புதியவை

வெறும்பா (blank verse) என்பது செந்தொடையாகக் குறிப்பிட்ட பாவகை/பாவினம் பயிலும் செய்யுள்.-ரமணி




யாப்பு என்பது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.
யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பே. ... 1



எழுத்தும் அசையும் சீரும் தளையும்
தொடுத்து அடிகளில் சேரக் கட்டிப்
பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க
உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம். ... 2

செய்யுள் என்பது செய்யப் படுவது.
பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
செய்யுள் என்பதன் சிலநேர் சொல்லே. ... 3

கவிதை என்பது கவினுற விதைத்தல்.
பாட்டு என்பது பாடப் படுவது.
செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே. ... 4

மலரும் கொழுந்தும் மருவித் தொடுத்த
மாலை போலச் சொற்கள் விரவி
சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம். ... 5

மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
மாலையின் ஊடகம் நாரெனச் சொன்னால்
செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம். ... 6

யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
நம்முடல் நாமாம் நம்மனத் தாலே.
கவிதை யாப்பில் கருப்பொருள் மனமே. ... 7

கவிதையில் மனதைக் கலந்துரை யாட
கவிதையும் மனதைக் கவர்ந்துயிர் கொள்ள
செய்யுள் யாக்கையைக் செறிவுடன் செய்து
மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
நாரின் ஓசையை, முழுவதும் துய்ப்போம். ... 8

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.