பாடலான மனமே கோபமா என்ற பாடல் சூரியன் வானொலியில் அறிமுகம் செய்ய பட்டது .இதனை தொடர்ந்து பட்டாம்பூச்சி பறக்குது ,சிக்குபுக்கு ரயிலே போன்ற பாடல்கள் பிரபல்யம் பெற்றன.ஷக்தி வானொலியின் நம்ம ஹிட்ஸ் நிகழ்ச்சி மூலமாக திரு அபர்ணசுதன் அவர்களால் எனது பாடல்கள் நம்ம கிட்ஸ் நிகழ்ச்சியில் பிரபலமானது..இதை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பல்லாயிர கணக்கான போட்டியாளர்கள் பங்குகொண்ட சக்தி தொலைக்காட்சி ஒரு வருட காலமாக நடாத்திய .இசை இளவரசர் நிகழ்ச்சியில் பல லட்சம் எஸ். எம். எஸ் வாக்குக்களால் இசை இளவரசனாக முடிசூட பட்டேன்.

3. உங்கள் குடும்பமே இசையில் இணைந்துள்ளது. அந்த வகையில் உங்களது சகோதரர்கள் எவ்வாறு உங்களுக்கு உதவுகிறார்கள்?

எனக்கு இரண்டு சகோதரர்கள் ஜெயரூபன் ,பிரதா எனது சகோதரன் ஜெயரூபன் சக்தி வானொலியால் நாடாளாவிய ரீதியில் நடத்த பட்ட வானொலி நட்சத்திரம் போட்டியில் வெற்றி பெற்றவர் இப்பொழுது இசை துறையில் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பல இசைதொகுப்புகளிலும் பாடல்கள் பாடிவருகிறார்.அதே போன்று எனது சகோதரி ஜெயபிரதா யாழ்பாணம் ராமநாதன் நுண்கலை கல்லூரியில் இசை பயின்று வருகிறார்.எமது இசை குழுவின் இசைநிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தும் பல சொந்த பாடல்களை பாடிவருகிறார் சகோதரர்கள் இருவரும் இசைத்துறையில் இருப்பதனால் எனக்கு பாடல்கள் பாடுவதற்கோ இசை சம்பந்தமான தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள உதவியாக உள்ளது.இதற்க்கு எமது அப்பா திரு கந்தப்பு ,அம்மா விஜயா ஆகியோர் மேலும் ஊக்குவிப்பினை வழங்கி வருகின்றனர்

