புதியவை

செப்டம்பர் மாதம் நடைபெற்ற கவிதைப்போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட கவிஞர்களும் கவிதைகளும்





01-அய்லானின் உறக்கம்

அரபுலகம் இறக்கம் காட்ட மறுக்கவே
அமைதியாக உறங்கிப்போனானவன்
கடலலைகளின் தாலாட்டில்
கண்ணுறங்கிப்போனானவன்..
பாவமொன்றும் அறியா
பாலகன் அய்லானின் கண்ணீரை
பதுக்கி வைத்துக்கொண்டது
பயங்கரலைகள்..
மிருகங்களுக்குள்ள ப்ளு க்ரோஸ் 
மனிதர்களுக்கு இல்லாமல் போனதேனோ
உரிமைகள் பேசும் மனிதர்கள்
உயிர்களுக்கு மதிப்பளிக்காது போனதேனோ
மனிதாபிமானம் மரணித்து
மனகல்லறையில் குடிக்கொண்டது
உள்ளம் இருளடைந்து
உறைந்துப்போனது..
ஐக்கிய நாடுகள் சபையே
ஐக்கியத்தை மறந்தேதேனோ..
சமாதானம் பேசும் மனிதா
சமத்துவத்தை மறந்தேதேனோ.
விடைபெற்ற இவனிலிருந்து
விழிக்கட்டும் எம் விழிகள்
இனியும் இவ்வவலம் தொடராது
இறைவனிடம் பிரார்த்திப்போம்..
வல்லரசுகள் மெளனத்தை தவிர்த்து
வாய்த்திறக்குமா..
நீதி தேவதைகள் கண்திறந்து
நீதி கேட்குமா..
சிரிய அரசே
சிறுவன் இவன் உயிர் போதும்
உன் யுத்தத்தினை நிறுத்திடு
உம்மத்துக்களை காத்திடு..

வசீம் அக்ரம்




02-மனிதனாக மிளிர மனம் மாறனும்.

பிறந்ததும் பெற்றோர் அழகிய பெயரிட்டனர்
பின்தவழ்ந்து நிற்கையில் பேசிட கற்றுத்தந்தனர்
பிழையில்லா நிலையில் பேசிடும்வேளை கலிமாவை
பிஞ்சுள்ளத்தில் பதிய சொல்லியும் தந்தனர்.

பண்புள்ள மனிதனாய் பாரினில் பிறக்கச்செய்த
படைத்தவனை தினம் தொழுகத்தான் வேண்டும்
பகுத்தறிவு இருந்தும் வணங்கிட மறுக்கும்
பழக்கமும் நம்மிடம் மாறத்தான் வேண்டும்.

பிடிவாதம் கொண்டு பேதைப்போல் நாளும்
பிதற்றித்திரியும் உள்ளம் திருந்திட வேண்டும்
பாங்கொலி கேட்டு பதில்சொல்லி நடந்து
பள்ளிசெல்லும் பழக்கமும் வந்திட வேண்டும்.

நன்மைதரும் நோன்பது நம்மிடம் வருகையில்
நாடியே நோன்பதை நோற்கவும் வேண்டும்
நாளெல்லாம் உண்டிட்ட பழக்கமாய் உண்ணாமல்
நள்ளிரவில் உண்டும் மகிழ்ந்திட வேண்டும்.

ஏற்றம்தரும் ஜக்காத்தை தகுதியுடையோ ரெல்லாம்
ஏழைக்கு கணக்கிட்டு கொடுத்திட வேண்டும்
எதற்கு இதுவெல்லாம் என்றே நினைக்கும்
எண்ணமும் எம்மிடம் நீங்கிட வேண்டும்.

ஆழியக் கடமையோ புனிதமிகு ஹஜ்ஜாகும்
அதை செய்துமுடிக்க நமக்கு பொருள்வளமும்
அத்துடன் உடல்நலமும் இருந்தால் நிச்சயம்
அழகுடன் ஹஜ்ஜை நிறைவேற்றிட வேண்டும்

அண்ணல் நபிகள் நாயகத்தின் உம்மத்தினராய்
அகிலத்தில் உதித்திட உதவிய பேரருளாளன்
அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையே நம்
அனைவரும் மனிதனாய் மிளிர காரணமாகும்

