புதியவை

செப்டம்பர் மாதம் நடைபெற்ற கவிதைப்போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளும் கவிஞர்களும்

 சர்வதேச  மட்டத்தில்  நடைபெற்ற கவிதைப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்று கவியருவி பட்டத்தை  பெ ற்றுக்  கொள்கின்றார்

” அதிரை கவியன்பன்” கலாம், அபுதாபி

 01-அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக

ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே
அச்சம் இறையுடன் கொண்டோரே
இச்சை துறந்திடும் பண்பீரே
பச்சைக் குழந்தையாய் ஆனீரே!

மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில்
அஹ்மத் நபிகளும் காண்பித்த
இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில்
இஹ்சான் உணர்வுடன் சென்றீரே!

கண்ணீர் வடித்ததால் பாவங்கள்
தண்ணீர் கழுவிய தோற்றத்தில்
எண்ணம் முழுவதும் உள்ளத்தில்
வெண்மை மொழுகிடச் செய்தீரே!

வண்ணம், இனங்களும் வேறாகி
வெண்மை உடுத்திய தோற்றத்தில்
எண்ணம் , நினைவுகள் ஒன்றாகி
கண்ணில் நிறுத்திய கஃபாவில்

சுற்றி வருவதும் குர்பானி(யால்
பற்றை அறுப்பதும் செய்தீரே
கற்றுத் தெளிந்ததும் ஈமானில்
சற்றும் விலகிடாச் சான்றோராய்!

கோபம் குறைகளை மன்னித்து
பாபச் சுமைகளை நிந்தித்து
தீபச் சுடரெனத் தீன்ஏந்தி
சாபம் களைந்திடச் செய்தீரே!

பல்லா யிரமெனப் பாரோரும்
கல்லால் எறிந்ததேன் ஷைத்தானை
உல்லா சமாகவே இல்லாமல்
அல்லாஹ் விதித்தநல் லாணைக்கே!

வற்றாக் கிணறென ஜம்ஜம்நீர்
முற்றும் குடித்தநல் ஹாஜீரே!
இற்றைப் பொழுதினில் இன்பம்தான்
சுற்றம் சுகம்பெறத் தந்தீரே!

மங்காச் சுடரென மக்காவில்
பொங்கும் அருளொளி ஈமானை
எங்கள் இடத்தினில் ஏற்றீரே
தங்க மனத்துடன் வாரீரே!
சர்வதேச  மட்டத்தில்  நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாவது  இடத்தைப் பெற்று கவித்தீபம் பட்டத்தை பெ ற்றுக்  கொள்கின்றார் \

கவிஞர் ஜவஹர்லால்

02 --நெஞ்சக்கனல்
நெஞ்சுக்குள் அக்கினிக்குஞ் சொன்றிருந்தென்
நினைப்புக்குள் சூடாகித் தகிக்கிற்து-அது
பஞ்சுக்குள் பொறியைப்போல் பரவியேஎன்
பாட்டுக்குள் தீயாகிச் சுடுகிறது

கற்பனையில் விண்ணேறிக் கதிரவனாய்
மாறியிந்தக் காசினியைப் பார்க்கிறது
சொற்கூட்டில் நெருப்பாகிச் சுற்றியுள்ள
தீமைகளைச் சூழ்ந்தெரிக்க முயல்கிறது

காற்றினிலே ஏறியந்த அண்டமெலாம்
அளந்தறியக் கணந்தோறும் அலைகிறது-புயற்
காற்றையுமே தென்றலாக்கிக் காட்டுதற்கு
முடியுமெனக் கட்டியமே உரைக்கிறது

சொல்லினிலே ஏறியொரு சுகராக
மிசைக்குங்கால் சொர்க்கமெனத் தெரிகிறது-அதுவே
வில்லினிலே பாய்ந்திடுமோர் அம்பாகித்
தாக்குங்கால் வேதனைகள் தருகிறது

பெண்மைகளைப் பெண்மைகளே சுடுகின்ற
வேதனையில் அக்கனலே எரிகிறது-இந்தப்
பெண்மைகளைச் சீர்குலைக்கும் ஆண்மைகளைக்
காணுங்கால் பெருஞ்சீற்றம் விரிகிறது

உள்ளுக்குள் கனலில்லா ஒருகவிஞன்
இல்லையெனும் உண்மையின்று தெரிகிறது-அந்த
உள்ளத்துக் கவிதைவெறி நன்மைக்கே
இல்லையெனில் உள்ளமெலாம் எரிகிறது

கவிதைக்குள் கனலாகி நிற்குமொரு
சொற்கூட்டே களிப்பள்ளித் தருகிறது-என்றும்
கவிஞர்தம் நெஞ்சுக்குள் கனலாகும்
கவிதையினால் கருத்தெல்லாம் இனிக்கிறது

கவிதைகளே நெருப்பாகித் தீமைகளைச்
சுட்டெரிக்கும் காலமின்று தெரிகிறது-அந்தக்
கவிதைகளைச் சூடாக்கும் கனல்வாழ
வேண்டுமெனக் கவிநெஞ்சம் விழைகிறது


சர்வதேச  மட்டத்தில்  நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூன்றாவது   இடத்தைப் பெற்று கவின்கலை   பட்டத் தை  பெ ற்றுக்  கொள்கின்றார்

   கவிதாயினி -சரஸ்வதிராசேந்திரன்

03 - --காந்திபூமியிலே

தீய மனம் கொண்டவர்களை அண்டவிடாதே ---- அந்த
திசைப் பக்கம் என்றும் நீ சென்றுவிடாதே
மாய வலை லஞ்சத்தில் ஒரு நாளும் வீழ்ந்து விடாதே ---- நீ
மனம் போன போக்கிலே என்றும் நடந்து விடாதே

வன் முறையை நீ என்றும் கையில் எடுக்காதே ---காந்தி
வழி முறை அகிம்சையை மறந்து விடாதே
அன்றென்றும் நீ செய்யும் நல்ல செய்கைகளே --உன்னை
அடையாளம் காட்டி என்றும்வாழவைக்குமே

எதிர்த்து வரும் பகைவர்களிடம் அன்பு காட்டிடு -- உன்னை
ஏளனம் செய்பவர்களை விலகி நடந்திடு
உண்மை உழைப்பாலே உலகு வயப்படும் -- நீ
உணர்ந்து நடந்தாலே உண்மை புலப்படும்

அன்பு கருணை நேர்மை உண்மையுடன் நடந்திட --காந்தி
அவதரித்த பூமியிலே உறுதி பூணுவோமே 
பண்புடனே உலகுயர பாடு படுவோமே ----- நம்
பாரதத்தை வல்லரசாக மாற்றிடுவோமே

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.