4. பல வெளிநாடுகளில் உங்களது இசை நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அந்தவகையில், புலம்பெயர் உறவுகளின் மத்தியில் உங்களுடைய இம்முயற்சிக்கு எவ்வாறான ஆதரவுகள் கிடைக்கின்றன/ வெளிநாடுகளில் நடந்த நிகழ்வுகளை பட்டியலிடுங்கள்....?
புலம்பெயர் நாடுகளில் எமது பாடலுக்கு மிக வரவேற்பு உண்டு..பல லட்சம் ரசிகர்கள் எமது பாடல்களை இணையத்தளம் ஊடாக ரசிகின்றார்கள். தொலைபேசி ஊடாகவும் நேரிலும் சந்தித்து பலர் ஊக்குவிப்பினை வழங்குகிறார்கள்.அண்மையில் வெளியிட்ட என்னுடைய இசையில் உருவான காந்தள் பூக்கும் தீவிலே ,யாழ்தேவி ,வவுனியா மண்ணே,எங்கோ பிறந்தவளே ,கண்ணோடு கண்கள் பேசுதே போன்ற பாடல்கள் லட்சகணக்கான ரசிகர்களை Youtube இணையத்தளத்தில் ஈர்த்துள்ளது..பல புலம்பெயர் மக்களின் பிரபல வானொலிகளான லண்டன்IBC தமிழ் கனடாCMRதமிழ் ,லண்டன் தமிழ் வானொலி .அவுஸ்டேர்லிய தமிழ் வானொலி போன்ற பல வானொலிகளில் பல ரசிகர்கள் விரும்பி கேட்பது எமது பாடலாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்..அண்மையில் பேராசிரியர் சிவத்தம்பி ஐயா அவர்களின் நினைவு தினத்தை முன்னிடு கனடாவில் நடைபெற்ற நிகழ்வில் என்னுடைய இசையில் உருவான தமிழ் மொழிவாழ்த்து பாடலுக்கு நடனமாடி இருந்தார்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்..தொடர்ந்தும் என்னுடைய பாடல்களை YOUTUBEஇணையத்தளத்தில் JEYANTHAN13 என்பதை டை செய்து பார்க்கலாம்.
5. இலங்கை இசைத்துறையில் இன்னும் பொற்காலம் வரவில்லை, அதாவது நம்மவர்கள் இன்னும் வளரவேண்டியுள்ளது என்று சொல்லும் கூட்டமொன்று உள்ளது. இது தொடர்பாக..?
நம்மவர்கள் வளரவேண்டும் என்று சொல்லுகின்ற காலம் மலையேறி விட்டது இன்று சர்வதேச ரீதியில் நம்மவர்களின் பாடல்கள் உயர்ந்து விட்டன .பல சிறந்த இசையமைபாளர்கள் ,பாடகர்கள் சிறப்பான படைப்புக்களை வெளியிட்டுவருகிறார்கள் இணையத்தளங்களில் மட்டுமே.இன்று எமக்கு இல்லாத வசதி என்றால் எமது பாடல்களை உலகளாவிய ரீதியில் சந்தை படுத்தும் வசதி ,இன்னும் ஒன்று நமது ஊடகங்களின் ஒத்துழைப்பு மேலும் தேவை.நமது கலைஞர்களின் பாடல்களை வானொலிகளில் ஒலிபரப்புவது குறைந்துவிட்டது.வானொலிகள் ,தொலைகாட்சிகள் முன்வரவேண்டும் திறமைகளுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும்.இவ்வாறு செய்தால் இலங்கை தமிழ் இசை துறை வளரும்.
6. இதுவரை எத்தனை இசை தொகுப்புக்கள் குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளீர்கள்?
இதுவரையில் எட்டு இசை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளேன் சுமார்180 பாடல்களுக்குமேல் இசை அமைத்துள்ளேன் 10 குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளேன்.
7. இன்னும் எவ்வாறான திட்டங்கள இசைத்துறையில் ஆற்ற உங்களிடம் உள்ளன?
பல இசை தொகுப்புக்களை வெளியிடவேண்டும் பல கலைஞர்களை ஊக்குவிக்கவேண்டும்.எமது பாடல்களுக்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தவேண்டும்..அத்தோடு தமிழ் சினிமா இசைத்துறையில் இலங்கை கலைஞன் என்று சொல்லும் அளவுக்கு சாதனை செய்யவேண்டும்.இதற்கான முயற்ச்சியில் ஈடுபடுகிறேன்.வாய்ப்புக்கள் கிடைக்கும்போது நிச்சயமாக் என்னுடைய திறமையை வெளிகாட்டுவேன் இப்பொழுது இலங்கையில் தாயரிக்கப்படும் கடன்காரன் ,வல்லைவெளி ,காதலுக்காக ,முதல் அடி ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைக்க உள்ளேன். அண்மையில் சிவகாந்தனின் இயக்கத்தில் எனது இசையில் திவ்யா மற்றும் கதிர் நடிக்கும் கடன்காரன் திரைப்பட பூஜை வவுனியாவில் நடைபெற்றதும் குறிப்பிட தக்கது
8. இதுவரை உங்களுக்குக் கிடைத்த கௌரவ்கங்கள்/ பட்டங்கள் , விருதுகள்?
இதுவரையில் எனக்கு கிடைத்த விருதுகள் -இசை இளவரசர் விருது ,இசை சுடர் விருது ,வவுனியாவின் இசை மைந்தன்,இளம்கலையோதி,இசையூற்று ,இசை வித்தகர் போன்ற விருதுகள் கிடைத்தன.அனால் ஒருவிடயம் விருதுகளை விட மக்களின் மனங்களில் எமக்கு கிடைக்கின்ற ஆதரவு ஒன்றே போதும்
உங்கள் இசைத்துற வாழ்க்கையில் ஒரு பாடகராக இசையமைப்பாளராக, பாடலாசிரியராக பரிணமிக்கும் நீங்கள், பலரை அறிமுகம் கூட செய்துள்ளீர்கள்? அவை தொடர்பாக..
நிச்சயமாக எனது சொந்த பாடல்கள் மூலமாக அறிமுகம் செய்த கலைஞர்கள் சமயபுரம் ரொஷான் ,சசிகுமார் ,சுபா ,பிரதாபன்,ஜெயபிரதா ,போன்ற கலைஞர்களை அறிமுகம் செய்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்..என்னால் அறிமுகம் செய்யபட்டதை விட அவர்கள் ஏற்கனவே திறமையான கலைஞர்கள் இன்னும் பல பிரபல்யமான கலைஞர்கள் உண்டு.என்னால் இப்போது சொல்ல முடியாது அது அவர்களாக கூறினால் சிறப்பு என நினைக்கிறேன்.

