புதியவை

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்: வடமாகாண சபையில் பிரேரணை


இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து வடமாகாண சபையில் இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த பிரேரணையை சபையில் முன்வைத்தார்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உள்ளிட்ட ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது நடுநிலை வகித்தனர்.
யாழ். கைதடியிலுள்ள வட மாகாண சபையில் இன்றைய சபை நடவடிக்கைகளுக்காக உறுப்பினர்கள் பிரசன்னமானபோது ஆளும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நான்கு சுலோகங்களைக் காட்சிப்படுத்தியவாறு சபைக்குள் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வடமாகாண சபையின் இன்றைய அமர்வு ஆரம்பமானபோது உரையாற்றிய மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசேட பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.
வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்தபோது எதிர்த் தரப்பிலிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மற்றும் எஸ்.தவநாதன், ஜே. ஜயதிலக்க, தர்மபால செனவிரத்ன, ரிஃப்கான் பதியூதீன் ஆகியோர் நடுநிலை வகித்தனர்.
இதனிடையே, வாய்மூல கேள்விகளுக்கான சந்தர்ப்பத்தின்போது வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதி 15 கேள்விகளையும் எதிர்க்கட்சித் தலைவர் சீ.தவராசா இரண்டு கேள்விகளையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தொடுத்தனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வட மாகாண சபையின் அடுத்த அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.