புதியவை

விருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்  “இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்காங்க. ஏதோ வந்தமா பாத்தமா என்று போய்க்கிட்டே இருக்கச் சொல்லுங்க. இங்க டேரா போடுற வேலையெல்லாம் வேண்டாம்.”
  இன்று பெரும்பாலான வீடுகளில் இத்தகைய உரையாடல்களைப் பலரும் கேட்டிருக்கலாம். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? இறைவன் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும்.
  அது மட்டுமன்று விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும், எப்படி வரவேற்க வேண்டும் என்றெல்லாம் கூட அண்ணலார் கற்றுத் தந்துள்ளார்கள். நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் முதலில் அவருக்கு முகமன் கூறி வரவேற்று நலம் விசாரிக்க வேண்டும்.
  குர்ஆன் கூறுகிறது : “இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா? அவர்கள் அவரிடம் வந்த போது ‘உம்மீது சாந்தி நிலவட்டும்’ என்று அவர்கள் கூறினார்கள். அவரும் ‘உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும்’ என்றார்.” (51:24-25)
  வந்திருக்கும் விருந்தினரின் தேவைகளை அறிந்து கொண்டு அவருக்கு அதைச் செய்து கொடுக்க வேண்டும். நாம் சமைக்கும் உணவு அவருக்கு ஒத்துக் கொள்ளுமா என்று முதலில் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வது நல்லது. நீங்கள் பாட்டுக்கு கோழி பிரியாணி, கோழி வறுவல், சேமியா பாயசம் என்று சமைக்க, வந்திருக்கும் விருந்தாளியோ, “அடடா, நான் சிக்கன் சாப்பிடறதே இல்லையே!” என்று சொல்லிவிட்டால் உங்களுக்கும் சிரமம். அவருக்கும் தர்ம சங்கடம். ஆகவே முதலிலேயே கேட்டு விடுவது நல்லது. விருந்தாளி தங்குவதற்கும் போதுமான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
  சில வீடுகளில் விருந்தினர் வந்துவிட்டால் அவ்வளவுதான். ஒரே பேச்சுக் கச்சேரிதான். பயணம் செய்து களைத்துப்போய் வந்திருக்கும் விருந்தாளியை ஓய்வு கூட எடுக்க விடாமல் அவர் கூடவே அமர்ந்து தொந்தரவு செய்வது சரியன்று. இரவில் வெகு நேரம் கண் விழித்து அவருடைய தூக்கத்தையும் கெடுத்து, உங்களுடைய உடல் நலத்தையும் பாழாக்கிக் கொள்ளக் கூடாது.
  விருந்தினருக்காக செலவு செய்வதை பாரமாக நினைக்கத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கும் அவருடைய உணவு என்றைக்கு எங்கே என்று இறைவன் ஏற்கனவே எழுதி விட்டான். ஆகவே நம் வீட்டுக்கு விருந்தாளி ஒருவர் வருகிறார் என்றால், நம்முடைய உணவை அவர் உண்ண வரவில்லை. அவருக்கு இறைவன் விதித்துள்ள உணவை தான் உண்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  உண்மையில் வீட்டுக்கு விருந்தினர் வருவது ஒரு நற்பேறாகும். அவருடைய உணவை இறைவன் நம் மூலமாக அளிக்கிறான் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. அதனால் இறையருளும், பரக்கத் என்று சொல்லப்படுகின்ற அருள்வளமும் நம் வீட்டில் பொழியும் என்பதை நாம் கவனத்தில் கொண்டால், எந்த ஒரு விருந்தாளியின் வருகையும் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தாது.
  உங்களைப் பார்ப்பதற்காக உங்கள் வீடு தேடி வந்திருப்பவரை நீங்களே முன் நின்று உபசரிக்க வேண்டும். அதுதான் மரியாதையாகும். குடும்பத்தின் இதர உறுப்பினர்களிடமோ, பணியாளர்களிடமோ அவரைக் கவனிக்கச் சொல்வது மரியாதையன்று. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் விருந்தினரைத் தாமே உபசரிப்பார்கள்.
  இமாம் ஷாபி அவர்கள் இமாம் மாலிக்கின் வீட்டிற்கு விருந்தினராக சென்றார்கள். அப்போது அவருக்கான அனைத்து பணிவிடைகளையும் இமாம் மாலிக் அவர்களே செய்தார்கள். இரவில் மிகுந்த கண்ணியத்துடன் ஓர் அறையில் படுக்க வைத்தார்கள்.
  அதிகாலையில் வைகறைத் தொழுகை நேரத்தில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு இமாம் ஷாபி கண் விழித்தார்கள். “அப்போது இறைவனுடைய அருள் உங்கள் மீது நிலவட்டுமாக. எழுங்கள், தொழுகைக்கு நேரமாகி விட்டது” என்று குரல் கேட்டது. இமாம் ஷாபி அவர்கள் கதவைத் திறந்த போது அங்கே இமாம் மாலிக் கையில் தண்ணீருடன் நின்றிருந்தார்கள். இதைக் கண்ட இமாம் ஷாபி அவர்களுக்கு சற்று வெட்கம் ஏற்பட்டது. உடனே இமாம் மாலிக் அவர்கள், “சகோதரரே! ஒன்றும் நினைத்துவிடாதீர்கள். விருந்தாளிக்குப் பணிவிடை செய்வது செயல்களிலேயே மிகச் சிறந்த ஒன்றாகும்” என்று அன்புடன் கூறினார்கள்.