9. உங்களுக்கு பாடல்களை எழுதிவரும் கவிஞர்கள் பற்றி குறிப்பிடுங்கள்?
கலாநிதி தமிழ்மணி அகளங்கன்ஆசிரியர் , திரு மாணிக்கம் ஜெகன் ,கவிஞர் பொத்துவில் அஸ்மின் ,சதீஸ் காந்த் ,பாமினி ,ராஜேந்திரா,சாந்தரூபன் ,தர்மலிங்கம் பிரதாபன்..எனது காந்தள் பூக்கும் தீவிலே ,எங்கோ பிறந்தவளே போன்ற பல பாடல்களை எழுதிய கவிஞர் அஸ்மின் அவர்கள் விஜய் அண்டனியின் இசையில் நான் திரைப்படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலை எழுதியுள்ளார்.
10. வேறு என்ன துறைகளில் உங்களுக்கு ஈடுபாடுகள்?
அறிவிப்பு துறை , கவிதைதுறை ,நடிப்பு துறை , ஒலிபதிவு துறை போன்றவற்றில் நிறைய ஈடுபாடு உண்டு.


11. உங்கள் எதிர்கால இலக்கு ?

எமது மண் வாச பாடல்களை உலகளாவிய ரீதியில் கொண்டுவரவேண்டும்.என்னை போன்ற திறமைகள் இருந்தும் வாய்ப்புக்கள் இல்லாத பல கலைஞர்களை வெளியில் கொண்டுவரவேண்டும்.இதை தவிர தமிழ் சினிமாவில் தடம் பதித்து இலங்கை இசைஅமைப்பாளர் சிறப்பான பாடல்களை வழங்கிவருகிறார் என்ற பெயரை என் தாய் நாட்டுக்கு பெற்றுகொடுக்கவேண்டும்.இதற்கான் வாய்ப்பு மிகவிரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

உங்கள் ஆசைகளும் கனவுகளும் நிறை வேற வேண்டும் உங்கள் குரல் வலம் ஆற்றல் உலகெங்கும் சூரியனாய் பிரகாசிக்க வேண்டும்
,வெற்றி நடை போட வேண்டும் அதை என்னைபோன்றவர்கள் பார்த்து மகிழ் இறைவன் நாட வேண்டும் என்று உங்களை வாழ்த்தி விடை பெரும் நான் ஒரு சந்தோசத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின் மூலமாக நடை பெறவுள்ள விருது விழாவில்( லாங்கா தீபம் ) விருதும் இசைத்தீபம் பட்டமும் வழங்கி கௌரவிக்க உள்ளோம் என்ற நல்ல செய்தியுடன் விடை பெறுகின்றேன்.

நன்றிகள்
பேட்டி : கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அமைப்பாளர் (தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு )

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.