அல்ஹாஜ் E. M. ஜிப்ரில்-கொடிநகரான் தோஹாகத்தார் 




03-நிராகரிப்பு
அன்பால் ஒரு வலம்
அன்பே நீ என தினம்.
உன்மேல் தீரா பாசம்
உனக்கோ அது வேசம்
அதனால் செய்தாய் நிராகரிப்பு !
ஊர்கூடி வலம் இழுக்கவா
ஆசைகொண்டேன்.
ஊர்மேல தேர் ஏறி போகவா
நோக்கம் கொண்டேன்.
உன்னால் ஒரு தாலி தானே கேட்டேன் .
அதனால் செய்தாய் நிராகரிப்பு !
தொடுவான நிலவு நீ
தொலைந்து போகிறேன் நான் !
தொட்டும் பேசும் வயதுமுதல்
தொடர்ந்து வந்த பந்தம் நான் !
அதனால் செய்தாய் நிராகரிப்பு !
ஆஸ்திக்காக ஆசைப்பட்டாய் அன்று
அப்பன் தரமறுப்பது இன்று
நூல் அறுந்த பட்டமானது நான்
நூலிழை பந்தமானது காதல்
அதனால் செய்தாய் நிராகரிப்பு !
அன்பும் திகட்டும் அதிகமானால்
அச்சுவெல்லம் கசக்கும்
அநியாய உலகம் இது
அனைத்தும் உணரவைத்தேன் உனக்கு ,
அதனால் செய்தாய் நிராகரிப்பு !
வெட்டிவேரு போல என் பாசம்
வெட்டவெட்ட தழைக்கும் என் நேசம்
நீயின்றி போனாலும் போகாது காதல்
மூச்சின்றி போகும்வரை நீ எந்தன் உயிர்
அதனால் செய்தாய் நிராகரிப்பு !
நிராகரிப்பு உந்தன் வேலை
நினைப்பது எந்தன் கடமை
உனக்கு உரிமை உண்டு போ நிராகரித்து
நான் மட்டும் உன் நிராகரிப்பை
நிராகரிக்கின்றேன் நினைப்பதற்காய்!

சிவரமணி கவிகவிச்சுடர்




04-மாற்றங்களின் வெற்றி

முகத்தில் மலரும் புன்னகை 
நட்பை வென்று தரும்
புதிய நட்புகள் வாழ்வில் 
மாற்றங்களை கொண்டு வரும்
நிலத்தில் விழும் சிறு விதை
மரமாகி விருட்சம் பெறும்

அவ்விருட்சம் தரும் விதைகள்
பெரும் காடாகத் தோற்றம் பெறும்
மூங்கிலை வருடிச்செல்லும் பூங்காற்று 
ஸ்வரங்களை பிரசுவிக்கும் 

பல ஸ்வரங்கள் ஒன்றாக சேர்ந்து 
இனிய பாடலை உருவாக்கும்
நாம் எடுத்து வைக்கும் முதலடி தான் 
ஒரு பயணத்தின் ஆரம்பம் 
பல பயனங்களில் நாம் கற்றுக் கொள்வது
வாழ்க்கை பாடங்கள் ஆகும்
ஒரு சிறு தட்டிக்கொடுப்பு 

முயற்சியை உருவாக்கும் 
பல முயற்சிகள் நம்மிடம் 
பல வெற்றிகளுக்கு வழிகோலும்
நம்மிடம் எழும் ஒரு சின்ன சிரிப்பு
மற்றவரை தொற்றிக் கொள்ளும்

அதுவே நம்மை சுற்றி உள்ளவரிடம் 
மகிழ்ச்சியை உருவாக்கும்
ஒருவரிடம் நாம் காட்டும் கருணை 
அவருக்கு ஆறுதலை பெற்று தரும் 
அந்த ஆறுதலே அவரை வாட்டும் 
சோகத்தையும் விரட்டியடிக்கும்

நம்மில் எழும் சின்ன நம்பிக்கையே 
நாளைய வாழ்வை நிர்ணயிக்கும்
நாம் துணிவுடன் செய்யும் சின்ன மாற்றம் 
முழு உலகத்தையே மாற்றிவிடும்
-

 மீரா குகன் ஜேர்மனி



05 மண்ணை நேசிப்போம்
____________________________
(பா வகை-நேரிசை வெண்பா)
செங்கமலம் என்பது சேறின் மறுவடிவே
தங்கமலர் ஆயினும் தானேதான்-பொங்கிடும்
நித்திலத்தில் நெய்யடிசில் நெற்மணிபோல் யாவுளவும்
சத்திய மாற்றமே மண்.
மாங்காய் சுவையொன்று மாதுளைசு வையொன்று
தேங்காய் சுவையொன்று தேனுக்கும்-பாங்காய்
படைத்ததுயார் நாம்வாழும் பாரின்மண் தானே
கிடைக்குமோ கிட்டுமோ வேறு.
பொன்ணெண்ணை மற்ற பொருள்யாவும் ஆக்கிடலாம்
பொன்நிகர்மண் செய்யவேறு போக்கில்லை-மன்னவனே
ஆனாலும் மாஞானி ஆனாலும் மண்மீதே
போனாலும் போற்றுவோம்நம் (ப)மண் .
பச்சைமண் ணாய்நாம் பவனிசென் றாலும்பாழ்
இச்சை மிகக்கொண்டு இச்சகத்தில்-கொச்சைஇல்
வாழ்க்கை குறைவின்றி வாழ்ந்தாலும் தாய்மண்ணை
தாழச்செய் யோம்தம் பினி.
மரம்போன்று வாழாமல் மண்ணில் மரம்செய்
வரம்செய்வோம் மாசில் வளியை-வருகின்ற 
சந்ததிக்கு விட்டுவைத்து சந்தமுள்ள பாநெய்வோம்
மந்தவாழ்வை சற்றுமாற்றி நன்று.
நஞ்சாய்நாம் செய்வோமா நம்மண்ணை தாய்க்கருவில்
பிஞ்சாய் வருவோம் பிறந்துநம்-நெஞ்சே
பகையாமல் வாழ்வது பேராகும் ஊர்வாழ்
வகைசெய்வோம் தாய்மண்ணை காத்து.

-பாவலர் ஆதித்யா.





No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.