  முதலில் நாம் கையை அலம்பிக் கொண்டு உணவு விரிப்புக்குச் செல்ல வேண்டும். பிறகு விருந்தாளியை வரவேற்று கை அலம்பச் செய்ய வேண்டும். அதே போல் சாப்பிட்டு முடித்த பிறகு விருந்தாளியை முதலில் கை கழுவச் சொல்ல வேண்டும். பிறகுதான் நாம் கை கழுவ வேண்டும். இதுதான் நபிவழியாகும். விருந்தாளி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நாம் கை கழுவி விட்டால் ஒரு வேளை அது விருந்தாளிக்கு சங்கடத்தைத் தரலாம். இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று அவர் விரும்பினாலும் கூட நாம் கை கழுவி விட்டால் அவரும் உண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டி வரும் அல்லவா? ஆகவே எப்போதும் விருந்தாளி கை கழுவும் வரை நாம் கை கழுவாமல் இருப்பது விருந்தாளிக்கு அளிக்கும் கண்ணியமாகும். விருந்தாளியை உபசரிப்பது தொடர்பாக நபிமொழித் தொகுப்பு நூல்களில் ஓர் அருமையான நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
  ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இறைத்தூதர் அவர்களே, நான் பசியாக இருக்கிறேன்” என்றார் இதைக்கேட்ட இறைத்தூதர் அவர்கள் தம் குடும்பத்தாரிடம் “ஏதேனும் உணவு இருக்கிறதா? என்று கேட்டார். ”இறைத்தூதர் அவர்களே ! நம் வீட்டில் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லையே !” என்று பதில் வந்தது. பிறகு நபியவர்கள் தம் தோழர்களின் பக்கம் திரும்பி, “இன்று இரவு இந்த விருந்தாளிக்கு உணவளிக்கும் பொறுப்பை யார் ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்று கேட்டார். அபூதல்ஹா எனும் தோழர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
  பிறகு அந்தத் தோழர் விருந்தாளியை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அண்ணல் நபிகளார் அனுப்பி வைத்திருக்கும் அந்த விருந்தாளியை உபசரிக்க ஏதேனும் உணவு இருக்கிறதா என்று தம் மனைவியிடம் கேட்டார். அவருடைய மனைவி குழந்தைகளுக்குரிய உணவு மட்டுமே இருக்கிறது என்றார். அதற்கு அபூதல்ஹா, “குழந்தைகளை எப்படியாவது தூங்க வைத்துவிடு. பின்னர் உணவைக் கொண்டு வந்து வைக்கும் போது விளக்கை சரிசெய்வது போல் விளக்கு திரியை அணைத்துவிடு. நீயும் சாப்பாட்டில் பங்குகொள்வது போல் அங்கேயே அமர்ந்து கொள். நாம் இருவரும் சாப்பிடுவது போல் பாவனை செய்யலாம். நாமும் சாப்பிடுவதாக விருந்தினர் எண்ணிக் கொள்வார்” என்றார். அவ்வாறே விருந்தினருக்கு உணவளித்துவிட்டு அன்று இரவு அந்தத் தோழரின் குடும்பத்தினர் பசியுடன் இருந்து விட்டனர். அதிகாலை தொழுகைக்காகச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோழரை அழைத்து, “நீங்கள் இருவரும் இரவில் செய்த செயலினால் இறைவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறான்” என்று கூறினார்கள்.
   சில சமயம் நாம் மற்றவர்கள் வீட்டிற்கு விருந்தாளியாகப் போயிருக்கும்போது நம்மை அவர்கள் சரியாக உபசரித்திருக்க மாட்டார்கள். அதற்குப் பழிவாங்குவது போல அவர்கள் நம் வீட்டுக்கு வரும்போது உபசரிக்காமல் அலட்சியப்படுத்துவதை இஸ்லாம் கண்டிக்கிறது. அதுபோல் செய்யலாகாது என்று அறிவுறுத்துகிறது.
  ஒருமுறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் ஒருவரிடம் சென்ற போது எனக்கு அவர் விருந்தளித்து உபசரிக்கவில்லை. பின்னர் அவர் ஒருநாள் என்னிடம் வந்த போது அவருக்குப் பதிலடி தரும் வகையில் அவருக்கு உபசரிக்காமல் இருந்து விடலாமா?” என்று கேட்டார். அதற்கு அண்ணலார், “இல்லை ! நீங்கள் எந்நிலையிலும் அவருக்கு விருந்து உபசரிப்பு செய்தே ஆகவேண்டும்” என்று கட்டளை இட்டார்கள். நமக்கு விருந்தளித்தவருக்குப் பின்வருமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அண்ணலார் கற்றுத் தந்துள்ளார்கள்.
  “இறைவா ! நீ அவர்களுக்கு அளித்துள்ள உணவில் அருள் வளத்தை ஏற்படுத்துவாயாக. இன்னும் அவர்களை மன்னிப்பாயாக. இன்னும் அவர்கள் மீது கருணை புரிவாயாக !”
  விருந்தோம்பல் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் சிறந்த பண்பாடுகளில் ஒன்றாகும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.